செல்வா மனதுக்குள் புழுங்கியபடியே, கண் மூடி தலைக்கு கீழ் தன் கைகளை தலையணயாக வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான். திடீரென அவன் மனதில் மின்னலாக எழுந்த ஒரு கேள்வி அவனை ஆட்டியது. அவன் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது.
'சுகன்யா பீச்சுல தண்ணி ஓரமாவே நடந்து போனாளே? நான் பாட்டுக்கு பெரிய புடுங்கல் மாதிரி வீட்டுக்கு வந்துட்டேன். அவளும் மனசு நொந்து போய் அழுதுகிட்டே போனாளே? சுகன்யா ஒழுங்கா அவ ரூமுக்கு போய் சேர்ந்திருப்பாளா?'
அதே நேரம் மீனா, தன் ரூமில் யாருடனோ செல்லில் மிகுந்த அக்கறையுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசுவது ஏதோ முக்தியமான விஷயம் என்பது அவள் கண்கள் மேலும் கீழும் ஏறி இறங்கி மின்னியதிலும், உதடுகள் வேகமாக அசைந்ததிலும் தெரிந்தது.
"மீனா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுடி" செல்வா தன் மன உளைச்சலில், தன் தங்கை என்ன பேசுதிறாள், யாருடன் பேசுகிறாள் என்று எதையும் கவனிக்காமல் அவள் முன் நின்றான்.
"ஓகே... பை... பை... கேச் யூ லேட்டர்" அவள் செல்வாவை நிமிர்ந்து பார்த்தாள்.
"சொல்லுண்ணா, என்ன பண்ணணும்" எப்போதும் அவனை வாடா போடா என்பவள், இன்று ஆசையுடன் உறவை சொல்லி அழைத்தாள்.
"ஒண்ணும் இல்லடி மீனா, சுகன்யா காலையில என் மேல ரொம்பா கோவமா இருந்தா; அவ அப்பாவை பத்தி பேசும் போது கண்ணு கலங்கி அழுவ ஆரம்பிச்சுட்டா: சட்டுன்னு மனசு நொந்து போய், நீ ஒரு எடுப்பார் கைப்பிள்ளை, ஒரு வழ வழா கொழ கொழா, நீ என்னை தொட்டேன்ற ஒரே காரணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு உன்னை கெஞ்ச மாட்டேன், உங்கம்மா சொல்றபடி நீ எவளையாவது கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு, என்னைப் பத்தி நீ கவலைப்படாதே; நாம பிரிஞ்சிடலாம்ன்னு சொல்லிட்டு வேகமா எழுந்து தண்ணி ஓரமா நடந்து போனா. என்னமோ தெரியல நானும் அப்ப ஒரு வீம்புல அவ போகட்டும்ன்னு பேசாமா இருந்துட்டேன். இருந்த டென்ஷன்ல அவளை ஒரு தரம் கூட நில்லுன்னு சொல்லலை; இப்ப அவ ரூமுக்கு போயிட்டாளா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்; என் மேல இருக்கற கோவத்துல அவ ஏதாவது எக்குத் தப்பா பண்ணி வச்சுடப் போறான்னு பயமா இருக்குடி எனக்கு" அவன் மெல்லிய குரலில் பேசினான்.
"எக்குத்தப்பான்னா, அவ தற்கொலை பண்ணிக்குவான்னு நெனைக்கதிறியா: நிஜமாவே நீ ஒரு காமெடி பீசுடா" சுத்தி வளைக்காமல் மேட்டருக்கு நேராக வந்த மீனா உரக்கச் சிரித்தாள்.
"எல்லாம் என் நேரம்... உங்களுக்கு எல்லாம் என்னைப் பாத்தா கிண்டலாத்தான் இருக்கும்: அம்மா என்னை வடிவேலு மாதிரி பேசறேங்கறா: அப்பா என்னடான்னா என்னை மோர்குழம்புல போட்ட வெண்டைக்காய்ங்கறாரு; நீ காமெடி பீசுங்கற: அவளைப்பத்தி உனக்கு தெரியாது, சுகன்யாவுக்கு குழந்தை மாதிரி வெள்ளை மனசுடி. நல்லா தைரியமா, கோபமா பேசி சண்டை போடுவா: அடுத்த செகண்டு இப்படி பேசிட்டேனேன்னு மனசு குழைஞ்சு சட்டுன்னு அழுவா, அவ ரொம்ப பாசக்கார பொண்ணுடி" அவன் மனம் தவிக்கப் பேசினான்.
