முழு தொடர் படிக்க கனகா வேகமாக தலையில் தண்ணீரை ஊற்றிக் குளித்து முடித்தாள். குளித்ததும், அவசர அவசரமாக இட்லி குக்கரை அடுப்பில் ஏற்றினாள். பட்டுப்புடவையொன்றை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு, ஈரத்தை இழுக்க ஒரு பருத்தி துண்டை தலையில் சுற்றியவாறு தெரு வரந்தாவிற்கு வந்தாள்.
'மணி எட்டரை ஆயிடுச்சு. பசி தாங்க மாட்டாரே? சத்தத்தையும் காணோம், உக்காந்துக்கிட்டே தூங்கிட்டாரா?'
கிச்சனுக்கு சென்று வெந்த இட்லிகளை எடுத்து ஹாட் கேசில் வைத்து மூடிய கனகா திரும்பி வந்து பார்த்த போது சிவதாணு தூங்கிக்கொண்டிருந்தார். சிவதாணுவின் விழிகள் மூடியிருந்தது. சன்னமான குறட்டையொலி அவர் கண்டத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. தலை நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தது.
பத்து நிமிடம் இப்படி தூக்கத்திலிருப்பார். தெருவில் ஸ்கூட்டர் வேகமாக சத்தத்துடன் போகும். சடக்கென விழித்துக்கொள்வார். சிவா சிவா; என் அப்பனே, வாய் முனகும். மனைவியை கப்பிடுவார்.
“என்ன வேணும்?" குரல் மட்டும் வரும். கனகா வரமாட்டாள். கனகா டிவியில் எதையாவது பார்த்துக்கொண்டுருப்பாள்.
கூப்பிட்ட குரலுக்கு பதில் கிடைத்தால், “நீ இருக்கியான்னு பார்த்தேன்" என்று முனகுவார். பக்கத்திலிருக்கும் கைவிசிறியை மெதுவாக சுழற்றிக்கொண்டிருப்பார். பின் தேவாரம், திருவாசம் என்று ஏதாவது ஒரு திருமுறையை கையில் எடுத்துக்கொள்வார். தூங்கி வழிவார். புத்தகம் கையிலிருந்து நழுவி கீழே விழும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த நாடகம் தவறாமல் அரங்கேறும்.
கம்பிக்ககவை திறந்துகொண்டு, காம்பவுண்டுக்குள் நின்றவாறு தலையை உலர்த்த ஆரம்பித்தாள் கனகா. தலை தும்பைப் பூவாக வெளுத்திருந்தது. நெற்றியில் விபூதியும், குங்குமம் பளபளத்தன. கைகள் அசையும் வேகத்திற்கேற்ப, மூன்று ஜோடி தங்க வளையல்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி கிணுகிணுத்தன. கிழவியின் கழுத்தில் பத்து சவரனுக்கும் குறையாத கனத்தில் தாம்புகயிறு செயின் ஆடிக்கொண்டிருந்தது. அம்பாள் டாலருடன் அதை விட இன்னோரு மெல்லிய செயின் அதனுடன் பின்னிக் கொண்டு இளம் மஞ்சள் வெயிலில், மினுமினுத்துக்கொண்டிருந்தது. மஞ்சள் கயிற்றில் கோத்திருந்த தாலி மட்டும் ரவிக்கைக்குள் கனகாவின் மார்பில் எப்போதும் உறவாடிக்கொண்டிருக்கும்.
பேத்தியின் பிறந்த நாள் வரும்போது எல்லாம் கனகா ஒரு தங்க காசை வாங்கி அவளுக்கென தனியாக வைத்துவிடுவாள். பொங்கல், தீபாவளி, பண்டிகை நாட்களில், கணவருக்கு கிடைத்த போனஸ், சிறுக சிறுகத் தங்கமாக மாறி லாக்கரில் பேத்தியின் வரவை நோக்கி காத்திருந்தன.
'இதுவரைக்கும் எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டது இல்லை. என்னவோ பண்ணிட்டுப் போறா?' என்று சிவதாணு தன் மனைவியின் இந்த விஷயத்தில் எப்போதும் தலையிட்டதில்லை.
'எல்லாம் பேத்திக்குத்தான். என்னைக்காவது வீட்டுக்கு வரமாட்டாளா? பாட்டீன்னு ஆசையா கூப்பிடமாட்டாளா?' இந்த ஒரு ஆசையைத் தவிர கனகாவின் மனதில் வேறு எந்த விருப்பமும் இல்லை. எதிலும் ஆசையில்லை. பற்றில்லை. எல்லாவற்றையும் உதறிவிட்டு ஓடுவதற்கு மனம் துடித்துக்கொண்டிருந்தது.
