அந்தரங்கம் 14

வீட்டுக்கு வந்த கதிர், சாப்பிட்டுவிட்டு டிராக்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போனான். ஈவினிங்க் களைப்போடு திரும்ப வந்தபோது அம்மா கோபமாக இருந்தாள்.
"ஏண்டா போனையே எடுக்கல. நிஷா பாவம் வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்துட்டு, போன் பண்ணியும் நீ எடுக்கலைன்னு நடந்தே வந்திருக்கா..." என்றாள் லக்ஷ்மி.
"ஊர்ல அவளுக்கு எல்லா இடமும்
தெரியுறவரைக்கும் நீ கொஞ்சம் பார்த்துக்கக்கூடாதா... ஐயோ அண்ணன் கேட்டா நான் என்ன
சொல்லுவேன்"
"ஏம்மா நான்தான் வேலையா இருக்கும்போது போனை வண்டியிலேயே
வச்சிருப்பேன்னு உனக்கு தெரியாதா"
முகம் கழுவிவிட்டு வந்த நிஷாவுக்கு, கதிரின்
அலட்சியம் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. 'கண்டவன் கூட படுத்தவதானே என்கிற எண்ணம்
இருக்கும். அவன் இந்தளவுக்கு மரியாதையோடு நடந்துக்கறதே பெரிய விஷயம்.'
அடுத்தடுத்த சில நாட்களில் - நிஷா
தன்னால் முடிந்த அளவுக்கு, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்
வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினாள். ஸ்கூல் முடிந்து வந்த பிறகு, ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். TNPSC, UPSC, RRB என்ற வித விதமான தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்று அங்குள்ள
மாணவ மாணவிகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள்.
அவரவர்களின் படிப்பை கேட்டறிந்து, அவர்கள் என்னென்ன
வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுத்தாள்.
அதில் ஒரு மாணவன், "கதிர் அண்ணா இந்த ஊர்ல சந்தோஷமாத்தானே
இருக்கார். நான் அவரை மாதிரி இருந்துட்டுப் போறேனே எதுக்கு
வெளியூர்ல போய் வேலை பார்க்கணும்..." என்க, அவளுக்கு கதிரை
நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வாரத்தில், அவள் அந்த ஊரில் அனைவருக்கும்
தெரிந்தவள் ஆனாள்.
அடுத்து நிஷாவோடு பைக்கில் வரும்போதெல்லாம் அவன் ஸ்ப்ளெண்டரை
சைக்கிள் போல் ஓட்டவேண்டியிருந்தது. வரும் வழியெல்லாம்,
"டீச்சர் நல்லாயிருக்கீங்களா"
"டீச்சரம்மா நீங்க நல்லா சொல்லிக்கொடுக்குறீங்களாமே"
"குட் ஈவினிங்க் டீச்சர்!"
"என்னம்மா நிஷா ஊர்ல உங்கப்பன் நல்லாயிருக்கானா"
"இவ்ளோ நாளா எங்கம்மா இருந்த. இப்போதான் புள்ளைங்க இங்கிலிஷ் பேச
ஆரம்பிச்சிருக்கு..."
"நீ வந்தபிறகுதான்மா என் மகனும் ஒரு வேலைல சேர்ந்துடுவான்னு நம்பிக்கை
வந்திருக்கு..."
ஒரு பெரிசு, நிஷாவிடமே போன் வாங்கி, மோகனுக்கு கால் பண்ணியது. "டேய்.. நீ இந்த ஊருக்கு நல்லது எதுவும்
செய்யலைன்னு நெனச்சேன். உன் பொண்ணு..... அத சரி செஞ்சிட்டாடா"
கதிர் கண்கள் விரிய அவளைப் பார்த்தான். இரவில், தூங்கும்போது அவனுக்குள் சில கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்ததன.
'மனிதர்களை, அவர்களது தவறுகளை மட்டும் வைத்து எடைபோடுவது சரியா தவறா?'
'மனிதர்களை, அவர்களது past-ஐ வைத்து, இவர்கள் இப்படித்தான் என்று எடைபோடுவது சரியா தவறா'
'சரியா தவறா'
'சரியா தவறா'
'சரியா தவறா'
அவன் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது "கதிர்...
கதிர்.." என்று நிஷா தயங்கித் தயங்கி கூப்பிடும்
சத்தம் கேட்டது.
"என்ன நிஷா?"
"உங்க போன் என்னாச்சு? ஆப்னு வருதாமே"
"ஆமா... கவனிக்கல"
"தீபா உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க."
போனை கொடுத்துவிட்டு, அமைதியாக போய் முற்றத்து கட்டிலில்
உட்கார்ந்து இருந்தாள். 'விரைவில் தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்கும்.
