வெய்யில் தாழ்ந்து கொண்டிருந்தது, காற்றடிக்கவில்லை என்ற போதிலும் வெளியில் புழுக்கம் அதிகம் இல்லை. வானம் முழு நீலமாக, மேகங்களின்றிருக்க, தூரத்தில் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
சுகன்யா, காலையிலிருந்த மனப்பதட்டம் சற்றே குறைந்து, அமைதியாக செல்வாவுக்காக நடைபாதையில் காத்துக் கொண்டிருந்தாள்.
பொதுவாக அவன்தான் இவளுக்காக காத்திருப்பது வழக்கம்.
சுகன்யா தன் கையைத் திருப்பி வாட்ச்சில் நேரத்தைப் பார்க்க, மணி ஆறாகி பத்து நிமிடங்களைத் தாண்டியிருந்தது.
சுகன்யா, தன் உடல் பளுவை, இரு கால்களிலும் மாற்றி மாற்றி தாங்கி நிற்பதனால், கணுக்காலில் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கிய வலியை உணர்ந்தாள். சாலையில் செல்லுபவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல், அவள் உடம்பை கண்களால் துளைப்பதும், அவர்கள் பார்வையில் நிறைந்திருந்த சபலமும், காத்திருப்பதில் உள்ள சிரமத்தை அவளுக்கு மெதுவாக புரிய வைத்தது.
"பாவம் செல்வா" - தனக்காக அதிகமாக அலுத்துக்கொள்ளாமல் எப்போதும் அவன் காத்திருப்பதை நினைத்து அவள் மனதில் அவனுக்காக பரிதாபப்பட்டாள்.
'எங்கே போனான் இவன்? செல்லில் அவனைக் கூப்பிடலாமா?' தன் நிற்க முடியாத இயலாமையை அவனுக்கு இனங்காட்ட விருப்பமின்றி, 'சரி ... இன்னும் ஒரு அஞ்சு நிமிடம் அவனுக்காக காத்திருந்து பார்க்கலாம்' என யோசித்துக் கொண்டே நின்றாள் சுகன்யா.
'தான் ஏன் அவனுடன் இந்த காதல் என்னும் புதிய பந்தத்தில் சிக்திக் கொண்டோம். இந்த புதிய பந்தத்தால் இன்று இவனுக்காக காத்து நிற்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இனி என் வாழ்க்கையில் நான் என் விறுப்பங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து, அடுத்தவர்களுக்காக, அவர்கள் போடும் ஆட்ட விதிகளுக்குட்பட்டுத்தான் வாழவேண்டுமா? இருவருக்குமிடையே ஏற்படும் விருப்ப முரண்பாடுகளினால், அதனால் ஏற்படும் மன அழுத்தங்களில் நான் உழலத்தான் வேண்டுமா?'
தன் சுதந்திரம் மொத்தமாக பறி போகவில்லை என்றாலும், தான் ஒரு விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதான ஒரு உணர்வு அவளை அலை கழிக்க ஆரம்பித்தது.
தன் தாய், அடுத்து தன் மாமா முதற்கொண்டு, இப்போது வேணி, செல்வா, சாவித்திரி, அந்த கிழக்கோட்டான் என ஒவ்வொருவராக தன் வாழ்க்கையில் நுழைதிறார்களே? இன்னும் எத்தனை பேரின் ஆதிக்கத்துக்கு தான் உட்ப்பட வேண்டும் என்று நினைத்தாள்.
'இது என்ன காதல், கத்திரிக்காய் என்று நான் என் நேரத்தையும், மன அமைதியையும் இழந்து கொண்டிருக்கிறேன்' தீடிரென அவளுக்கு ஆயாசம் பொங்க தன் மீதே எரிச்சல் வந்தது.
சுகன்யா செல்லில் மீண்டும் செல்வாவின் நம்பரை அழுத்திக்கொண்டிருந்த போது, அவன் சாலையை நிதானமாக கடந்து வந்து, அவளை நெருங்கி, முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் காட்டாமல் கேட்டான்.
"ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா?"
"அஞ்சு மணியிலேருந்து கால் கடுக்க நிக்கறேன்; எத்தனை தரம் போன் பண்ணேன், ஏன் போனை அட்டண்ட் பண்ணல?" உதடுகளை சுழித்துக் கொண்டாள்.
"ஒரு நாள்... ஒரு நாள் நீ எனக்காக நின்ன; நான் எத்தனை நாள் உனக்காக..." வார்த்தையை முடிக்காமல் விட்ட அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தான்.