"சரி... இப்ப நான் என்ன பண்ணணும் அதைச்சொல்லு"
"இன்னைக்கு சத்தியமா அவ என்கிட்ட பேச மாட்டா. நீ உன் போன்ல பேசி, அவ எங்க இருக்கா, ரூமுக்கு போய்ட்டாளான்னு செக் பண்ணிச் சொல்லேன்." செல்வாவின் முகம் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"நீ அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிராமிஸ் பண்ணு அப்பத்தான் நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்" அவள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணடித்தாள்.
"நடக்கறதெல்லாம் உனக்கு நல்லாத் தெரியும், சும்மா வெறுப்பேத்தாதடி, சட்டுன்னு பேசு" செல்வா அவள் போனில் சுகன்யாவின் நம்பரை அழுத்தித் தந்தான்.
"ஹலோ, மிஸ் சுகன்யாவா" மீனா ஸ்பிக்கரை ஆன் செய்தாள்.
"ஆமாம் நீங்ங்க... யார்"
"நான் மீனாட்சி, உங்க செல்வாவோட தங்கை பேசறேன்" - "உங்க" என்று சொன்னதில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள்.
"சாரி... எனக்கு செல்வான்னு யாரையும் தெரியாது” பட்டென சொன்ன சுகன்யாவின் குரலில் கோபமிருந்தது.
"ப்ளீஸ் சுகன்யா... உங்களுக்கும் செல்வாவுக்கம் இடையில ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், அவன் மேல நீங்க கோபப்படலாம். அது நியாயம். ஆனா என்கிட்ட ஏன் கோபப்படறீங்க... நான் என்னை உங்ககிட்ட அறிமுகப் படுத்திக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் நான் அவன் பேரைச் சொன்னேன்" மீனா வினயமாக பேசினாள்.
"சாரி மீனாட்சி, நான் கொஞ்சம் அப்செட்ட்டா இருக்கேன்; சொல்லுங்க என்ன விஷயம்" இப்போது சுகன்யாவின் குரல் சற்று தாழ்ந்து ஓலித்தது.
"நீங்க இப்ப எங்க இருக்கீங்க, நான் உங்களை பாக்க முடியுமா?"
"நீங்க எதுக்கு தீடிர்ன்னு என்னைப் பாக்கணும்?"
"ஏன் சுகன்யா... நான் உங்களைப் பாக்கக்கூடாதா.. ஒருத்தருக்கு ஒருத்தர் உறவாகப் போறோம்?"
"இருந்த ஒரு உறவையும் நான் இப்பத்தான் வெட்டிட்டு வந்துருக்கேன். இப்ப எதுக்கு புதுசா இன்னொரு உறவு எனக்கு" சுகன்யா சலிப்புடன் பேசினாள்.
"பொதுவா உறவுன்னா அது ரெண்டு பேருக்கு நடுவுல நிலவறது; சந்தர்ப்ப சூழ்நிலைகளால ஒருத்தர் நடக்கற விஷயங்களை சரியா புரிஞ்சுக்காம, ஏதோ கோவத்துல உறவை வெட்டிட்டேன்னு சொன்னா... அந்த உறவு விட்டுப்போயிடுமா?" மீனா ஆறுதலாக பேசினாள்.
"ம்ம்ம்... எனக்கு புரியுது... இப்ப ஏன் இந்த போன் கால்ன்னு... நான் இருக்கனா? இல்ல செத்தனான்னு தெரிஞ்சுக்கவா? அதுக்குள்ள உங்க அண்ணனுக்கு பயம் வந்துடுச்சா? வாழ்க்கையில பயந்து பயந்தே சாவட்டும்: எனக்கு என்ன; நான் குண்டு கல்லாட்டாம் இருக்கேன். காதலிச்சவளை நடு ரோட்டுல கை விட்டுட்டு, அம்மா சொல்றான்னு வேற ஒருத்தி பின்னால போற தைரியசாலி பண்ற விஷயங்களை என்னாலா புரிஞ்சுக்க முடியலை; அது உண்மைதான். அதுக்காக நான் எந்த கோழைக்காவும் என் உசுரை விட்டுட மாட்டேன்னு, உன் அண்ணன் கிட்ட மறக்காம சொல்லு மீனா" சுகன்யா மீண்டும் தன் பழைய சுருதிக்கு தாவினாள்.
