அந்தரங்கம் 14

"ஹலோ...."
"ஹலோ..?"
"நீங்க செல்வா தானே பேசறீங்க?"
"ஆமாம், நீங்க யாருன்னு தெரியலியே?"
"வணக்கம் தம்பி, என்னை உங்களுக்கு தெரியாது. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். என் பேரு ரகுராமன், நான் சுகன்யாவோட தாய் மாமா. உங்களை நேர்ல பாத்து பேசணும்ன்னு தான் சென்னைக்கு வந்திருக்கேன்; நாளைக்கு நீங்க ஃப்ரீன்னா நாம ஒரு பத்து நிமிஷம் நேர்ல சந்திச்சு பேசலாம்..." என்று மெதுவாக இழுத்தார்.
"நீங்க சொல்றதெல்லாம் சரிங்க; ஆனா எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுங்களே?"
"அப்படியா தம்பி..! ரொம்ப நல்லது. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க தம்பி; நிதானமா ராத்திரி பூரா யோசனைப் பண்ணிப்பாருங்க, அப்பாவும் உங்களுக்கு சுகன்யா யாருன்னு ஞாபகம் வரல்லன்னா, என் நம்பர் உங்க செல்லுல பதிவாதியிருக்கும், அந்த நம்பருக்கு, நீங்க தயவு பண்ணி நாளைக்கு காலையில ஒரு மிஸ் கால் குடுங்க; நான் சுகன்யாவோட அடுத்த அரை மணி நேரத்துல உங்க வீட்டுக்கு வரேன். அவளை நேர்ல பாத்தா உங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் வரும்ன்னு நினைக்கிறேன்... அப்புறம் தம்பி, எங்க பொண்ணு சகுந்தலையும் இல்லை; நீங்க துஸ்யந்த மகாராஜாவும் இல்லை... குட் நைட் தம்பி... நாளைக்கு பாக்கலாம்." ரகு தன் முகத்தை துடைத்துக்கொண்டார்.
"என்னடா" சுந்தரி சற்றே பதறினாள்.
"ஒண்ணுமில்ல அக்கா... செல்வாவுக்க சுகன்யான்னு யாரையும் தெரியாதாம்" அவர் தன் மருமகளைப் பார்த்து புன்னகைத்தார்.
"காலையில மீனா எனக்கு கால் பண்ணி, நான் செல்வாவோட தங்கை பேசறேன்னு சொன்னா. நான் எனக்கு செல்வான்னு யாரையும் தெரியாதுன்னு சொன்னேன்" சுகன்யா களையிழந்த முகத்துடன் முனகினாள்.
"சுகா, நீ காலையில அவனைத் தெரியாதுன்னு சொன்னே, அவன் மாலையில உன்னைத் தெரியாதுங்கறான். இதைத் தவிர அவன் வேற எதுவும் பேசலை. உங்க ரெண்டு பேருக்கிட்டயும் முதிர்ச்சியில்லை. ஒருத்தருக்கொருத்தர் சின்னப்பிள்ளைத்தனமா சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க."
"மாமா, நீங்க அவங்க வீட்டுக்கு போனா நானும் வரணுமா? அவனோட அம்மாவை நினைச்சா எனக்கு பயமா இருக்கு."
"உரல்ல தலையை குடுத்துட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமடா கண்ணு?" அவர் உரக்கச் சிரித்தார்.
"என்னடா ரகு, நாளைக்கு அந்த பையன் போன் பண்ணுவானா?" சுந்தரி சந்தேகமாக இழுத்தாள்.
"என்னக்கா பேசறே, நீ ஏன் டென்வுன் ஆகற? இவ அப்பா மேல இவளுக்கு ஆறாத கோபம், தீராத கோபம். அந்த கோபத்துல உன் பொண்ணு புத்தி கெட்டுப்போய் அவனை அர்த்தமில்லாம கத்திட்டு வந்துட்டா. அதோட நின்னாளா? சமாதானமா பேசின அவன் தங்கச்சி கிட்ட அவனை எனக்கு தெரியாதுன்னு ரவுசு பண்ணா, இப்ப அந்த காளை தலையை ஆட்டி என்னை முட்டப்பாக்குது. அவன் இவளை கட்டிக்க மாட்டேன்னு நேரா இவகிட்ட சொன்னானா? இல்லயே? நம்ம பொண்ணை கட்டிக்க அவனுக்கு கசக்குதா? இதை வெச்சுத்தான் நான் சொல்றேன்: அவன் நாளைக்கு கண்டிப்பா நாம சொல்ற இடத்துக்கு வருவான் பாரு."