"ம்ம்ம்ம் பழிக்கு பழி... அதானே... என்னைக்கும் நான் உன்னை வேணும்ன்னு காத்திருக்க வெச்சது இல்ல... நான் உனக்காக எவ்வளவு நாள் வேணா காத்திருக்க தயார் செல்வா. அதை மொதல்ல நல்லா புரிஞ்சுக்க. ஆனா இந்த மாதிரி ரோட் ஓரத்துல இல்ல. ரெண்டு நிமிஷம் முன்னாடி, தெருல போற ஒரு சொறி நாய், தன் காரை நிறுத்தி வர்றியாடி; ஆள் டக்கராத்தான் இருக்க; என்ன ரேட்டுன்னு கண்ணயடிச்சுக் கேட்டுது. காலைத் தூக்தி செருப்பைக் காட்டினேன். அப்பறம் ஏண்டி ஒரு மணி நேரமா இங்க நிக்கறன்னான்; ஒரு மணி நேரமா அவன் என்னை தன் கண்ணாலயே, இந்த சமூகம் சொல்லுதே, கற்பு கற்புன்னு, எனக்கு வரப்போறவனுக்காக நான் பொத்தி வெச்சிருக்கற அந்த கற்பை அவன் அழிச்சிருக்கான், இதுல உனக்கு சந்தோஷம்னா, அந்த மகிழ்ச்சியை நீ அனுபவிக்கறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல" அவள் குரலில் கசப்புடன் ஏளனமும் கலந்திருந்தது.
அவள் எரிச்சலும், கோபமுமாக பேசியதை கேட்டதும், ஒரு நிமிடம் அவனுக்குத் தான் தலைக்குப்புற தடுக்கி விழுந்தது போலிருந்தது.
'நான் ஏதோ சொல்லப் போய் அது வேறு எதுவாவோ மாறிப்போயிடுச்சே', அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான்.
"சாரி சுகன்யா; நான் சாதாரணமாத்தான் சொன்னேன். நீ நான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன். இரண்டு பேருக்குமே இன்னைக்கு மூடு சரியில்லை"
"மத்தியானம் சாப்பிடக் கூப்பிட்டேன்; அப்ப பிஸின்னு சொன்ன; இப்ப ஆபீஸ் முடிஞ்சு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு, போனை கூட எடுக்க முடியாம அப்படி என்ன பண்ணிட்டு இருந்தே?" அவள் எரிச்சல் குறையவில்லை.
"சார்ஜ் ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டிய ஃபைல்ஸ் பட்டியல் போட்டுட்டு இருந்தேன். நம்ம சப், என் கேபின்ல வந்து உட்க்கார்ந்துட்டான். அப்ப அந்த சனியன் புடிச்ச சாவித்திரியும் கூட நின்னுதிட்டு வரட்டு பந்தா பண்ணிட்டு இருந்தா. டக்குன்னு எல்லாத்தையும் போட்டுட்டு எழுந்து வரமுடியல" அவன் தன் கைகுட்டையால் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டான்.
"பரவாயில்ல... நீ என்ன வேணா சொல்லு... காலையில நான் யோசிக்கமா உங்கிட்ட பேசிட்டேன். அது என் தப்புத்தான். அதை உங்கிட்ட ஒத்துதிட்டு மூணு தரம் சாரி சொல்லிட்டேன்."
"அதில்லா சுகன்யா.."
"இப்ப ஏன் நடந்து வர்ரே உன் வண்டிக்கு என்ன ஆச்சு செல்வா?" சுகன்யா தான் இயல்பாக இருப்பதாக அவனுக்கு காட்ட முயற்சி செய்தாள்.
"சர்வீசுக்கு விட்டிருக்கிறேன். காலையில ஆபீசுக்கு பஸ்லதான் வந்தேன்" அவன் தன் கையை உதறிக்கொண்டான். "சரி போகலாமா..."
"கையில என்ன ஆச்சு உனக்கு?" உன்மையான அன்புடன் கேட்டவள், "எனக்கு பசிக்குது செல்வா” என்று அவன் வலக்கையை தன் இடக்கையில் எடுத்து கோத்துக்கொண்டு அவன் தோளுடன் தன் தோள் உரச நெருங்கி நடந்தாள்.
"ம்ம்ம் ... புழுக்கமா இல்லே" அவளுடன் நடக்க ஆரம்பித்தவன், அவள் கையிலிருந்து தன் கையை இயல்பாக விடுவிப்பது போல் எடுத்துக்கொண்டு, தன் சட்டைக் காலரை இருகைகளாலும் தூக்கிவிட்டு கொண்டு தன் மார்பில் வாயால் காற்றை ஊதினான்.
