மணி மாலை ஏழை தொட்டுக்கொண்டிருந்தது. வெளியில் லேசாக மழை தூறியவாறிருந்தது. காற்று குளுமையாக வீசிக்கொண்டிருந்தது. மீனா தன் வீட்டு காம்பவுண்டுக்குள் நின்று மெல்லிய தூறலில் கைகளை ஆட்டி நனைந்து கொண்டிருந்தாள்.
மல்லிகாவுக்கு தெரியாமல், வெராண்டாவில் நின்றிருந்த நடராஜனை பார்த்து தன் உதடுகளைப் பிதுக்கி சைகை செய்து வெளியே மழையில் விளையாட வருமாறு கூப்பிட்டாள்.
மூணு மணி வாக்கில் ஜானதியை பார்க்கப்போன செல்வா, திரும்பி வந்ததிலிருந்து சோர்ந்த முகத்துடன் யாரிடமும் பேசமால், ஏதோ கப்பல் கவிழ்ந்தது போல் தன் கைகளை தலையில் கோர்த்துக் கொண்டு உட்க்கார்ந்திருந்தான்.
பெற்ற மகனை அப்படிப் பார்த்த நடராஜன் மனம் புழுங்கியது.
'இது என்ன வேதனை இவனுக்கு? மல்லிகாவும் ஏன் இந்த விஷயத்தில் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள்? இவன் கல்யாணப் பேச்சில் யாரை ஆதரிப்பது? யாரை விலக்குவது? யாரை சேர்த்துக்கொள்வது?'
சம்பந்தபட்ட இருவரும் அவருக்கு உயிருக்கு உயிரானவர்கள்.
'என் உயிரின் எந்த பக்கத்தை கிள்ளிப் போடமுடியும்?'
யோசித்துக்கொண்டிருந்த அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
மல்லிகா அவர்கள் இருவரையும் மனதில் பொருமலுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கே கனமான மவுனம் நிலவிக்கொண்டிருந்தது.
"டேய் செல்வா, ஜானகியைப் பாக்க போனியே அங்க என்னடா நடந்தது: சொல்லித்தொலையேன்" ரெண்டு மணி நேரமாக பொறுத்துப் பொறுத்து பார்த்த மல்லிகா வெடித்தாள்.
"ம்ம்ம்... அவ என்னை செருப்பால அடிக்கலை. அது ஒண்ணுதான் பாக்கி, மீதி எல்லாம் நீ எதிர்பார்த்தபடியே நடந்தது" செல்வா அவளைப் பார்த்து கத்தினான்.
மீனா அமைதியாக உள்ளே நுழைத்து தன் அண்ணன் பக்கத்தில் நின்று அவன் தோளை அழுத்தினாள். ஆத்திரப்படாமல் இருக்கும்படி கண்களால் கெஞ்சினாள்.
"என்னடா சொல்றே"
"இப்ப உனக்கு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டுத்தான் ஆவணுமா? அப்பத்தான் உனக்கு நிம்மதின்னா கேட்டுக்க; நெய் ஒழுக கேசரி கிளறி வச்சி போண்டா காப்பி குடுத்துட்டு அந்த குண்டச்சியும் அவ புருஷனும் நீங்க பேசிட்டு இருங்கன்னு ஓதுங்கிட்டாங்க... அந்த ஜெயந்தி.., அதான் அவ தங்கச்சி, இடுப்புக்கு கீழ ஜீன்ஸ் போட்டுட்டு ஊருக்கு எல்லாம் ஷோ காட்டுறாளே, அவ அக்காளுக்கு காவலா மூலையில நின்னுட்டு இருந்தா. நான் என்னமோ அவ அக்காளை கைபோட்டுடப் போறேன்னு"
"சிரிச்சிக்கிட்டே அந்த ஜானகி கேட்டா, உங்களுக்கு யாரோ சுகன்யான்னு ஒருத்தி கூட பழக்கமாமே; அவளும் பாக்கறதுக்கு என்னை மாதிரியே மூக்கு முழியுமா இருப்பாளாமே? நீங்க ரெண்டு பேரும் பீச்சு, சினிமான்னு சுத்தியிருக்கீங்களாம். ஆனா அவ சொத்து பத்து இல்லாத குடும்பத்துல இருந்து வந்தவன்னு, அவளை நடுவுலே விட்டுட்டு, உங்கம்ம்மா சொன்னான்னு இப்ப என் பக்கம் திரும்பியிருக்கீங்க போல இருக்கு? அவளை என்ன பண்றதா உத்தேசம்? எனக்குத் தாலிகட்டிட்டு, அவளை சின்ன வீடா செட் அப் பண்ணிக்கலாம்ன்னு பிளானா? சொத்துக்கு நான்? ஆசைக்கும் மோகத்துக்கும் ஸ்லிம்மா அவளா? நல்லா படிச்ச உங்களை மாதிரி, நல்ல குடும்பத்துல வந்த நீங்களே இப்படி பண்ணலாமன்னு என் மூஞ்சியில காறித் துப்பினா? எல்லாத்தையும் உனக்காக தான் பொறுத்துகிட்டேன்."