"ஒருவேல.."
"அக்கா, ஒரு வேளை நீ நினைக்கற மாதிரி அவன் வராமா இருக்கறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கு; அவன் தலையை ஆட்டி தன் கொம்பால நம்பளை முட்ட வர்றதுக்கு சுகா தான் இடம் குடுத்துட்டா? இவதானே சொல்லிட்டு வந்திருக்கா, நீயும் வேணாம் உன் கல்யாணமும் வேணாம்னு? அப்படி அவன் நாளைக்கு வரல்லேன்னா, நான் நேரா அவனோட அப்பன் கிட்ட போயிடறேன். நல்லத்தனமா பேசிப் பாக்கறேன், மசியலனா; உனக்காக ஒரு தரம் தூக்கின அருவாளை, இவளுக்காக ஒரு தரம் தூக்கிட வேண்டியதுதான்?" ரகு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
அவர் தோளில் தலை சாயந்திருந்த சுகன்யாவின் உடல் லேசாக நடுங்கியது,
'இது எங்கே போய் முடியும்? என்னால எத்தனை பேருக்கு பிரச்சனை?'
அவள் உடல் நடுங்கியதை உணர்ந்த ரகு, "சுகா கவலைப்படாதேம்மா எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நம்புவோம். நீ போய் படுத்து நிம்மதியா தூங்கு; மீதியை காலையில பாத்துக்கலாம்." என்று சொல்லி அன்பாய் சிரித்தார்.
இரவு..,
அம்மாவின் முதுகு பக்கமாக ஒருக்களித்து படுத்து தன் வலக்கையால் அவள் இடுப்பை கட்டிக்கொண்ட சுகன்யாவிற்கு லேசில் தூக்கம் வரவில்லை. அவள் தூங்கவும் இல்லை; விழித்திருக்கவும் இல்லை; இரண்டும் கெட்டான் நிலையில் அவள் இமைகள் மூடியிருந்தன; ஆனால் மனம் மட்டும் இன்னும் அயராமல் விழித்திருந்து பட்டாம்பூச்சியாக அவள் எண்ணச் சோலையில் இறக்கை அடித்து பறந்து கொண்டிருந்தது.
'அம்மா சரியாத்தான் கேட்டா? அவ கேட்ட ஒரு கேள்விக்கு கூட என்னால பதில் சொல்லமுடியலயே: செல்வா இன்ஸல்ட் பண்ணிட்டான்ற கோபத்துல என்னைப் பாக்காதே, எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு வந்துட்டேனே? செல்வாவை என்னால அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா? இந்த மனசு பகல்ல ஒண்ணு பேச சொல்லிச்சு; யோசிக்காம பேசிட்டேன்; இப்ப ராத்திரியில ஓஞ்சு படுத்த பின்னாடி, அதே பாழும் மனசு சும்மா இருக்குதா? அவனையே திரும்ப திரும்ப நெனைக்குது. ச்சை... அவனை திட்டிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் அவன் ஞாபகம் அதிகமா வருது?'
'நமக்கு ரெண்டு மனசு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? ஒரு மனசால அவனைத் திட்டலாம்? ஒரு மனசால அவனை கண்டு சிரிச்சு சிரிச்சு ஜாலியா இருக்கலாம். நான் காலையில அவனை அவ்வளவு தூரம் வாரி கொட்டி திட்டினேன்: பேசாமதானே இருந்தான். ஒரு வார்த்தை பேசலையே? அவன் என்னை நேசிக்கவேதானே என்னைத் திருப்பித் திட்டலை. அப்படின்னா இப்ப ஏன் என்னை தெரியாதுன்னு, நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக்கை மாமாகிட்ட சொல்றான்?'