"செல்வா! மழை நின்னுப்போச்சு; ஆனா தூறல் நிக்கலங்கற மாதிரி உனக்கு என் மேல இருக்கற கோபம் இன்னும் போகல அதானே?" அவள் அவன் கண்களை ஆழமாக நோக்தினாள்.
"ச்சே... ச்சே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல" அவள் பார்வையை அவனால் அவளை நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை.
"அப்ப ஏன் என் கையை விலக்கிட்டு தள்ளி நடக்கறே?" இது வரை உறுதியாக இருந்த அவள் மனம் சற்றே இளகி, அவள் கண்கள் சட்டென கலங்கத்தொடங்கி, குரல் லேசாக தழுதழுப்புடன் வந்தது.
"ச்சே... என்ன சுகு இது, சின்ன புள்ளையாட்டம் எதுக்கெடுத்தாலும் அழறே; இன்னைக்கு நான் எது பண்ணாலும், எது பேசினாலும் அது தப்புத் தப்பாதி பிரச்சனையில போய் முடியுது”
அவள் கண் கலங்குவதைப் பார்த்தவுடன் செல்வாவுக்கு தன் நெஞ்சே கலங்குவது போல் இருந்தது. சட்டென நெருங்கி அவள் தோளில் தன் கையை போட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான்.
"இப்ப திருப்தி தானே உனக்கு... என்னை அழ வெச்சுப் பாக்கணும்ன்னு நீ நினைச்சது நடந்து போச்சுல்ல, செல்வா!", அவள் உதடுகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. தன் தோளில் அவன் கை விழுந்ததும், அவனை ஜெயித்துவிட்டதாக ஒரு உணர்வும் அவளுள் எழ , துடிக்கும் அவள் இதழ் ஒரத்தில் புன்முறுவலும் பளிச்சிட ஆரம்பித்தது.
அவன் இடுப்பை, சுகன்யா தன் இடது கையால் வளைத்துக்கொண்டாள். அவள் இடது மார்பின் பூரிப்பும், செழுமையும், அவன் விலாவில் பதியுமாறு, அவனை ஒட்டி நடந்தாள். அவர்கள் நெருங்கி நடப்பதால் உண்டான உரசலில், மெல்லிய மின்சார அலைகள் அவர்கள் உடலில் ஓடி இருவரின் தேகங்களும் கிளுகிளுப்பை உணரத் தொடங்கின.
செல்வாவின் மனம் அவனைப்பார்த்துச் சிரித்தது.
'இது என்ன வெட்கம் கெட்டத்தனமா இருக்கு; இவள் ஒரு பெண்; உடலால் என்னை விட வலுவில் குறைந்தவள். இவள் என் அருதில் இருக்திறாள் என்ற எண்ணமும்; அவள் உடல் அருகாமையும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிவிடுதிறது. இவள் கண்கள் லேசாக கலங்குவதை பார்த்தவுடன், என் உடல் வெலவெலத்து கால்களில் வலு குறைந்து போதிறது. இந்த கண்ணீரில் இவ்வளவு சக்தியா? எனக்கு மிகப்பிரியமானவர்களில் இவளும் ஒருத்தி. இந்த எண்ணம்தான் என்னை இந்த அளவுக்கு வலுவற்றவானக ஆக்கிவிடுதிறது. என் மனம் அவள் கண்ணீரைத் துடைக்கப் பரபரக்திறது. என் கை விரைந்து அவள் தோளைத் ஆதரவாக தழுவுதிறதே!'
'சை... இவகிட்ட ஒரு அடிமை போல சரியாக சிக்கிக்திட்டிருக்கேன் நான். இவளின் கை என் இடுப்பை வருடுதிறது; அவளின் மார்ச்சதை என் மேல் லேசாக உரசுகிறது; இத்தனையில், இவளை இனிமேல் நான் தொடமாட்டேன் என்று காலையில் நான் எடுத்த முடிவும், வைராக்தியமும் காற்றில் பறந்து விட்டன.'
தன் மனம் விட்டு அவன் உரக்கச் சரித்தான். தன் மனம் லேசானதைப் போல் உணர்ந்தான்.
"அப்பாடா... இப்பத்தான் உன் மூஞ்சி ஒரிஜினல் மூஞ்சா இருக்கு" அவளும் தன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
"எனக்கு இருக்கறது ஒரு மூஞ்சிதானே சுகு, அதுல ஒரிஜினல் என்ன டுப்ளீகேட் என்ன?"