"நானும் சோத்துக்கு மூணு வேளையும் உப்பு போட்டுத்தானே திங்கறேன், என்னாலயும் அதுக்கு மேல பொறுக்க முடியாம, உங்கம்மாளுக்கு இந்த கதையெல்லாம் நல்லாத் தெரியுண்டி. நாங்க ஒண்ணா சுத்தற கதை எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறமும், எங்க வீட்டுக்கு புருஷன் பொண்டாட்டியா வந்து என்னை தாம்பூலம் வெச்சு வரச்சொன்னதே உங்கப்பனும், உங்கம்மாளும்தாண்டி; அவளை கூப்பிட்டு என்னை கேட்ட கேள்வியை திருப்பியும் கேளுடின்னு கத்தினேன்"
"என் ஆத்தாகாரிக்கும், உன் ஆத்தாகாரிக்கும்தான் புத்தியில்லை, உன் புத்தி எங்கடா போச்சுன்னு... அவ பதிலுக்கு கத்தினாம்மா: சுகன்யா பீச்சுல நிக்க வெச்சு கேட்டாளே அதே கேள்வியை இவ நடு கூடத்தில உக்காத்தி வெச்சு கேட்டா."
"அப்புறம்"
"அப்புறம் என்னா அப்புறம், அவ ஆத்தாக்காரி சாவித்திரி ஓடியாந்து, அவளை பளார்ன்னு பளார்ன்னு அறைஞ்சா; என்னை ஏண்டி அடிக்கறேன்னு அந்த ஜானகி அவ ஆத்தாளை கீழத்தள்ளி மிதிச்சா, அவ புருஷன் என்னை பாத்து தப்பா நினைச்சுக்காதங்கன்னு கையெடுத்து கும்பிடறான். உங்க வீட்டுல இதைப்பத்தி சொல்லிடாதங்கன்னு என் ரெண்டு கையையும் கெட்டியா புடிச்சிக்திட்டான். கேடு கெட்ட குடும்பம் அது: இதுக்கு மேல அங்க உக்காந்து இருக்கறதுக்கு எனக்கு என்ன சூடு சொரனை இல்லையா? சொல்லாம கொள்ளாம எழுந்து ஓடியாந்தேன்; என் மானத்தை வாங்கிட்டியேமா?"
"நான் ஒரு வெக்கம் கெட்ட கேனப்பய, நான் பட்ட அவமானத்தை உங்ககிட்ட விவரமா சொல்லிதிட்டு இருக்கேன். நீ அப்புறம் அப்புறம்ன்னு கதை கேக்திற. இப்ப உனக்கு சந்தோஷம்தானே? இதெல்லாம் எனக்குத் தேவையா?"
செல்வா தன் தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டான். மீனா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, "அண்ணா, அண்ணா, நீயாவது சும்மா இருடா பீளீஸ்" என விம்மத் தொடங்கினாள். நல்ல நேரத்தில் இந்த வீட்டில் இன்னைக்கு பொழுது விடிந்தது என்று நினைத்துக்கொண்டாள்.
"டேய் இப்பவாவது உனக்கு புரிஞ்சுதாடா? இதெல்லாம் அந்த வெக்கம் கெட்ட சிறுக்கி சுன்யாவோட வேலைடா: அவதான் உங்க கதையெல்லாம், ஜானகிக்கு சொல்லியிருப்பா; ஜானதிக்கு எப்படிடா உங்க கதை விலாவாரியா தெரிஞ்சது? காலையில என் சுகன்யா ரொம்ப ரொம்ப நல்லவன்னு தலையில தூக்தி வச்சகிட்டு ஆடினியே? எல்லாம் என்னால வந்த வினைன்னு நா கூசாம என் மேல பழி போட்டியே? இப்ப என்ன ஆச்சு பாத்தியா? அவளை சும்மா வுடலாமா? என் புள்ளை வாழ்க்கையை கெடுத்தாளே? அடியே மீனா அவ எங்கடி இருக்கா? இப்பவே நேரா போய் அந்த நாயை செருப்பால அடிச்சுட்டு வரலாம் வாடி, அப்பத்தான் என் மனசு ஆறும்." மல்லிகா தன் முந்தானை தரையில் புரள வெறி கொண்டவளாக தலைவிரி கோலமாக எகிறி குதித்தாள்.
"எம்மா, இன்னொரு தரம் நீ என் சுகன்யாவை சிறுக்கி கிறுக்தின்னு கண்டபடி பேசினே, எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்." கோபத்துடன் எழுந்தவன் தன் கையை வீசிக்கொண்டு தன் தாயை நோக்தி ஓடினான்.