'அவனும் என்னை மாதிரி மனுஷன் தானே? அவனுக்கு மட்டும் கோவம் வராதா? மீனாதான் சொன்னாளே அவன் அம்மா வேற அவனை சண்டைப் போட்டு திட்டினான்னு;: அவன் அப்பா சும்மா இருக்கார்னா அவர் எங்க காதலை ஆதரிக்கிறாரா? பாவம் அவன் மிருதங்கம் மாதிரி எங்கிட்டவும் ஓதை வாங்கறான்; அவன் அம்மாகிட்டவும் ஓதை வாங்கறான். உன்னை ஆசையா பாக்க வந்திருக்கேன்னு சொன்னான். அப்பாவை பத்தி கேட்டுட்டான்னு, அவனை மூட்டைப் பூச்சியை நசுக்கறமாதிரி அவனைப் பேசவிடாம, கத்திட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் மீனாக்கிட்ட செல்வாவை தெரியாதுன்னு வம்பு பண்ணேன். என்னை விட சின்னப்பொண்ணு; மீனா எவ்வளவு பொறுமையா எங்கிட்ட பேசினா? ச்சே .. ச்சே ... எனக்குத்தான் அறிவு இல்லயா?'
'பாவம் செல்வா: சாவித்திரி மேல இருந்த கோவத்தை எல்லாம் அவன் மேல காட்டிட்டேன்; சாவித்திரி எனக்கு எதிரின்னா, அவனுக்கும் எதிரிதானே? நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணுமோ?' செல்வாவின் புன்னகைக்கும் முகம் அவள் மனதிலாடியது.
'பாவம் செல்வா, அவனை கூப்பிட்டு சாரி சொல்லலாமா?'
'அறிவு கெட்டவளே! செத்த நேரம் பொத்திக்திட்டு பொழுது விடியற வரைக்கும் சும்மா படுத்து கிடடி: வேலியில போற ஓணானை எடுத்து உள்ள விட்டுக்காதேடி? இப்ப உன் மாமா வேற பிக்சர்ல வந்துட்டார். நீ அவன் கிட்ட ஏதாவது பேசி, அவன் ஒண்ணு பேசி, திரும்ப நீ ஒண்ணு பேசி, ரெண்டு பேரும் சேர்ந்து குட்டையை குழப்பணுமா. இப்ப நீ செல்வா கிட்ட பண்ற டீலிங் அவருக்கு புடிக்குமோ; புடிக்காதோ?'
'செல்வா ஜானதியை போய் பாத்து இருப்பானா? அங்க என்ன நடந்து இருக்கும்?' அதை தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது.
'அடியே! அவன் அவளைப் பாத்தா என்ன? பாக்கலைன்னா உனக்கு என்ன? மாமா சொன்ன மாதிரி அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை; அவன் ஜானகியை, அவங்க அம்மா சொன்னதுக்காக போய் பாக்கறான்; இது அவனுக்கும் அவங்க அம்மாவுக்கும் நடுவுல இருக்கற விஷயம்; இதை நான் ஏன் எனக்கு அவமானம்ன்னு நெனைக்கணும்?' அவள் மனம் அலைந்து களைத்தது... அவள் தூக்கத்திலாழ்ந்தாள்... தூக்கம் வந்த அந்த நொடியை அவள் உணரவில்லை; தூக்கம் தொடங்கும் அந்த தருணத்தை கணத்தை, நொடியை உணர்ந்தவர்கள் யாராவது இருக்திறார்களா?
***********************
புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது செல்வாவின் வீடு. பசி வயிற்றை கிள்ளியெடுத்த போதிலும் நாலு பேரும் ஆளுக்கொரு மூலையாக யாரும் யாரிடமும் பேசாமல் அமைதியாக கிடந்தார்கள். மீனா முதலில் எழுந்து மூஞ்சை கழுவி, எண்ணைய் விட்டு சாமி விளக்கை ஏற்றினாள்.