"உனக்கு ஒரு மூஞ்சிதான், அதுல ஒன்னும் சந்தேகம் இல்ல; ஆனா, அதை காத்தாலேருந்து, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வெச்சிக்கிட்டு இருந்தே. ஆமா இப்ப எதுக்கு என்னைப் பாத்து இத்தனை பெரிய சிரிப்பு சிரிச்சே"
அவர்கள் ஒரு ஃபாஸ்ட் ஃபூட் கடைக்கு முன் நின்றிருந்தார்கள்.
"சொல்றேன், என்ன சாப்பிடறே" அவள் முகத்தைப் பிரியத்துடன் பார்த்தான்.
"வாழைக்கா பஜ்ஜியும் காபியும்"
"சுகு, முதல்லா இங்க பஜ்ஜி சாப்பிடு, அப்புறம் வேறெங்காவது காஃபி குடிக்கலாம்".
செல்வா, அவளுக்கு பஜ்ஜியும் தனக்கு பூரியும் வாங்கிக்கொண்டு வர இருவரும் சற்று தள்ளி சாலையோரம் இருந்த ஒரு கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள்.
"இன்னைக்கு காலைல நீ உன் கேபின்ல என்னைத் தொடாதேன்னு சொன்னியே சுகு"
"செல்வா, பொய் சொல்லாதே, திருப்பியும் எரிச்சல் மூட்டாதே! ஆபீசுக்குன்னு ஒரு டெக்கோரம் இருக்கு, அதனால அங்க என்னைத் தொடாதேன்னு சொன்னேன்"
"கேண்டீன்ல சாவித்திரியோட பொண்ணு பின்னால நான் போயிடுவேன்னு என்னை சந்தேகப்பட்டே. அப்புறம் என் கையாலத்தான் தாலிக் கட்டிக்குவேன்னு டிக்ளேர் பண்ணே."அவன் சிரித்துக்கொண்டே தொடர்ந்தான்
"ம்ம்ம்” என்ன சொல்ல வருதிறான் என்று புரியாமல் அவள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அதனால இனிமே உன் கழுத்துல தாலியை கட்டிட்டுத்தான் உன்னைத் தொடறதுன்னு, காலைலதான் நான் ஒரு தீர்மானம் எடுத்தேன்" அவன் சொல்ல சொல்ல அவள் முகத்திலிருந்த புன்னகை சிரிப்பாக மாறிக்கொண்டிருந்தது.
"அந்த முடிவுக்கு இப்ப என்ன ஆச்சு” அவள் பஜ்ஜியை வைத்து தின்றுக் கொண்டிருந்த காதிதத்தில் தன் கையை துடைத்து எறிந்து விட்டு அவனை நெருங்கி உட்க்கார்ந்து அவன் தோளில் தன் கையை போட்டுக் கொண்டாள்.
"அது கால் மணி நேரத்துக்கு முன்னே காத்துல பறந்து போச்சு, அதுக்கு காரணமும் நீதான், எல்லா பொம்பளைங்களும் ஓரே மாதிரி தான் இருக்கீங்க, கண்ணுல தண்ணியைக் காட்டி ஆம்பளைங்களை கலங்க அடிக்கறீங்க; அதுக்கு மேல இந்த மனசுக்கு வெக்கமே இல்லடி; இந்த உடம்போ, மனசோ என் பேச்சை எங்க கேக்குது. உன் கண்ணுல தண்ணியைப் பாத்தவுடனே, உன்னை தொட்டுத் தடவி உனக்கு ஆறுதல் சொல்லனும்ன்னு மனசு பேயா பறக்குது. நீ என் கையை தொட்டதும், உன்னை கட்டிக்கணும்ன்னு என் உள்ளம் துடிக்க ஆரம்பிச்சுடுத்து." அவன் அவள் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
"செல்வா, வெக்கம் கெட்டாத்தான் சுகத்தை அனுபவிக்க முடியும் போல இருக்கு. என்னைத் தொடவேண்டாம்னு நீ தான் தீர்மானம் பண்ணியிருக்கே; நான் எந்த ரெசல்யூஷனும் எடுக்கலயே. தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன்னை தொட்டுட்டேன். இனிமேலும் தொடுவேன். நீ என்னைத் தடுக்க முடியாது. உன் கிட்ட நான் சண்டையும் போடுவேன்; சரசமும் பண்ணுவேன்; நீ சொன்ன அதே மனசு தான் எனக்கும். நான் இந்தமாதிரி சாதாரண ஆசாபாசங்கள் இருக்கற பொண்ணா வெக்கம் கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன்."
சுகன்யா தன் கள்ளக் குரலில் மனம் உருகி தன் இருகைகளாலும் அவன் கழுத்தை வளைத்து அவன் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டாள்.