அந்த வீட்டில், தாய் மகன் நடுவில் சுகன்யா என்ற பெண்ணால் ஒரு வலுவான கோடு விழுந்தது.
கண் மண் தெரியாமல் ஓடியவன் நடுவிலிருந்த செண்டர் டேபிள் தடுக்கி கீழே விழுந்தான். விழுந்தவன் நெற்றி டேபிளின் முனையில் இடிபட்டு கோலியாக வீங்கியது. உடல் நடுங்கி, மூச்சிறைக்க கத்தியதில் அவன் வாயிலிருந்து எச்சில் தெறித்து, கண்கள் சிவந்து, வாய் குளற, "என்னை விடுடி என்னை விடுடி இனிமே இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன், நான் எங்கேயாவது போய் ஒழியறேன்" என மீனாவிடம் கத்தினான்.
மீனா அவனை இறுக்கிக் கட்டிப்பிடித்து தன் மடியில் சாய்த்து அவன் முதுகை தடவிக்கொடுத்தாள். அவள் மவுனமாக அழ அவள் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் ஒழுகியது.
எதிர் வீடு பக்கத்து வீடுகளில் வெரண்டா விளக்குகள் போடப்பட்டன. சன்னல்கள் திறந்தன. சன்னல் வழியே, 'என்னாச்சு காலையிலிருந்தே இந்த வீட்டுல ஒரே கூச்சலா இருக்கு' என்ற கேள்வியுடன் புருவங்கள் உயர்ந்தன.
நடராஜன் வேகமாக தன் மனைவியை வீட்டினுள் இழுத்து சென்றார்.
***************************
சுகன்யா டெல்லி போவதற்காக ரயில்வே டிக்கட் ரிசர்வ் செய்து கொண்டு, வீட்டினுள் நுழைந்து மாடிப்படியில் ஏறிய போது, அவள் அறையிலிருந்து சாம்பார் கொதிக்கும் வாசமும், எண்ணையில் வெங்காயமும், பச்சை காய் வதங்கும் நெடியும் காற்றில் மிதந்து வந்து அவள் மூக்கைத் துளைத்தன.
'ஊரிலிருந்து மாமா ரகு வந்திருப்பாரோ, அவர் தான் எப்பவும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பார்: வந்தவுடேனே சமைக்கவும் ஆரம்பித்து விட்டாரா?'
அவள் ரெண்டு ரெண்டு படிகளாக தாவி ஏறினாள். உள்ளே நுழைந்ததும், ஒரு நிமிடம் திகைத்தாள்.
அவள் மாமா ரகு கட்டிலில் படுத்திருக்க, சுந்தரி தன் புடவையை முழங்கால் வரை ஏற்றி இடுப்பில் செருகிக்கொண்டு, மும்முரமாக கத்திரிக்காயை வதக்கிக் கொண்டிருந்தாள்.
"எப்பம்மா வந்தே" சுகன்யா வாசல் படியிலிருந்து தாவி தன் தாயை அவள் முதுகின் பின்னாலிருந்து கட்டிக்கொண்டு ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"கேஸ் எரியுது, எண்ணை சட்டிக்கு முன்னாடி நின்னு வேலை செய்றேன், பின்னாடி வந்து கட்டிபுடிச்சு என்னை உலுக்கறே? நல்லாயிருக்குடி நீ பண்றது: இன்னும் சின்னக்குழந்தை மாதிரியே நடந்துக்கறே. நாங்க வந்து ஒரு மணி நேரம் ஆச்சுடி, ஆபீசுலேந்தா வர்றே? இன்னைக்கு லீவு இல்லயா உனக்கு?"
சுந்தரி எரியும் அடுப்பை அணைத்துவிட்டு தலை முதல் கால் வரை தன் பெண்ணை ஒரு முறை நோட்டம் விட்டாள்.
'பரவாயில்லை, போன மாசம் பாத்ததுக்கு பழுதில்லை, அப்படியே தான் இருக்கா' பெத்த மனசு சந்தோஷப்பட்டது.
'ஆனா மூஞ்சி மட்டும் ஏன் வாடி இருக்கு, கண்ணெல்லாம் வீங்கி இருக்கற மாதிரி தோணுது; அழுது கிழுது இருப்பாளோ; எதுக்காக அழணும் என் பொண்ணு?'
"சனிக்கிமமை லீவுதாம்மா... கொஞ்சம் பெண்டிங் வேலை இருந்தது முடிக்கலாம்னு போனேன்; அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, பதினைஞ்சாம் தேதி, நான் டெல்லிக்கு போக டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டேன். அங்க ஒரு மாசம் எனக்கு ட்ரெய்னிங் போட்டிருக்காங்க: போன் பண்ணி சொல்லணும்ன்னு நினைச்சுக்கிட்டே வர்றேன் நீங்க ரெண்டு பேரும் நேர்லயே வந்துட்டீங்க."