"ஏண்டி மல்லி, உன் பொண்ணு நல்லாத்தாண்டி சட்னி அரைச்சிருக்கா, உப்பு காரம் சரியாத்தான் இருக்கு இல்ல?"
"ஆமாம், அவளை நீங்க தான் மெச்சிக்கணும், என்னமோ மகராணி, வீடே பத்தி எரியுதேன்னு இன்னைக்கு அடுப்பாங்கரையில நுழைஞ்சிட்டா."
"மல்லி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; வர வர வீட்டுல நீ எதுக்கெடுத்தாலும் சலிச்சுக்குற; அதுக்கு இன்னும் முழுசா இருபது முடியலடி, அவ வயசுக்கு அவ பொறுப்பாத்தான் இருக்கா" பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த அவள் முதுகை தன் இடது கையால் பாசத்துடன் வருடினார் நடராஜன்.
நடராஜனின் வருடலில் அவள் முதுகு சிலிர்த்து குலுங்கியது. அவள் கண்ணோரத்தில் நீர் தளும்பியது.
"கண்ணைத் தொடைச்சுக்க மல்லி, சட்டுன்னு எமோஷனலாயிடற? அப்புறம் டக்குன்னு கண் கலங்கற; பசங்க பாத்தா அம்மா அழறாளேன்னு அதுங்க மனசு பதறிபோகும். ரெண்டும் உன் மேல உசிரையே வச்சிருக்குதுங்க."
எதையோ சொல்லவந்தவள், உணர்ச்சிகளின் உந்துதலால் பேச குரல் எழும்பாமல் விசும்பினாள்.
"மீனா வர மாதிரி இருக்கு; பேசாம சாப்பிடு, எதுவாயிருந்தாலும் நம்ப ரூம்ல போய் பேசிக்கலாம்," நடராஜன் அவள் வலது தொடையை அழுத்தினார்.
வெரண்டாவில் வெறும் தரையில் படுத்திருந்த செல்வாவிடம் தட்டில் நாலு இட்லியையும் சட்னியையும் வைத்துக் கொடுத்துவிட்டு மீனா அவன் பக்கத்திலேயே உட்க்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.
"அண்ணா, போன்ல யார்கிட்ட எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னு சொன்ன. அண்ணியோட கோவம் தீர்ந்து போச்சா? சுகன்யாதான் கால் பண்ணாளா?" அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள்.
"மீனா என்னை சும்மா வம்புக்கிழுக்காதடி, என் மூடு சரியில்லை அப்புறம் நான் முரடனாயிடுவேன்"
" இனிமேல் தான் நீ முரடனாக போறியா? அப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன கையை ஆட்டிகிட்டு அம்மாவை அடிக்க போறவன் மாதிரி ஓடி தடுக்கி விழுந்து நெத்தியை பேத்துகிட்டயே, அப்ப என்ன மனுசனா இருந்தியா?"
செல்வாவுக்குத் தான் கால் தடுக்கி தலைக்குப்புற பள்ளத்தில் விழுந்தது போலிருந்தது.
"நான் அம்மாவை அடிக்கப் போனேனா? என்னடி உளர்ற?"
"அப்ப யார் உன்னைப் பார்த்திருந்தாலும் அப்படித்தான் நினைச்சிருப்பாங்க."
"என்னாடி இது எனக்கு நேரமே சரியில்லைடி, நான் எழுந்து போய் அம்மா கால்ல விழுந்து, கை எடுத்து கும்பிட்டு, கொஞ்ச நேரம் பேசாம இரும்மான்னு கேக்க நினைச்சேண்டி: நான் எது பண்ண நினைச்சாலும் பண்றதுக்கு முன்னாடியே அது அனர்த்தமா முடியுது" அவன் தட்டிலேயே தன் கையை கழுவினான்.
மீனா அவன் தட்டையும், தான் சாப்பிட்ட தட்டையும் எடுத்துக் கொண்டுபோய் கிச்சன் சிங்கில் போட்டுவிட்டு, காய்ச்சிய பாலை இரு கிளாஸில் ஊற்றி எடுத்துக்கொண்டு, நடராஜனின் அறைக்குள் நுழைந்தாள்.