செல்வா இதை எதிர்ப்பார்த்தவன் போல் தன் உதடுகளை அவள் முத்தமிட இசைவாக விரித்தான்.
உதடுகளை விரித்தவன் கைகள் சும்மா இல்லாமல் அவள் இடுப்பை சுற்றி வளைத்தது; விரல்கள் அவளை வருடத் தொடங்க, முத்தமிட்டுக் கொண்டிருந்த சுகன்யாவின் இதழ்களில் அழுத்தமும் சூடும் கூட கூட, அவன் சுவாசம் நீண்டு, மூச்சு வெப்பமாக மாறியது.
சூடான அவன் மூச்சு அவள் முகத்தில் பரவ, சுகன்யாவின் விழிகள் செருதிக் கொள்ள ஆரம்பித்தன. செல்வா, இறுக்கமாக பற்றியிருந்த சுகன்யாவின் அதரங்களிலிருந்து தன் உதடுகளை விடுவித்துக் கொண்டு, தன் வாயைத் துடைத்துக்கொண்டு பின் கண்களில் விஷமம் ததும்ப மெல்லிய குரலில் பாடினான்,
"பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானேன்..."
"என்ன சார், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திருநீலகண்ட நாயனாரா வேஷம் போட்டுக்கிட்டு நான் கையைத் தொட்டா, கையை இழுத்துக்கிட்டு விலகி ஓடினீங்க; இப்ப தொண்டரடிப்பொடி ஆழ்வாரா மாறிட்டீங்க? அப்புறம் மொத்தமா சாமியார் வேஷம் போட்டுக்கிட்டு திரும்பவும் என்னை விட்டு ஓடிட மாட்டீங்களே?" அவள் அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டாள்.
"சுகும்மா, ஆழ்வார் கண்ணனுடைய அழகையும், அந்த அழகை தரிசனம் பண்றதனால கிடைக்கிற ஆனந்தம், சுவை மட்டும் தனக்குப் போதும்ன்னார். ஊர்ல காணியோ, உறவோ, எதுவும் தனக்கு வேணாம்ன்னுட்டார். நான் அவ்வளோ தூரம் ஆசையைத் துறந்தவன் இல்லை. நீ சொன்னா மாதிரி நானும் ஒரு சராசரி இளைஞனாத்தான் இருக்க விரும்பறேன். நீ இப்படியே என்னை கட்டிப்புடிச்சு கிஸ் அடுச்சுக்கிட்டே இரு; உன் உதட்டோட சுவையும் அது தர சுகமும் மட்டும் இப்போதைக்கு எனக்குப் போதும்; வீடு, நிலம், வேற உறவுகள், இந்திரலோகம் அப்படி எதுவும் எனக்கு வேணாம்ன்னு சொல்றேன்."
அவன் குரலில் காம வேட்க்கை இல்லை ஆனால் கண்களில் காதலின் ஓளி மின்னிக்கொண்டிருந்தது.
செல்வா அவர்கள் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டான்.
"ஏன் எழுந்துட்டே? இன்னும் கொஞ்ச நேரம் உக்காரலாமே" சுகன்யா அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
"உன் கூட இருக்கணும்ன்னு எனக்கு மட்டும் ஆசை இல்லயா? மணி ஏழேகால் ஆச்சு; இருட்டிப்போச்சு, இப்பவே குடிகாரனுங்க வட்டம் போட ஆரம்பிச்சுட்டானுங்க; நீ ஒழுங்கா வீடு போய் சேரணும்" சொல்லிக் கொண்டே எழுந்த செல்வா, அவளையும் எழுப்பி, தன் மார்புடன் லேசாக அணைத்து, அவள் வாயில் ஒரு முறை முத்தமிட்டு அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்தி நடக்க ஆரம்பித்தான்.
செல்வா, தன் மீது வைத்திருக்கும் ஆசையையும், அவன் குரலில் தொனித்த கனிவான அக்கறையையும் உணர்ந்த சுகன்யாவின் மனதில் மதிழ்ச்சியின் அலைகள் அடிக்கத் தொடங்கின. அவர்கள் நம்பிக்கையுடன் கையை கோத்துக்கொண்டு நடக்க நடக்க, அவர்களின் நிழல்கள் முன்னும் பின்னுமாக அவர்களை துரத்தத் தொடங்கின.
சூப்பர்! ஊடல், கூடல், காதலுக்கு வில்லி, mood மாறுதல் எல்லாமே சுவாரஷ்யம்!
ReplyDeletenandri nanba
Delete