மறுவாழ்வு 1

மேல்பட்டாம்பாக்கம், தென்பெண்ணயாற்றங் கரையில் ஓர் அழகிய கிராமம். தென்னாற்காடு மாவட்டத்தில், கடலூர் பண்ருட்டி சாலையில், நெல்லிக்குப்பம் அருகிலுள்ள அந்த கிராமத்தில், நான்கே தெருக்கள். அதில் கடைசி, பெருமாள் கோவில் தெருவில், ஒரே மாடி வீடு, கோதண்டராம பிள்ளை வீடு. அவர் பாரியாள் தருமாம்பாள் அவர்களின் ஒரே வாரிசு, புருஷோத்து என்ற புருஷோத்துமன். பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்தில், பனைப்பாக்கம் என்னும் குக்கிராமத்திலிருந்து, அவர்கள் தூரத்து உறவில், பெண் எடுத்து, மருமகளாய் வந்தவள் மரகதம். கோதண்டராம பிள்ளை, ஆற்றுப் படுகையை ஒட்டி, ஓர் ஐந்து ஏக்கர் நிலம். வீட்டின் பின் ஒரு தென்னந் தோப்பு, நான்கு கறவை மாடுகள் என்ற விவசாயக் குடும்பம். வாக்கப்பட்ட மரகத்திற்கு, அந்த வீட்டில் வசதிக்கு ஒன்றும் குறைவில்லை, முக்கியமானதைத் தவிர. விடியற்காலை மணி நாலு. பால்கார மாரியப்பன் கன்னுவிட (பால் கறக்க) வந்து விடுவார். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும், மண்ணாங்கட்டி, ஏதோ கல்யாணம் என்று ஊருக்குப் போனதினால், மரகதம்தான் எழுந்து போகவேண்டும். மார்கழி மாத குளிர். போர்வை போர்த்தி, இன்னம் ஒரு மணி...