நடராஜன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருக்க, மல்லிகா வெறும் தரையில், கையைத் தலையணையாக வைத்து காலை அகட்டிப் படுத்திருந்தாள்.
"அம்மா, மழை பேஞ்சு தரை சில்லுன்னு இருக்கு, எழுந்திரும்மா, கட்டில்ல படுத்துக்க," அதற்கு மேல் எதுவும் பேசாமல் பால் டம்ளர்களை மல்லிகாவின் பக்கத்தில் வைத்தவள், அறைக்கதவை தன் பின்னால் இழுத்துக்கொண்டு ஹால் விளக்கை அணைத்துவிட்டு வெரண்டாவிற்கு வந்தாள்.
"இப்ப சொல்லுடா அண்ணா, யார் கால் அது?"
பசியடங்கியவுடன், செல்வாவுக்கு மனம் லேசானது போலிருந்தது. மூளை நிதானமாக யோசிக்க ஆரம்பித்தது. தங்கையிடம் இதமாக பேச ஆரம்பித்தான்.
"சுகன்யாவோட, தாய் மாமா ரகுராமன், உங்களை பாக்கணும், நாளைக்குப் ப்ரீயான்னார். அவளுக்கு மட்டும் தான் குசும்பு பண்ணத் தெரியுமா? எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னேன்? அந்த ஆள் அசரவேயில்லை; நான் தான் அசந்து போயிட்டேன். அப்படியா தம்பி? ரொம்ப நல்லது ராத்திரி பூரா யோசனை பண்ணுங்க, அப்படியும் நினைவுக்கு வரல்லன்னா, ஒரு மிஸ்டு கால் குடுங்க, நாளைக்கு சுகன்யாவோட உங்க வீட்டுக்கு வரேன், நேர்ல பாத்தா உங்களுக்கு ஞாபகம் வந்துடும்னு சொன்னாரு. ஆனா அந்தாளு என்னை மிரட்டல: குரல்ல கோவம் இல்ல, பரபரப்பு இல்ல, ரொம்ப அமைதியா பேசினார்."
"அதாண்டா ஒரு பெரிய மனுசனுக்கு லட்சணம். ஆனா இது மாதிரி ஆளுங்க ரொம்ப டேஞ்சரானவங்கன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. மீனா! உங்கப்பா சாதுடி, ஆனா அவரு மிரண்டா எதிர்ல நிக்க முடியாதுன்னுவாங்க. ஜாக்திரதைய இரு, இன்னொரு தரம் அந்தாளுகிட்ட மொக்கை போடாதே." அவள் சிரித்தாள்.
"செல்வா, நம்ம அப்பாவும் காலையிலேருந்து ஒரு தரம் கூட கோபப்படவே இல்லை பாத்தியா? அமைதியா வீட்டுல நடக்கற கூத்து எல்லாத்தையும் பாத்துட்டு இருந்தாரு. நான் காலையில நீ குடுத்த சுகன்யா போட்டோவை அவருகிட்ட காமிச்சேன்; அவருக்கு அவளை பிடிச்சு போச்சுடா, அம்மா கிட்ட கூட சொன்னாரு, பொண்ணு அழகா இருக்காடி, அவங்க கூட அவ அப்பா இல்லன்னா என்ன, இவளையும் தான் ஒரு தரம் பாப்போமேன்னார்"
"நிஜமாவா சொல்றே? அப்ப நம்ம வீட்டுல பாதி பிரச்சனை முடிஞ்சு போச்சா?" அவன் மனதுக்குள் மதிழ்ச்சியானான்.
"நான் ஏண்டா பொய் சொல்றேன்?"