சுகன்யா ரகுவினருகில் உட்கார்ந்து அவன் கையை தன் கைக்குள் எடுத்துக் கொண்டாள்.
"நல்லாயிருக்தங்களா மாமா?" நெருங்கிய சொந்தங்களை பார்த்த மதிழ்ச்சி அவள் முகத்தில் அரும்பியது.
ரகு பதில் சொல்லாமல் அவள் தலையை பாசத்துடன் வருடி தன் தோளில் சாய்த்துக்கொண்டார்.
"சுகு, சாமானெல்லாம் கழுவி கவுத்து வெச்சிருந்தது. நீ காலையில ஓண்ணும் சமைக்கலயா?"
"இல்லைம்மா. எனக்கு இப்ப பேய் பசி: முதல்ல ரெண்டு வாய் சாப்பிடணும், நாமெல்லாம் ஒண்ணா சாப்பிடலாம், ரெண்டு நிமிஷத்துல வர்றேன், நீ தட்டை வைம்மா எல்லாருக்கும்” எழுந்து பாத்ரூமை நோக்கி சென்றாள்.
சுகன்யா நடந்த போது அவள் இடுப்பு அசைந்த விதத்தைப் பார்த்த சுந்தரி மனதில் நினைத்துக்கொண்டாள்...
'கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி, ம்ம்ம்... யார் கண்ணும் பட்டுடக்கூடாது...'
"முருங்கைக்காய் சாம்பாரும் கத்தரிக்காய் பொறியலும் காம்பினேஷன் சூப்பரா இருக்கும்மா. உன் கை பக்குவமே தனிதாம்மா."
சுந்தரி மவுனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தன் தம்பியை பார்த்தாள்.
"என்னம்மா திடீர்ன்னு ரெண்டு பேருமா வந்திருக்கீங்க" சுகன்யா தட்டிலிருந்த சாதத்தை சாம்பாருடன் குழைத்து பிசைந்து வாயில் போட்டு மென்றபடி முகத்தில் ஆர்வத்துடன் கேட்டாள்.
"செல்வான்னு ஒரு பையன் கூட பழகறேன்; எனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு ஊருக்கு வந்தப்ப எங்கிட்ட சொன்ன; நான் விசாரிச்சதுல பையனோட குடும்பம் நல்ல குடும்பம்; பையனுக்கும் கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்லன்னு தெரியுது. அப்பா நடராஜன் தங்கமான மனுஷன் பையனோட அம்மாவுக்கு மனசுல ஒண்ணும் கிடையாது ஆனா பேசும் போது கொஞ்சம் படபடன்னு பேசுவாங்கன்னு சொன்னாங்க; நாலு பேரு நாலு விதம். வீட்டுலேயே இருக்கற பொம்பளைங்கன்னா கொஞ்சம் முன்ன பின்ன, அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க: அந்த, பையனோட தங்கையும் துரு துருன்னு அழகா இருப்பாளாம்; அவளும் அப்பா மாதிரி அமைதின்னுதான் சொல்றாங்க; புதுசா குடும்பத்துல போறவங்கதான் முதல்ல ஓத்து போகணும். உனக்கு அவனை பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்குங்கற: முடிஞ்சா நாளைக்கு அவனை நீ எங்கயாவது வரச்சொல்லு. ஏன் இங்கேயே வரச்சொல்லு: பெரியவங்களை பாக்கறதுக்கு முன்னே அந்த பையனை ஒரு தரம் தனியா பாத்து பேசினா நல்லதுன்னு எனக்கு படுது. உங்க ரெண்டு பேருகிட்டவும் ஒரு தரம் கலந்துகிட்டு அவங்களை நேரடியா போய் பாக்கலாம்ன்னு வந்தேன். அவங்களும் சரின்னா மேல ஆக வேண்டியதை காலா காலத்துல பண்ணலாம்."
"உங்கம்மா, என் பொண்ணு சுகன்யா என் கண்ணுலயே நிக்கிறா: அவளைப் பாக்கணும் போல இருக்குன்னா; சரின்னு ரெண்டு பேருமா வந்தோம்." சுகன்யாவைத் தன் ஓரக்கண்ணால் பார்த்தவாறே ரகு நிதானமா சாப்பிட்டவாறு பேசினார்.
சுகன்யாவின் முகம் லேசாக மழை மேகமாக கறுத்தது.
'இது என்ன வேடிக்கை, காலையிலத்தான் அவனும் வேணாம், அவனோட எந்த சம்பந்தமும் இனி எனக்கு வேணாம்ன்னு சொல்லிட்டு வந்தேன். மாலையில அவனை கூப்பிட்டு சம்பந்தம் பேசனும்ன்னு இவங்க வந்து நிக்திறாங்க? நாம ஒண்ணு நினைச்சா, தெய்வம் ஒண்ணு நினைக்குங்கறாங்களே, அது இதுதானா?'