வருகிறவர்கள் எல்லாம் என்னைப்பற்றி கேள்வி கேட்பார்கள். அவர்கள் முன்னாடி அப்பா
அம்மா தலைகுனிந்து நிற்பார்கள். காவ்யா மட்டும் கர்ப்பமாக இல்லாமல்
இருந்திருந்தால் அவர் காலில் விழுந்தாவது கெஞ்சியிருக்கலாம்.'
'நான் எப்படி இருந்தவள்! எப்படி இருக்கவேண்டியவள்!
ஆனால் இப்போது??' - அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மனம்விட்டு அழவேண்டும்போல் இருந்தது.
இவன் பேசி முடித்துவிட்டு அவளிடம் போனை கொடுக்க வந்தான்.
அழுகையை மறைத்துக்கொண்டு நார்மலாகப் பேசினாள். "உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?"
அடுத்தடுத்த நாட்களில், நிஷாவை.. சோகமில்லாமல் சகஜமாக பேச,
சிரிக்கவைக்க, அக்கறை காட்டினான்.
அவளோடு நெருங்கிப் பேசினான்.
நிஷாவோ, தான் உண்டு, தன்
வேலையுண்டு என்று இருந்தாள். கதிர், தன் தங்கைக்குக் கணவனாக வரப்போகிறவன் என்பதால் அவனுடன் இருக்கும்போது கண்ணியமாக உடை உடுத்திக்கொண்டு
நடந்தாள்.
அன்று - அவள் ஸ்கூலிலிருந்து வந்து ரூமுக்குள் நுழையும்போது அவள்
ரூமுக்குள் ஒரு மூங்கில் ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. கூடவே அதில் சாய்ந்துகொள்ள புஸு புஸு என்று பில்லோஸ் வைக்கப்பட்டிருந்தன. அவளுக்கு சந்தோஷமாக
இருந்தது. கீழே போகும்போது, பட்டும் படாமலும் அவனிடம் தேங்க்ஸ் சொன்னாள்.
"இப்படித்தான் முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு தேங்க்ஸ்
சொல்லுவாங்களா?"
நிஷா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளால் போலியாகக்கூட சிரிக்க
முடியவில்லை.
"இந்த ஊர்ல எல்லார்க்கும் உன்ன பிடிச்சிருக்கு. உனக்குத்தான் உன்ன பிடிக்கல
நிஷா. ஏன்?"
நிஷா, பதில் பேச இயலாமல் தலை குனிந்து நின்றாள்.
"உன்கிட்ட இருக்குற நல்ல
குவாலிட்டிஸ் பார்த்து நான் வியந்துக்கிட்டே இருக்குறேன் நிஷா. I am impressed. I am really impressed."
நிஷாவின் மனதுக்குள், லேசாய் குளிர் காற்று வீசியது.
சிறகுகள் அசைந்தன. அவனிடம் மனம் திறந்து பேசவேண்டும்போல் இருந்தது. அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள். "கதிர், நான்
ஹேப்பியா இருக்கணும்னுதான் நினைக்குறேன். ஆனா நான் எவ்ளோ
ட்ரை பண்ணாலும்...."
அவள் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றாள்.
"ஜெயகாந்தனுடைய அக்கினிப் பிரவேசம் படிச்சிருக்கியா..?"
"ம்...படிச்சிருக்கேன்" - நிஷாவின் உதடுகள் கொஞ்சமாய் பிரிந்து,
பின் ஒட்டிக்கொண்டன. அதுவும் அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.
"அப்புறம் ஏன் இன்னும் நீ கெட்டுப்போனதையே நினைச்சி
வருத்தப்படுற?"
"ந.. நான்.. அந்தப் பொண்ணு மாதிரி... அப்பாவிப் பொண்ணு இல்லையே கதிர்.
இது தெரிஞ்சே பண்ண தப்பாச்சே."
"மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது நிஷா. ஆனா எனக்கு.. நீ அந்தப் பொண்ணு மாதிரி... அப்பாவிப் பொண்ணுதான்.
செஞ்ச தப்பை நினைச்சி வருந்தி, அதுலேர்ந்து
மீள நினைக்கிற அழகிய தமிழ் பொண்ணுதான்."
"கதிர்..."
"You have the golden heart to make others happy . So you have all the
rights to be happy. Nisha. இதுக்கும் மேல உன் இஷ்டம்."
அவன், சொல்லிவிட்டுப் போய்விட்டான். நிஷா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் மனதிலுள்ள பாரம்
எல்லாம்... கொஞ்சம் கொஞ்சமாய்.. வெயில் பட்ட பனியாய் கரைந்துகொண்டிருந்தது.
மனதுக்கு, இதமாகவும், லேசாகவும்
இருந்தது. அந்த வீடு, அந்த ஊர், எல்லாமே
மிகவும் பிடித்தது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், கிடைத்த
இந்த compliment, அவள் மனதை மயிலிறகால் வருடிச்சென்றது.
அன்றிலிருந்து, நிஷா கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் சகஜமாக
சிரித்துப் பேச ஆரம்பித்தாள். தன்னையறியாமல் அவனை admire பண்ணிக்கொண்டிருந்தாள்.