தறிக்கொண்டு வந்த அந்த ஆட்டோ, எதிர் வீட்டு வாசலில் க்றீச்சிட்டு நின்றது. கனகா நிமிர்ந்தாள்.
"ம்ம்ம்... விருந்து வருதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். காக்கா பட்டு மாமி வீட்டைப் பாத்து கரைஞ்சிருக்கு. அவங்க வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க." கனகாவின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
ஆட்டோவிலிருந்து இறங்கிய, மஞ்சள் நிற சுடிதாரும், பச்சை நிற கமீஸும் அணிந்திருந்த இளம் பெண், பர்ஸைத் திறந்து பணம் எடுத்துக்கொண்டிருக்க, சிவப்பு பட்டு உடுத்தி, வெள்ளை நிற ஜாக்கெட்டில், ஒரு நடுத்தர வயது பெண்மணி கையில் பையுடன் இறங்கிக்கொண்டிருந்தாள்.
"யாருன்னுத் தெரியலையே, ஆள் தெரியுது, முகம் தெரியலையே... கண்ணாடி போட்டாத்தான் முகம் தெரியற நிலைக்கு பார்வை வந்தாச்சு... பகவானே இன்னும் எத்தனை நாளைக்கு... இதெல்லாம்..?" கனகாவின் மனம் நொந்துகொண்டது.
ஆட்டோ நகர்ந்ததும், தெருவின் இரு புறத்தையும் பார்த்துக்கொண்டே, அவர்கள் சிவதாணுவின் வீட்டை நோக்கி, சாலையை கடக்க ஆரம்பித்தவுடன், கனகாவின் மனம் துள்ளியது...
"நம்ம வீட்டுக்குத்தான் விருந்தாளியா... அவர் சொன்னது சரியாப் போச்சே? யாரு?... சுந்தரி மாதிரி தெரியுதே? சுந்தரிதானா? அப்ப கூட வர்றது... சுகன்யாவா? என் பேத்தியா?" அவள் கண்களை அவள் நம்பவில்லை. உடல் பரபரக்க காம்பவுண்டு கதவை நோக்கி ஓடினாள் கிழவி.
“வாம்மா கண்ணு... சுகன்யா.. வாடி என் கண்ணு... சுந்தரி... நீயும் உள்ள வாம்மா... வா.." கனகா, பதட்டத்தில் குரல் தடுமாற காம்பவுண்ட் கதவை திறந்து, சுகன்யாவை இழுத்து தன் மார்போடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.
“நல்லாயிரக்தங்களா அத்தை..." சுந்தரி பரிவுடன் வினவினாள்.
“எனக்கென்னம்மா... நீ நல்லாயிருக்கியா.. அதைச் சொல்லும்மா..." தன் மருமகளை ஒரு கையால் பற்றி தன் புறம் இழுத்துக்கொண்டாள்.
“என்னங்க... தூங்கினது போதும்... எழுந்துறிங்க... யார் வந்திருக்கறதுன்னு பாருங்க... நீங்க கொஞ்சம் தப்பா சொல்லிட்டீங்க; நீங்க சொன்ன மாதிரி நம்ம வீட்டுக்கு விருந்தாளி வரலீங்க; இந்த வீட்டுக்க முழு உரிமை உள்ளவங்க வந்திருக்காங்க.." கிழவி சின்னப் பெண்ணாக துள்ளினாள்.
“தாத்தா... உங்களைப் பாக்கறதுக்கு நான் சுகன்யா வந்திருக்கேன் தாத்தா...'
“வாடா கண்ணு... சுகன்யா... உன் அம்மா வல்லியாம்மா?" கிழவர் பரபரத்தார்.
“வந்திருக்காங்க தாத்தா: இதோ பின்னாடி வர்றாங்க..." சுகன்யா, ஈஸிசேரிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்த தன் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டாள்.
சிவதாணுவின் உடல் சிலிர்த்தது. 'என் ரத்தம் இது. என் ரத்தம் என்னைத் தொட்டதும், என் உடம்பு அடையாளம் கண்டுகிச்சே?' சுகன்யாவின் புறங்கையில் பாசமுடம் முத்தமிட்டார் சிவதாணு.
சுந்தரி காம்பவுண்ட் கதவை மூடிக்கொண்டு தன் வீட்டுக்குள் நுழைந்தாள். வாசல் படியில் ஒரு நொடி தயங்கி நின்றாள்.