சுகன்யா மவுனமாக தலைகுனிந்து தட்டிலிருந்த சோற்றை கிளறிக்கொண்டிருந்தாள்.
'அவ்வளவு தூரம் அவனை தட்டிட்டு வந்திருக்கேன். மீனா கிட்ட பேசும் போதும், அவன் உறவையே அறுத்தாச்சுன்னு சொன்னேன்: இப்ப எந்த மூஞ்சை வெச்சுக்கிட்டு அவனை கூப்பிடுவேன்' அவள் மனதுக்குள் மருதினாள்.
"சாப்பிடும்மா? சோத்தை கோழி கிளர்ற மாதிரி கிளறிக் கிட்டிருக்கே? மனசுல நீ என்ன நெனைச்சுநிட்டு இருக்கேன்னு வாயைத்தொறந்து சொன்னாத்தானே தெரியும்?" சுந்தரி அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள்.
"எனக்கு கல்யாணம் வேணாம் மாமா, கொஞ்ச நாள் போகட்டும் நானே உங்ககிட்ட சொல்றேன்" தட்டை வழித்து கடைசி பிடியை வாயில் போட்டுக்கொண்டு சட்டென்று எழுந்தாள் சுகன்யா.
சுந்தரியும், ரகுவும் ஒருவர் முகத்தை ஒருவர் வியப்புடன் பார்த்துகொண்டனர். சுந்தரி அவளை இழுத்து தன் பக்கத்தில் உட்க்கார வைத்தாள்.
"சுகா, இங்க வாமா, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடி கண்ணு, முன்னுக்கு பின்னா பேசாதடா கண்ணு, செல்லம் குடுத்து உன்னை பிடிவாதக்காரியா வளத்துட்டேன்: அன்னைக்கு அவனைத்தான் கட்டிக்குவேன்னு என் கிட்ட சண்டை போட்டுட்டு வந்தே; இப்ப கல்யாணமே வேண்டாங்கற உனக்கும் அந்த பையனுக்கும் நடுவுல எதனா பிரச்சனையா? அப்படி எதாவது இருந்தா மனசை விட்டு சொல்லு, நானும் நீ வந்ததுலேருந்து பாக்கிறேன் உன் மூஞ்சே சரியில்லை, பேருக்கு சிரிக்கிறே?"
"எம்மா, என் கல்யாண கதையை இப்போதைக்கு விட்டுடும்மா. பிளீஸ், சும்மா என்னை போட்டு கொடையாதே; என்னை நீ ஆசையா பாக்க வந்திருக்கே; எனக்கும், உன்னையும் மாமவையும் பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு: கல்யாண ஆசை மொத்தமா என்னை விட்டு போயிடிச்சிம்மா" சொன்னவள் உதடுகள் கோணித் துடிக்க, கலங்கிய கண்களுடன் சடாரென தன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
சுந்தரி தன் மகளின் அழுகையை கண்டு, தன் அடி வயிறு கலங்க 'என்னாச்சு என் செல்லத்துக்கு' என்று மனம் துடிக்க, மடியில் கிடந்த மகளின் முதுகை பாசத்துடன் தடவிக்கொடுத்தாள்.
சுகன்யாவின் மனதில் ஒரு வாரமாக அடைபட்டு, பனியாக இறுக்கிக்கிடந்த கோபம்; செல்வா, செல்வாவின் தாய், ஜானகி, சாவித்திரி என எல்லோரின் மீதிருந்த அர்த்தமுள்ள, அர்த்தமில்லாத கோபம், தாயின் கை தன் உடலில் பட்டதும், உடைந்து இளக, சுகன்யா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அழ அழ அவள் மனது லேசாகியது.
லேசாகிய மனதுடன் சுந்தரியின் மடியிலிருந்து எழுந்த சுகன்யா, தன் தாயைப் பார்த்து சிரித்தாள். அவள் மனதும் முகமும் இப்போது தெளிவாக இருந்தன.
"அம்மா, நான் உன் மனசை புண்படுத்திட்டு எவனையும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலேம்மா"
"என்னடி சொல்றே, நீ என் மனசை புண்படுத்தறியா? இது என்ன புது கதை?" சுந்தரி தன் மகளை திகைப்புடன் பார்த்தாள்.