அன்று -
அத்தையே எல்லா வேலைகளையும் பாக்குறாங்களே நாமளும் ஹெல்ப் பண்ணுவோம்
என்று... கிணற்றில் தண்ணீர் இறைத்தாள் நிஷா. இரண்டு பக்கெட் எடுத்ததும் மூச்சு
வாங்கியது. முந்தானையை இழுத்து முகத்தைத் துடைத்தாள். 'ஓ
மை காட்... இது இவ்வளவு கஷ்டமான வேலைன்னு நினைக்கலையே'
இரவில் - அவள் கைக்கு மருந்து போட்டு
விட்டிருந்தாள் லக்ஷ்மி. முற்றத்தில்.. நார் கட்டிலில் அமர்ந்துகொண்டு, சிலு சிலு காற்றை ரசித்துக்கொண்டு, மருதாணி
வைத்த கையை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு இருந்தாள் நிஷா. அவளைக் கடந்துபோன
கதிர், ஒரு ஸ்டெப் பின்னால் வந்தான். அவளைப்
பார்த்தான்.
"நானேதான் ஆசைப்பட்டு தண்ணி இறைச்சேன்னு அம்மாகிட்ட
சொல்லியிருக்கலாம்ல?" என்றான். முகத்தில் கடுப்பு தெரிந்தது.
"சொல்லியிருந்தா நீங்க திட்டு வாங்கியிருக்க மாட்டீங்களே...."
"உன்ன...!" என்று அவள் தலையில் தட்ட வந்தான். நிஷா தலையை
சாய்த்துக்கொண்டு, ஒரு ஷோல்டரை மட்டும் தூக்கிக்கொண்டு, சிரித்தாள்.
மனம்விட்டுச் சிரித்தாள். பேரழகியாக இருந்தாள்.
அப்போது அவளுக்கு போன் வர, கதிர் ஓடிப்போய்
எடுத்துக்கொண்டு வந்தான். "பத்மா அத்தை.." என்று சொல்லிக்கொண்டே போனை அட்டன் பண்ணி
அவள் காதில் வைத்தான்.
"வேணாம் கதிர்... நான் அடஜஸ்ட் பண்ணிக்கறேன்..." - அவள் அவனிடமிருந்து
போனை வாங்கி காதில் வைக்க...போன் நழுவி அவள் மடியில் விழுந்தது.
கதிர், அவள் மடியில் கிடந்த போனை, எடுத்தான். இருவருக்குமே... ஒருவிதமாக.. சுகமாக இருந்தது. எடுத்ததும்,
போனை அவள் காதில் வைத்து பிடித்தான்.
"சும்மா பேசுங்க"
நிஷா, கொஞ்சம் தயக்கத்தோடு, பின் சகஜமாக அவன் முன்னால் தன் அம்மாவிடம் பேச ஆரம்பித்தாள்.
கதிர், அவள் பேசும் அழகையே ரசித்துப்
பார்த்துக்கொண்டிருந்தான். அவள் உதட்டசைவுகளை.... சிணுங்கல்களை, நக்கலை, அக்கறையை, பாசத்தை,
விதம் விதமான முக பாவனைகளை.... கண்ணிமைக்காமல் ரசித்துப்
பார்த்துக்கொண்டே இருந்தான்.
'நிஷா...நீதான் எவ்வளவு அழகு!...' என்று நினைத்து மகிழ்ந்தான். 'இந்த
நிஷாவைத்தான் நான் விரும்பினேன். இந்த அழகில்தான் நான் கிறங்கினேன். நீ எனக்காக
உன் அம்மாவை எதிர்த்துப் பேசினாயே... அந்த அக்கறையில்தான் நான் உனக்கு
அடிமையானேன். அன்று திருமண வீட்டில் என்னைக் கூட்டிக்கொண்டு போய் இவர்தான் கதிர்
இவர்தான் கதிர் என்று அறிமுகப்படுத்திய இந்த நிஷாவைத்தான் நான் பார்க்க
விரும்பினேன். என் பெயர் இவ்வளவு இனிமையானது என்பதே எனக்கு அன்றைக்குத்தானே
தெரியும்.'
'நீ கெட்டுப்போய்விட்டாய் என்று யார் சொன்னது? நீ
எப்பொழுதும் உயர்வான இடத்தில்தான் நிஷா.'
அந்த இரவு முழுக்க... அவள் முக பாவனைகள் திரும்பத் திரும்ப
கற்பனையில் வர, அதை இழக்க மனமில்லாமல்... தூங்காமல்
கிடந்தான். நடு இரவுக்குப் பிறகுதான், அவன்
அவனையுமறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான்.
நிஷா கதிர் ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது. தீபாவுக்கு சற்று ஏமாற்றம் வரும், பரவா இல்லை, நிஷா கதிரை மணந்து எளிய கிராமத்து வாழ்க்கை மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்,
ReplyDelete