'அன்னைக்கு தாலி கட்டிக்கிட்டு, என் புருவனோட இந்த இடத்துலதான் வந்து நின்னேன்! அப்ப இந்த கம்பி கதவு எதுவும் இல்லே: என் மாமனாரும், இன்னைக்கு எங்க நிற்கிறாரோ அங்கதான், தலையில கையை வெச்சிக்கிட்டு, ஏதோ குடிமுழுகிப் போன மாதிரி, அந்த சுவத்துல சாய்ஞ்சு உக்காந்து இருந்தார். அன்னைக்கு எனக்கு இந்த வீட்டுல எந்த வரவேற்பும் இல்லை. இன்னைக்கு...' சுந்தரியின் மனது ஒரு நொடி பழைய நினைவில் மூழ்தி நின்றது. அவள் கால்கள் சற்றேத் தயங்கி நின்றன.
“அம்மா சுந்தரி, ஏம்மா தயங்கி தயங்கி இன்னும் வெளியிலேயே நிக்கறே; உள்ள வாம்மா; இது உன் வீடும்மா; உள்ளே வாம்மா..."
அன்று உள்ளே வராதே என்று சிங்கமாக கர்ஜித்தவர், இன்று கன்றுக் குட்டியாக தன் குரல் தழுதழுக்க சுந்தரியை வீட்டுக்குள் அழைத்தவாறு அவளை நோக்கி ஒரு தப்படி எடுத்து வைத்தார். சுந்தரியை நோக்கி நடக்க ஆரம்பித்தவர், உடல் பரபரத்து நடை தடுமாறி, தன் மருமகளை நோக்கி இருகைகளையும் கூப்ப முயற்சித்தார்.
“மாமா... நான் தான் வந்துட்டேனே மாமா.. நீங்க உக்காருங்க" தன்னை நோக்கி உயர்ந்த அவர் கரங்களை சுந்தரி தன் கையால் வேகமாகப் பிடித்துக்கொண்டாள்.
மருமகளின் கை தன் உடலில் பட்டதும், சிவதாணுவின் உடல் நடுங்கியது. சுந்தரி அவரை ஈஸிசேரில் உட்க்கார வைத்தாள். தானும் அவர் பக்கத்தில் தரையில் உட்க்கார்ந்து கொண்டாள். கண்கள் குளமாக உணர்ச்சிப் பெருக்கில் இருந்த தன் மாமானாரின் கையை தன் கைகளால் மெல்ல வருடினாள்.
“அம்மா சுந்தரி, நான் உன்னை தப்பா பேசிட்டேம்ம்மா... நீ எங்க மேல கோவமா இருந்ததுல ஞாயமிருக்கு..." சிவதாணுவின் நாக்கு பேச முடியாமல் குழறியது. தன் இடது கையால் தன் மருமகளின் தலையை பாசத்துடன் வருடியவாறு பேசினார்.
“மாமா.. ப்ளீஸ்... மாமா! நீங்க எனக்கு எந்த விளக்கமும் குடுக்க வேண்டாம். நீங்க தான் என்னை மன்னிக்கணும். அஞ்சு வருஷம் முன்னாடியே நீங்க ரகு மூலமா என்னை வீட்டுக்கு வான்னு கூப்பிட்டீங்க. அன்னைக்கே நான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கணும். ஆனா நான் தான் பிடிவாதமா வரலே. தப்பு என்னுதுதான். ஆனா அதுக்கு ஒரு காரணமிருந்தது."
“என்னம்மா சொல்றே நீ"
“அப்ப உங்க மகன் என் கூட இல்லை. நான் எந்த உரிமையில நான் இந்த வீட்டுல நுழையறதுன்னு தயங்கினேன். ஆனா உங்க மகன், என் புருஷன் இப்ப என்கிட்ட திரும்பி வந்துட்டார். நானும் உடனே உங்க பேத்தியை அழைச்சுக்கிட்டு உங்களைப் பாக்க, ஓடி வந்துட்டேன். ப்ளீஸ்... இப்ப நீங்க எதுவும் பேச வேண்டாம். எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை."
சிவதாணு தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அமைதியாக தன் மருமகளைப் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
“கண்ணு சுந்தரி... அன்னைக்கும் என் பேத்தி உன் கூடத்தான்ம்மா இருந்தா.. அவளே நீ இந்த வீட்டுல உரிமை கொண்டாட போதுமான அத்தாட்சிமா.. எப்படியோ நேரம் வந்தாத்தான் எதுவும் நடக்கும்ம்மா... பழசெல்லாம் எதுக்கு இப்ப... நீ வந்துட்டே. அதுவே எனக்குப் போதும்..."