"சுகன்யா ப்ளீஸ், கூல் டவுன்... உங்க வருத்தம், கோபம் எனக்குப் புரியுது. செல்வாவைப்பத்தி உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும், அவனால எதையும் டக்குன்னு தீர்மானமா பேச முடியாது. அதுவும் எங்கம்மா எதிர்ல அவனால கண்டிப்பா முடியாது. இது அவனோட சின்ன குறை. இன்னைக்கு காலைல பீச்சுல உங்க ரெண்டு பேருக்கும் இடையில நடந்த எல்லாத்தையும் சொல்லி வீட்டுல அவன் ஒரு பஞ்சாயத்து வச்சான். எங்க வீட்டுல ஒரு மணி நேரமா அவனுக்கும் எங்க அம்மாவுக்கும் நடுவுல பெரிய ரகளை நடக்குது; அவன் உங்க மேல உசிரையே வச்சிக்கான்; நீங்க நினைக்திற மாதிரி என் அண்ணன் உங்களை கை விட்டுடமாட்டான்." மீனா நிதானமாகப் பேசினாள்.
"..........."
"சுகன்யா ஏன் பேச மாட்டேங்கிறீங்க?"
"மீனா இந்த காலை நீயே பண்ணியா... இல்ல வேற யாரவது சொல்லி பண்ணியா... அது எனக்குத் தெரியாதும்மா... நீயா பண்ணியிருந்தா ரொம்பத் தேங்க்ஸ்... இந்த நேரத்துக்கு உன் கால் என் மனசுக்கு ரொம்பா ஆதரவா இருக்கு... ஒரு வயசு பொண்ணோட மனசை இன்னொரு வயசு பொண்ணாலத்தான் புரிஞ்சுக்க முடியும். எனி வே... நான் சொல்ல வேண்டியதையெல்லாம், ஏற்கனவே உன் அண்ணன் கிட்ட சொல்லியாச்சு... இனிமே அதுல எந்த மாற்றமும் இல்லை. அயாம் ரியலி சாரி. என்னால உங்க வீட்டுல ரகளைன்னு கேக்கும் போது எனக்கு வெக்கமா இருக்கு... ஐ விஷ் டு பி அலோன் ஃபார் சம் டயம். பிளீஸ் மீனா ட்ரை டு அண்டர்ஸ்டேண்ட்... வீ மே டாக் சம் டயம் லேட்டர்... ஓ.கே...?" சுகன்யா முடிவாக பேசினாள்.
"ஓ.கே. சுகன்யா, பட் பிளீஸ்... நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க... எல்லாம் நல்லபடியா நடக்கும். பை.." மீனா இணைப்பைத் துண்டித்தாள்.
"மீனா தேங்க்ஸ்டி... நீ பெரிய ஆள்டி.. அவகிட்ட ரொம்ப நேக்கா பேசறடி.... ஆனா என்னடி மீனா, அவ என் மேல இவ்வளவு கோவமா இருக்கா?" கேட்ட செல்வாவின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது.
"போடா மொக்கை... அவகிட்ட நீ நடந்துகிட்ட லட்சணத்துக்கு... நீ பண்ணியிருக்கற வேலைக்கு... அதுக்கு அப்புறமாவும் அம்மா சொல்றான்னு இன்னொருத்தியை பொண்ணு பாக்க போறியே? சுகன்யா உண்மையிலேயே நல்ல பொண்ணா இருக்கணும், அதான் இன்னும் உன்னை உயிரோட விட்டு வச்சிருக்கா: நானா இருந்தா இந்த நேரத்துக்கு உன் மண்டையை ஓடைச்சிருப்பேன்" மீனா தன் கண்களை நெறித்து அவனை முறைத்துப் பார்த்தாள்.