"ஏண்டி அம்மா பாத்தாங்களா அவ போட்டோவை"
"அம்மாவா? அவங்க பாக்கலைடா... பல்லைக்காட்டி கிட்டு அந்த எடுபட்டவ படத்தை பாத்து பாத்து பூரிச்சு போறீங்களான்னு அப்பாவையே ஒரு ஏறு ஏறினாங்க"
"இப்ப என்னடி பண்றது? வீட்டுல ஏற்கனவே பூகம்பம் வந்த மாதிரி இருக்கு; நாளைக்கு அவ மாமா சுகன்யாவோட நம்ம வீட்டுல நுழைஞ்சா என்னாகும்ன்னு தெரியலை. சுகன்யா, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு கூச்சல் போட்டுட்டு போனா, அதுக்குள்ள அவளை எப்படி அவர் தன் லைனுக்கு கொண்டாந்தார். அவ மாமா எப்ப சீன்ல வந்தாரு, எல்லாத்துக்கும் மேல நானும் சுகன்யாவும் லவ் பண்ற விஷயம், ஜானகிக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு ஒன்னும் புரியலடி. நீ வேணா சுகன்யாவுக்கு ஒரு தரம் போன் பண்ணி என்ன ஏதுன்னு கேக்கறயா? அவ இன்னும் தூங்கியிருக்க மாட்டா"
"ஐயோ நம்பளை ஆளை விடுப்பா, எனக்கு தூக்கம் வருது. காலையிலேயே அம்மா, நான் உன் கூட கூட்டு சேர்ந்துகிட்டு அவங்களுக்கு எதிரா சதி பண்றேன்னு என் மேல கோவப்பட்டா" என்று சொல்லிக்கொண்டே அவள் எழுந்தாள்.
"மீனா குட்டி, என்னை நட்டாத்துல வுட்டுட்டு போறியேடி, அட்லீஸ்ட் என்ன பண்ணலாம்ன்னு ஒரு ஐடியாவாது குடுடி" அவன் கெஞ்சலாக பேசினான்.
"அண்ணா, தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு, இனி பயந்து என்னடா பிரயோஜனம். காலையில அந்த ரகுராமனை பாத்து பேசேன். அவருதான் நல்லபடியா பேசறாருங்கற; சுகன்யா ரூம்ல தான் அவரு தங்கியிருக்கப் போறாரு; நீ போய் பாத்துட்டு வா, உன் ஆளையும் பாத்து ஒரு வணக்கம் போட்டுட்டு வந்த மாதிரி இருக்கும். அவளும் உன்னைப் பாத்தானா, அவளுக்கு மிச்சம் இருக்குற கோபமும் போயிடும்" அவள் அவனைப் பார்த்து கிண்டலாக கண்ணடித்தாள்.
"அவர் சொல்றதை பொறுமையா கேட்டுட்டு வந்து அப்பாகிட்ட சொல்லு; அப்படி அவரு நம்ம அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னா, ஒரு பத்து நாளைக்கு பொறுத்துக்க சொல்லு. அதுக்குள்ள நம்ப அம்மா கோபம் தணிஞ்சிடும். ஜானகியும் உன்னை வேணான்னுட்டா: மிஞ்சியிருக்கறது சுகன்யாதான்:" அவள் மீண்டும் நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
"என்ன கிண்டலா, இப்ப எதுக்கு நீ நமட்டுத்தனமா சிரிக்கிற?"
மீனா பதில் ஏதும் சொல்லாமல் தன் அறையை நோக்தி நடந்தாள்.
"ம்ம்ம்... மீனா நிஜமாவே நம்பளை விட புத்திசாலிதான்; எதையும் சுலபமா நறுக்கு தெறிச்ச மாதிரி பேசி முடிவெடுக்குறா: மீனா சொல்ற மாதிரி காலையில் சுகன்யாவின் மாமாவை போய் பாத்தா என்ன?"
செல்வா நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். வெரண்டா கதவை மூடிக்கொண்டு, விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். ஹாலை கடந்து செல்கையில், மல்லிகாவும் நடராஜனும், அவர்கள் அறையினுள் பேசிக்கொண்டுருக்கும் சத்தம் மெலிதாக கேட்டாது.
'சாரிம்மா, இன்னைக்கு நான் உன்னை ரொம்ப அழவச்சுட்டேன்... எனக்கு வேற வழியில்லம்மா.. சுகன்யாவை என்னால மறக்கமுடியாதும்மா...'
மனதுக்குள் தன் விதியை நொந்தவாறு தன் அறையை நோக்கி நடந்தான்.
தொடரும்...
Comments
Post a Comment