"அம்மா, நான் காதலிச்சவன் இருக்கானே அவன் ஒரு கோழை; அவன் இன்னமும் என்னை முழு மனசோட விரும்பறான், என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறான். அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை; ஆனா அதை தெளிவா, தீர்க்கமா, நான் தான் அவனுக்கு வேணும்ன்னு அவங்க அம்மாகிட்ட அவனால சொல்ல முடியலை. எனக்காக, என் அன்புக்காக, என் காதலுக்காக மட்டும் அவனால அவங்க குடும்பத்தை உதறிட்டு வரமுடியாதுன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அவன் என் பக்கமும் நிக்க முடியாம, அவங்க அம்மா பக்கத்துலயும் நிக்க முடியாம கிடந்து குழம்பறான். அவனை அவங்க அம்மா, அந்த அளவுக்கு அவ முந்தானையில கெட்டியா முடிஞ்சு வெச்சிருக்கா: அவங்க அம்மா பண்ண இட்லி வடைகறியை திருட்டுத்தனமா பார்சல் பண்ணியாந்து கொடுக்கறான். ஆனா இதை எனக்குத்தான் கொண்டு போறேன்னு அவங்க அம்மா கிட்ட சொல்லத் தைரியமில்லை அவனுக்கு. அவங்க அம்மாளுக்கு என்னை விட, என் வேலையை விட, உன் புருஷன் யாரு: அதான் என்னைப் பெத்தவன் யாரு? அவன் எங்க இருக்கான்: நம்ம குடும்ப அந்தஸ்து என்ன, எனக்குக்குன்னு சொத்து எதாவது இருக்கா, நம்ம உறவினர்கள் யாரு? இதெல்லாம்தான் முக்தியமாப் படுது."
"இன்னைக்கு செல்வா அவங்க அம்மா பேச்சைத் தட்ட முடியாம, சொத்து சுகத்தோட இருக்கற ஒரு பொண்ணை பாக்க போயிருப்பான்? பாத்துட்டு அவளை இவன் வேணாம்ன்னு சொல்லலாம்: இல்லை அந்த பொண்ணு இவனை வேணாம்ன்னு சொல்லலாம்; ஆனா என்னை அவன் காதலிக்கும் போது, அவன் அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு இன்னொருத்தியை பாக்கப் போறது என்னை இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு: அவங்க அம்மா கிட்ட அவன் மாட்டேன்னு சொல்லியிருக்கணும். நான் வேற எந்த பையனையாவது பாக்க சம்மதிச்சா, இல்லை சும்மா நட்பா பழகினா இவன் பொறுத்துக்குவானா? இதுதான் என் மனசை ரொம்ப கஸ்டப்படுத்திடுச்சி. நான் சுத்தி வளைக்காம அவனை கேட்டுட்டேன், நான் வேணுமா, இல்லை அவங்க அம்மா சொல்ற பொண்ணு வேணுமான்னு; அவனால இந்த கேள்விக்கு தெளிவா பதில் சொல்ல முடியலை. அதனாலதான் நீ வேண்டாம் போடான்னு வந்துட்டேன்."
"காலையில பத்து மணிக்குத்தான் நான் அவன்கிட்ட தீர்த்து சொல்லிட்டு வந்தேன்; என் அப்பனை, என்னால தேடிக்கொண்டாற முடியாது: எனக்கு இருக்கறது ரெண்டு பேருதான், ஒண்ணு என்னைப் பெத்தவ, இன்னொருத்தர் என் மாமா, இந்த உலகத்துல இவங்கதான் எனக்கு எல்லாமே; உன்னை மாதிரி ஒரு வழ வழா கொழ கொழாவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, நீ உங்க அம்மா மடியிலேயே கிட, இனிமே எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நீ என்னைப் பாக்கவோ, பேசவோ வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்" சொல்லியவள் எழுந்து ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரை பிரிஜ்ஜிலிருந்து எடுத்துக்குடித்தாள். தன் முகத்தை ஈரக்கையால் அழுந்த துடைத்துக் கொண்டாள்.
"சொல்லுங்க மாமா, நான் செய்தது தப்பா?" ரகுவின் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள்.
"அடிப்பாவி மவளே, அவனை என்னாடி கேக்கிற: கல்யாணமே பண்ணிக்காத கட்டை அவன்: அவனுக்கு என்னாடி தெரியும் ஒரு பொம்பளை மனசு என்னான்னு; எனக்கும் உனக்கும் இனி சம்பந்தம் இல்லேன்னு அந்த பையன் கிட்ட சொன்னதா ரொம்ப சாதாரணமா சொல்றே: அவனைப் பத்தி உன் ஆபீசுல விசாரிச்சப்ப உன்னைப்பத்தியும் தாண்டி சொன்னாங்க; அவன் கூட மோட்டார் சைக்கிள்ள, தலை நெறைய பூவை வெச்சுகிட்டு கோவில் கோவிலா சுத்தினியாமே, ஒரு ஹோட்டல் விடாம தினம் தினம் அவன் கூட உக்காந்து சாப்பிட்டியாமே; இப்படியெல்லாம் இவ்வளவு நாளா அவன் கூட ஆசையா பேசிப்பழகிட்டு, உண்மையா அவனை கல்யாணம் பண்ணிக்கற எண்ணத்தை மனசுல வளத்துக்கிட்டு, அவனை சட்டுன்னு மறக்கமுடியுமாடி உன்னால?"