"செல்வா, நீ ஏண்டா அம்மாகிட்ட இப்படி பயந்து சாகற? உடனே இது பயம் இல்லடி மீனா, பாசம்ன்னு என் காதுல பூ சுத்தாதே? அம்மா புள்ளை பாசத்துக்கும் ஒரு அளவு இருக்கு; இது உன் வாழ்க்கைப் பிரச்சனைடா; நீ கை நிறைய சம்பாதிக்கற? சுகன்யாவும் படிச்ச பொண்ணு, உன்னை மாதிரி சம்பாதிக்கறவ, எல்லாத்துக்கும் மேல உனக்கு பொருத்தமான அழகான பொண்ணு, உன்னை உயிரா நேசிக்கிறாங்கற, இதுக்கு மேல வேற என்னடா வேணும்? அவளை இழுத்துகிட்டு ஓடுவியா, அவ வெறுத்துப் போய் உன்னை விட்டுட்டு ஓடற அளவுக்கு இப்படி இருக்குற?" மீனா அவன் கையை நெகிழ்ச்சியுடன் பிடித்துக்கொண்டாள்.
*******************************
பீச்சிலிருந்து கோபத்துடன் கிளம்பிய சுகன்யா, கண்ணில் பட்ட முதல் பஸ்ஸில் அது எங்கு போதிறது என்று கூட கவனிக்காமல் ஏறிக்கொண்டாள். அவள் ஏறிய பஸ், ஐந்து நிமிடத்துக்கு பின் அவள் அலுவலகம் இருக்கும் சாலையில் திரும்ப, 'ரூமுக்கு போய் இப்ப என்னப் பண்றது? ஊருக்குப் போன வேணியும் நாளைக்குத்தான் வரப்போறா: தனியா இருந்தா திரும்ப திரும்ப அந்த கடங்காரன் செல்வா ஞாபகம் தான் வரும். கோபலன் சார் இன்னைக்கு கண்டிப்பா அலுவலகத்துக்கு வந்திருப்பார். தள்ளி போட்டுக்கொண்டிருக்கும் சில வேலைகளை இன்னைக்கு ஆஃபீசுக்கு சென்று முடித்தால் என்ன' என்று அவளுக்குத் தோன்றியது. கோபாலன் அந்த கோப்புளை அவளிடம் சீக்கிரம் முடிக்குமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த ஸ்டாப்பிங்கிள் சட்டென இறங்கிக் கொண்டாள். விடுவிடுவென ஆபீசுக்குள் நுழைந்தாள். அன்று லீவான போதிலும், அவள் செக்க்ஷனிலும், ட்ரெய்னிங்க் பிரிவிலும் மும்மரமாக வேலை நடந்து கொண்டிருந்தது. அவள் தன் சீட்டில் உட்க்கார்ந்து வேலையை மட மட வென செய்ய ஆரம்பித்தாள். மனம் சிறிதே லேசான மாதிரி இருந்தது.
பாத்ரூம் போய் திரும்பி வந்தவள் தன் செல் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டா வெறுப்பாக எடுத்துப்பார்த்தாள். அது செல்வாவின் நம்பர்.
'தங்கச்சியை வுட்டு போன் பண்ணச் சொன்னான். நான் ஒரு மரியாதைக்கு அவகிட்ட பேசினதும், இவனுக்கு தைரியம் வந்திடுச்சா. இப்ப இவனே போன் பண்ணி என் உயிரை எடுக்க வந்துட்டான். இவனுக்கு குடுக்க பாக்கி என்ன இருக்கு எங்கிட்ட: என் உயிரைத்தான் குடுக்கணும்?' அவள் மனம் எரிச்சலடைந்தது.
'ச்சே ச்சே.. நான் பண்ண பெரிய தப்பு இவனை காதலிச்சதுதான். எத்தனை வாட்டி நம்ம அம்மா சொன்னா, அடியே சுகன்யா, வாழ்க்கையில எதை வேணா செய், ஆனா எவனையும் காதலிக்கறதை மட்டும் பண்ணிடாதேன்னு? அவ பேச்சை கேட்டனா நான்? என் புத்தியை செருப்பால அடிச்சுக்கனும்; போன் அடிக்கட்டும்; அடிச்சு ஓயட்டும் நான் எடுக்கப்போறதில்லை, இவன் சகவாசமே எனக்கு வேணாம்" வீம்புடன் இருந்தவள், நிமிர்ந்து பார்த்தாள். மணி மூணாகியிருந்தது. பசி அடிவயிற்றைக் கிள்ளியது. காலையில் சாப்பிடாமல் கூட செல்வாவை பார்க்க ஆசையுடன் பீச்சுக்கு ஓடியது நினைவுக்கு வந்தது.