“மாமா, ஒரு நிமிஷம் இப்படி எழுந்து நில்லுங்களேன். அத்தை நீங்களும் இப்படி மாமா பக்கத்துல வந்து நில்லுங்க..."
“என்னங்க... உள்ளே கூடத்துக்கு வாங்க... இப்பத்தான் நான் சுவாமிகிட்ட விளக்கேத்தி வெச்சுட்டு வந்திருக்கேன். உள்ள வந்து குழந்தைகளை ஆசிர்வாதம் பண்ணுங்க." மருமகளின் மனதில் ஓடிய எண்ணத்தைப் மின்னலாக புரிந்து கொண்டாள் மாமியார்.
சுகன்யாவின் கையை பிடித்துக்கொண்ட சுந்தரி, தன் வீட்டுக்குள் உரிமையுடன் தலை நிமிர்ந்து, பெருமிதத்துடன் நுழைந்தாள். சிவதாணுவும், கனகாவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மனதில் மதிழ்ச்சியுடன் சுந்தரியின் பின் வீட்டுக்குள் நடந்தனர்.
முதலில் சுந்தரி தன் மாமனார், மாமியார் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்தாள்.
சிவதாணு, "சிவாய நம..." என உதடுகள் முணுமுணுக்க அவள் நெற்றியில் விபூதியை ஒரு கீற்றாக பூசினார்.
குங்குமத்தை, தன் மருமகளின் நெற்றியில் வைத்த கனகா... "நல்லாயிரும்மா.." என்று சொல்லிக்கொண்டே தன் கழுத்தில் கிடந்த தாம்புகயிறு சங்கிலியை உருவி தன் மருமகளின் கழுத்தில் போட்டாள். கையிலிருந்து ஒரு ஜோடி வளையலையும் கழட்டி சுந்தரியின் கையில் பூட்டினாள்.
“அத்தை... இப்ப எதுக்கு இதெல்லாம்..."
“சுந்தரி, இங்க இருக்கறது எல்லாமே உங்களுக்குத்தான்... இப்ப என் மனசு குளுந்து இருக்கும்மா... நான் குடுக்கறதை வேண்டாம்ன்னு சொல்லாதேம்ம்மா" கனகா மனம் நெதிழ்ந்து பேசினாள்.
“சுகா... என்னடி பாத்துக்கிட்டு நிக்கறே; பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கடி..."
“பாட்டி... எனக்கு என்ன குடுக்கப் போறீங்க... எல்லாத்தையும்தான் அம்மா கழுத்துலயும், கையிலேயும் போட்டுட்டீங்களே?" சிரித்தவாறு நமஸ்காரம் செய்து எழுந்த சுகன்யா, தன் பாட்டியை கட்டிக்கொண்டு, கனகாவின் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.
கனகா, சுகன்யாவை தன்னுடன் அணைந்துக்கொண்டு அவள் காதில் ரகசியம் சொன்னாள்...
"உனக்கு நான் நிறைய வெச்சிருக்கேன்.. கவலைப்படாதே... இப்போதைக்கு இதுங்களை போட்டுக்கோ..." தன் கழுத்தில் கிடந்த டாலர் செயினையும், ஒரு ஜோடி வளையலையும் கழட்டி அவள் கையில் கொடுத்தவள், தன் பேத்தியின் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். அவள் உச்சி முகர்ந்தாள்.
“சுகன்யா, ரெண்டு கையிலேயும் பை வெச்சிருந்தியே.. தாத்தாவுக்கு என்னம்ம்மா கொண்டாந்துருக்கே?'
“தாத்தா... உங்களுக்கு பொங்கல், வடை பிடிக்கும்ன்னு... அம்மா செய்து கொண்டாந்து இருக்காங்க. சாப்பிடலாம் வாங்க தாத்தா..."
“கனகா.. இனிமே உன் தயவு எனக்கு வேணாம்டி... என் மருமவ வந்துட்டா... எனக்கு பிடிச்சதை அவகிட்ட கேட்டு சாப்பிட்டுக்கிறேன்... உப்பு இல்லாம, புளிப்பு இல்லாம, உறைப்பு இல்லாம, நீ பொங்கிப் போடறதுலேருந்து எனக்கு விடுதலை கிடைச்சாச்சு."
“ஆமாம். நாளைக்கு திங்கக்கிழமை... உங்க மருமகளுக்கு ஸ்கூல் உண்டு... சுவத்து நரையை வழிச்சு போடுடின்னு... நாளைக்கு திரும்பியும் நீங்க இந்த கனகாகிட்டத்தான் வரணும்..." மனம் நிறைந்திருந்த கிழவி, கிழவரை கிண்டல் செய்து சிரித்தாள். சுந்தரியும் சுகன்யாவும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்கள்.