"நீ அவன் சம்பந்தத்தை வெட்டிவிட்டுட்டேன்னு வாயால சொல்லலாம்: உன் கண்ணு சொல்லுதுடி நீ அவனை உதறிட்டு வரலேன்னு: உன் மூஞ்சி சொல்லுதுடி, அவன் அம்மா மேல இருக்கற கோபத்துல அவன் கிட்ட கன்னா பின்னான்னு கத்திட்டு வந்துட்டேமேன்னு: கத்தறதை கத்திட்டு வந்து என் மடியில படுத்துகிட்டு அழுவற இப்ப; இப்ப புரியுதுடி நீ ஏன் அவசரமா அவசரமா டில்லிக்கு ஓடறேன்னு; எத்தனை நாளைக்குடி ஒடுவ; எங்கெங்க ஓடுவ? உன்னை நீயே ஏமாத்திக்காதடி? நானும் ஒரு பொம்பளை; நானும் அந்த காலத்துல எங்கம்மா பேச்சை கேக்காமா உங்கப்பாவை காதலிச்சவதாண்டி"
"கோபத்துல வாயை விட்டு நாம இப்படி அவன் கிட்ட கறாரா எங்கிட்ட பேசவேணாம், பாக்க வேணாம்ன்னு சொல்லிட்டமேன்னு கவுரவம் பாக்காதடி, காதலிக்கற ரெண்டு பேருக்குள்ள, நீ அவனை கோச்சிக்கறதும், அவன் உன்னை கோச்சிக்கறதும் சாதாரணமான விஷயம்: கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும், கணவன் மனைவிக்குள்ள, தினமும் இது மாதிரி பத்து கோபம், நூறு சண்டை வந்துகிட்டுத்தாண் இருக்கும்."
"உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்: அவனை ஒரு தரம் கூப்பிடு; நாங்க அவங்கிட்ட பேசறோம். என் புருஷனைப்பத்தி நான் சொல்றேண்டி அவன் கிட்ட: அந்த பையனைப்பத்தி நாலு எடத்துல விசாரிச்சுட்டுத்தாண்டி வந்திருக்கோம்: அவன் நல்ல பையன், அவனுக்கு கெட்டப்பழக்கம் எதுவுமயில்லன்னு சொல்றாங்க, அந்த பையனோட அப்பா நல்ல மனுசன்னு சொல்றாங்க: உன் மேல எனக்கு எவ்வளவு ஆசை இருக்கோ, நீ நல்ல படியா சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் நினைக்கற மாதிரி, அந்த பொம்பளைக்கும் அவ்வளவு ஆசை தன் புள்ளை மேல இருக்காதா? அவன் நல்லா இருக்கணும்ன்னு அவ நினைக்க மாட்டாளா? நீ ஒரு புள்ளையை பெத்தாதாண்டி இது உனக்குப் புரியும்?" சுந்தரி தெளிவாக உணர்ச்சி வசப்படாமல் பேசினாள்.
"எம்மா அந்த குடிகாரனை அப்பாவைப்பத்தி நான் அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன். எனக்காக நீ யார் முன்னாடியும் போய் அவமானப்பட வேணாம், கல்யாணத்துல நான் முக்தியமா? இல்ல என் அப்பா யாருங்கறது முக்கியமா?"
இதுவரை அமைதியாக இருந்த ரகு பேசினார்.
"காலம் காலமா இந்த பூமியிலே கேக்கப்படற கேள்விம்மா இது: உங்கப்பா யார்? உன் குலம் என்ன? தேவர்களோட குரு பிரகஸ்பதியோட பிள்ளை, பாடம் படிக்கப்போனப்ப, சுக்ராச்சாரியார் அவன் கிட்ட கேட்ட கேள்விம்மா இது: அர்ஜுனன் கர்ணன் கூட சண்டைப்போட போனப்ப கர்ணன் கிட்ட கேக்கபட்ட கேள்விம்மா இது. பின்னாடி பரசுராமர்கிட்ட பாடம் படிக்கப்போன அதே கர்ணன் கிட்ட திரும்ப திரும்பா கேக்கப்பட்ட கேள்விம்மா இது. சண்டை போடறதுக்கு, பாடம் படிக்கறதுக்கே இந்த கேள்வின்னா, முகம் தெரியாத ரெண்டு பேர் ஒண்ணா சேர்ந்து வாழப்போறப்ப, உங்கிட்ட சாதரணமா கேட்ட கேள்விக்காக நீ ஏன் வருத்தப்படறே? உங்கம்மா உன் அப்பா திட்ட பட்ட கஷ்டத்தை நீ பாத்துதிட்டு இருந்தே; உன் அம்மா மேல இருக்கற பாசத்துனால, உங்கிட்ட அவங்க கேட்ட இந்த கேள்விக்காக நீ கோபப்படறே; வாஸ்தவம்தான். ஆனால் ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா? அந்த பையனோட அப்பா யாரு, அவங்க குடும்பம் எப்படின்னு நானும் தானே விசாரிச்சேன். நான் ஜாடை மாடையா கேட்டேன்: அவன் உன்னை நேரா கேட்டுட்டான். அவ்வளவுதான் வித்தியாசம்"
"மாமா, அப்ப நான் அவனை வேண்டாம்ன்னு சொன்னது தப்பு ஆனா அவன் வேற ஒருத்தியை பொண்ணு பாக்கப் போறது சரின்னு சொல்றீங்களா?" அவள் வெடித்தாள்.