'சாப்பிட்டியாடின்னு ஒரு வார்த்தை கேட்டானா; அவன் எதுக்கு என்ன கேக்கணும்? இது என்ன திரும்ப திரும்ப என் மனசு அவனையே நினைக்குது?'
"என்னம்மா சுகன்யா, சாவித்திரி உன்னை ஆபீசுக்கு வரச்சொல்லிட்டு, அவ மாங்காடு, திருவேற்காடுன்னு கிளம்பிட்டாளா?" கேட்டவாறே கோபாலன் உள்ளே நழைந்தார்.
அவர் சாவித்திரிக்கு மேல், அவர்களின் டிவிஷனல் சீஃப்க்கு கீழ் பணிபுரிபவர். நல்ல மனிதர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் மனிதர். யாரிடமும் அதிகமாக பட்டுக்கொள்ள மாட்டார். ஒரு வருடத்தில் வேலையிலிருந்து ஓய்வு பெறப்போகிறவர். அதற்கு முன் அவருக்கு இந்த ஆபிசிலேயே தலைமை பொறுப்பு கிடைக்காலம் என பேசிக் கொள்கிறார்கள்.
சுகன்யா மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம், தன் வேலைக்கு மேல், அடுத்தவர்கள் வேலையையும், எப்பொழுது கொடுத்தாலும் முகம் சுளிக்காமல், முணுமுணுக்காமல் செய்பவள் அவள் என அவருக்குத் தெரியும்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை சார், இன்னைக்கு நானாத்தான் வந்தேன்." அவள் மரியாதையுடன் எழுந்து நின்றாள்.
"உக்காரும்மா, எப்படி போகுது வேலையெல்லாம், செக்க்ஷனில் பிரச்சனை எதுவும் இல்லையே?" அவர் உண்மையான பரிவுடன் கேட்டார்.
"சார்... உங்ககிட்ட ஒரு பர்சனல் விஷயம் பேசணும்," அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள், அவர்கள் இருவரைத் தவிர அப்போது அங்கு யாரும் இல்லை.
"சொல்லும்மா" கோபலன் அவள் எதிரில் உட்க்கார்ந்தார்.
"எனக்கு இந்த செக்க்ஷனில் இருந்து ட்ரான்ஸ்ஃபர் வேணும் சார்" அவள் தலை குனிந்திருந்தது.
"என்னாச்சு... சாவித்திரி ஏதாவது டென்ஷன் குடுக்கறாளா?" அவர் சுகன்யாவின் முகத்தை உற்று நோக்கினார்.
"தினசரி வேலைகளில் எதுவும் ப்ராப்ளம் இல்லை சார்... ஆனா சில தனிப்பட்ட காரணங்களால இப்ப கொஞ்ச நாளா எனக்கு அவங்க முகத்தை தினம் தினம் பாத்துக்கிட்டு இங்க வேலை செய்யறது ரொம்ப கஷ்டமாயிருக்கு சார்." அவள் குரல் தழுதழுத்தது.
"ம்ம்ம்... புரியுதும்மா... அரசல் புரசலா என் காதுக்கும் இந்த சேதி வந்தது... சாவித்திரி உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நுழைஞ்சு கூத்தடிக்கறான்னு.. ஆபீசுல எல்லோரையும் ரப்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கா: நம்ம சீஃப், அவ சொன்ன எடத்துல கைநாட்டு வக்கிறான். இது எங்க போய் நிக்கப் போகுதோ? அவளால எனக்கும் அபீஷியலா சில பிரச்சனைகள் இருக்கு... உனக்கு தெரியுமோ தெரியாதோ.. செல்வாவை இந்த ஆபீசுல இருந்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணதுக்கு காரணமே அவதான்... அவனை மாதிரி ஒரு நல்ல வொர்க்கரை என் டிவிஷன்லேருந்து வெளியில அனுப்பறதுக்கு எனக்கு மனசே இல்லை. என்னப் பண்றது. ரெண்டு மாசம் பொறுத்துக்கோ... நம்ம சீஃப் லாங்க் லீவுல போறார். அப்ப அவளையே இங்கேருந்து, இந்த ஊரை விட்டே தூக்கறதுக்கு நான் ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கேன். இப்ப நான் சொன்னதை மட்டும் யார்கிட்டயும் பேச்சுவாக்கில கூட சொல்லிடாதே" அவர் அவளைப் பார்த்து புன்னகைத்தார்.
"செல்வா ட்ரான்ஸ்ஃபர் பத்தி எனக்குத் தெரியும் சார்... நீங்க சொல்ற மாதிரி ரெண்டு மாசம் வரைக்கும் என்னால இங்க தாக்கு பிடிக்க முடியாது சார்... அதுக்குள்ள எனக்கு கண்டிப்பா பைத்தியமே பிடுச்சுடும். எனக்கு நீங்க மாறுதல் கொடுக்க முடியாதுன்னா, நான் கொஞ்ச நாள் லீவுல போறதை தவிர வேற வழி இல்லை சார்." அவள் கண்கள் லேசாக கலங்கியது.
"என்னம்மா நீ இதுக்கெல்லாம் கண் கலங்கறே, தைரியமா இரு. ஏன் உன் லீவை வேஸ்ட் பண்ண நினைகக்கிற... ம்ம்ம்... நீ ஒரு மாசம் டெல்லி போகத் தயாரா? அங்க செகரட்டேரியட்ல, ஒரு ட்ரெய்னிங் கோர்ஸ்க்கு நம்ம ஆபீஸ்லேருந்து ஒரு நாமினேஷன் கேட்டுருக்காங்க; சீஃப் யாரையாவது விருப்பம் உள்ளவங்களை அனுப்ப சொல்லிட்டார். உன் புரமோஷன் சமயத்துல இந்த பயிற்சி உனக்கு உதவலாம். சாவித்திரி அடுத்த வாரம் பூரா லீவுல இருக்கா: நீ ட்ரெயினிங்க்கு போறதுல எந்தப் பிரச்சனையும் வராது. நீ திரும்பி வந்த உடனே என்க்கு கீழே நேரடியா போஸ்டிங்க் போட்டா யாரும் ஓண்ணும் சொல்ல முடியாது. டெல்லியில வெளி மாநிலத்திலேருந்து வர ஆட்களுக்கு தங்கறது, சாப்பாடு எல்லாம் அந்த ட்ரெயின்ங் செண்டர்லயே ஏற்பாடு பண்ணியிருக்காங்க. உன் விருப்பத்தை சொல்லு" சொல்லிக்கொண்டே கோபாலன் எழுந்து கொண்டார்.
"நான் ரெடி சார்: எனக்கு இந்த வாய்ப்பு கொடுக்கறதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்: இந்த இடமாற்றம் என் மனசுக்கு இப்ப ரொம்ப தேவை சார். எப்ப சார் போகணும் டெல்லிக்கு?" ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்கிறார்களே அது இதுதானா சுகன்யாவின் மனம் துள்ளியது.
"இப்ப போய் நான் உனக்கு இ-மெயில்ல அப்ளிகேஷன் அனுப்பி வக்கிறேன். அதை ஃபில் பண்ணி, அது கூட உன் பயோ டேட்டா சாஃப்ட் காப்பியை வச்சு இப்பவே எனக்கு மெயில் பண்ணிடு, நான் இன்னைக்கே டெல்லி ஹெட் ஆபிசுக்கு உன் பேப்பர்ஸ் எல்லாத்தையும் ரெக்கமண்ட் பண்ணி அனுப்பிடறேன். பதினெட்டாம் தேதி கோர்ஸ் ஆரம்பிக்குது. பதினாலு அல்லது பதினைஞ்சு தேதிக்கு ட்ரெய்ன்ல ஏசி டூ டயர்ல டிக்கட் புக் பண்ணிக்கோ, டெய்லி அலவன்ஸ், ட்ராவலிங் அலவன்ஸ்ல்லாம் திரும்பி வந்து க்ளெய்ம் பண்ணிக்கோ... ரைட்டிங்ல ஆர்டர்ஸ் நான் திங்கள் கிழமை அன்னைக்கு போட்டுடறேன்... எந்த பிரச்சனைன்னாலும் நீ நேரா எங்கிட்ட வரலாம்... சரியா?" அவர் தன் முகத்தை துடைத்தவாறே தன் ரூமை நோக்தி நடந்தார்.
தொடரும்...
வளர்ந்த நகரங்களிலும் கூட முதிர்ந்த மனிதர்களிடயே கூட, இந்தக் காலத்திலும் கூட காதல் திருமணம் அவ்வளவு சுலபமாக கை கூட விடாமல் பிரச்சனைகள் பல ரூபங்களில் வரத் தான் செய்கிறது
ReplyDelete