"சுகா, சரி தப்புன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லம்மா: இது தான் சரி, இது தான் தப்புன்னு எதையும் உறுதியா சொல்ல முடியாதும்மா; அந்தந்த நேரத்துல, அந்தந்த சூழ்நிலையில ஒரு விஷயத்தை பாக்கறவன் பார்வையிலேயும், பாக்கறவன் வயசுலயும், அவன் இருக்கற சமூகத்தையும் பொறுத்துதான் இது இருக்கு."
அம்மாவையும் பெண்ணையையும் தனியாக விட்டு விட்டு, ரகு மெதுவாக எழுந்து வெளியில் மொட்டை மாடுக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். புகையை ஆழமாக நெஞ்சு முழுவதுமாக இழுத்து நிதானமாக வெளியில் விட்டவர், அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தார்.
சுந்தரி எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்திருந்த தன் மகளின் பக்கத்தில் உட்கார்ந்து தன் மடியில் அவளைச் சாய்த்துக்கொண்டாள். அவள் முகத்தை ஆசையுடன் வருடி குனிந்து அன்று தான் அவள் பிறந்தது போல் சுகன்யாவை அள்ளி எடுத்து ஒரு குழந்தையை முத்தமிடுவது போல் முத்தமிட்டாள்.
"நாளைக்கு ஞாயித்துக்கிமமை உன்னை சுத்தி போடணும்டி. பெத்தவ கண்ணே குழந்தைங்களுக்கு ஆவாதுன்னு சொல்லுவாங்க" தன் கைகளால் மீண்டும் ஒரு முறை அவள் முகத்தை வருடி தன் விரல்களை நெட்டி முறித்தாள்.
"அம்மா என் மேல உனக்கு இவ்வளவு ஆசையா?"
"என்னாடி கேக்கற, என் இதயம் லப் டப் ன்னு அடிக்கலடி, அது சுகன்யா சுகன்யான்னுதான் அடிக்குதுடி" சுந்தரியின் குரல் தழுதழுத்தது.
"சுகா இந்த மாதிரி மெல்லிசா இருக்கற நைட்டியை இனிமே போட்டுக்காதடி, உன் முழு உடம்பும் அப்படியே படம் புடிச்ச மாதிரி வெளிய தெரியுது, கீழ் வீட்டுல ரெண்டு ஆம்பளைங்க இருக்காங்க, ஆம்பளைங்க மனசு எப்பவும் ஒரு மாதிரி இருக்காதுடி கண்ணு... இதெல்லாம் உனக்கே புரியணும்டா தங்கம்" சுந்தரி தன் பெண்ணின் காதில் முணுமுணுத்தாள்.
"சரிம்மா"
"அம்மாவும் பொண்ணும் ஒருத்தரை ஓருத்தர் கொஞ்சினது போதும்: என்னம்மா சுகா, அந்த பையனை நீ கூப்பிடறியா: இல்லை நான் கூப்பிட்டு பேசட்டுமா?" மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த ரகு கேட்டார்.
"மாமா, செல்வாகிட்ட நீங்களே பேசுங்க; இன்னைக்கு நான் அவன் கிட்ட சண்டை போட்டுட்டு வந்ததும், செல்வாவோட தங்கை மீனா, எங்கிட்ட பேசினா: அவங்க வீட்டுல செல்வாவுக்கும் அவங்க அம்மாவுக்குமிடையில ஒரே ரகளைன்னு சொன்னா. எங்களுக்குள்ள நடந்ததை அவன் அவங்க வீட்டுல போய் சொல்லி இருக்கான். காலையில நான் அவன் கிட்ட கோபப்பட்டேன்; அப்புறம் அவங்க அம்மா கோபபட்டு இருக்காங்க; மீனா கிட்டவும் நான் கொஞ்சம் வேகமாக அதிர்ந்து பேசிட்டேன். நிஜமாவே எனக்கு அவன் திட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருக்கு; ப்ளீஸ் நீங்களே பேசுங்க மாமா" அவள் தலை நிமிராமல் பேசினாள்.
தொடரும்...
கதை, சிறப்பாக கொண்டு போகப் படுகிறது
ReplyDeletenandri nanba
Delete