அன்று சிவதாணுவின் வீட்டில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
'இன்னைக்கு ஞாயித்துக்கிழமை... சாயந்திரம் என் குழந்தைகளை ஒண்ணா நிக்க வச்சு சுத்திப் போடணும்... என் கண்ணே பட்டுடக்கூடாது' கனகா தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
சுந்தரியும் சுகன்யாவும் மாலை வரை அவர்களுடன் இருந்துவிட்டு இரவில் வீடு திரும்பினர்.
இரவு சாப்பாடு முடிந்தது. சுகன்யா நாடாக் கட்டிலை நடு மாடியில் விரித்தாள். மெல்லிய வாடைக்காற்று சிலு சிலுவென வீசிக்கொண்டிருந்தது. அடித்தக்காற்றில் அணிந்திருந்த நைட்டி உடலின் மேடு பள்ளங்களில் ஓட்டிக்கொண்டது.
'இன்னும் பத்து நாள்ல குளிர ஆரம்பிச்சிடும். இப்படி திறந்த வெளியில ஹாயா நிக்கறதோ, படுத்துக்கறதோ சிரமம்தான்'
காற்றில் பறந்த தன் முடிக்கற்றைகளை முகத்திலிருந்து ஒதுக்கி காதுக்குப்பின்னால் தள்ளிக்கொண்டாள். தோட்டத்திலிருந்து காற்றில் அடித்த துளசி, பவழமல்லியின் வாசம் அவள் நாசியைத் தாக்கி மனதில் அமைதியைத் தந்து கொண்டிருந்தது.
கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு கீழே தோட்டத்தை எட்டிப்பார்த்தாள் சுகன்யா. சுந்தரியின் வியர்வை தோட்டத்தில் வாழையாக குலைத் தள்ளி, முருங்கையாக காய்த்து, செம்பருத்தியாகவும், நந்தியாவட்டையும், மல்லிகையுமாக மலர்ந்திருந்தன.
எவ்வளவு பூ பூத்துக்குலுங்கினாலும், சுந்தரி ஒரு நாள் கூட தன் தலையில் சூடிக்கொண்டதில்லை. எல்லாம் அந்த தெரு கோடி பிள்ளையாருக்குத்தான் கிள்ளி மாலையாக்கி சமர்ப்பித்துக் கொண்டிருந்தாள். கடைசியில் அந்த கணேசரும், தன் கண் திறந்து குமாரை அவளிடம் திருப்பி அனுப்பிவிட்டார்.
'அப்பா வந்துட்டார். அப்ப வினாயகர் கோட்டா முடிஞ்சுப் போச்சா? அம்மா நவகிரகத்தை சுத்தற வேலையை விட்டுடுவாளா? இனிமேலாவது அம்மா தன் தோட்டத்து மல்லியை தலையில வெச்சுக்குவாளா? அம்மா சாப்பிட்டுட்டு மாடிக்கு வரட்டும்... கேக்கிறேன்?' சுகன்யாவின் முகத்தில் கேலிப்புண்கையொன்று தவழ்ந்தது.
கிராமத்துக்கு வந்தால் சுகன்யாவின் வாசம் எப்போதும் மாடி அறையில்தான். அது என்னவோ தெரியவில்லை மாடியறை கோடைக் காலத்தில், பகலில் தகிக்கும் செங்கல் சூளையாயிருந்தாலும், மாடி அறைகள்தான் அவளுக்கு மிகவும் பிடிக்கிறது. ஹாஸ்டலில் தங்கிப் படித்தக் காலத்தில், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதும், படித்து டிகிரி வாங்கி, வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்த காலத்திலும், சுகன்யா இந்த மாடியில்தான் தன் நேரத்தைக் கழிப்பாள்.
“சுகா, நீ நாலு நாளைக்கு மேல வீட்டுல சேந்தாப்பல இருக்கறது இல்ல. அந்த நாலு நாள்லேயும் ஏண்டி எப்பவும் அந்த மாடியில போய் ஏறிக்கிறே? செத்த நேரம் ஹால்லே உக்காந்து வாயாடினா எனக்கும் பொழுது போகுமில்லே?" சுந்தரி புலம்புவாள்.
“இத்தனை நாள்தான் படிக்கிறேன் படிக்கிறேன்னு கதை சொல்லிக்கிட்டு இருந்தே? கிச்சன்ல கூட மாட நின்னு வீட்டு காரியங்களையும் கொஞ்சம் கொஞ்சம் பழலினாத்தான், கல்யாணம் ஆதி இன்னொரு வீட்டுக்கு போனா சுலபமா இருக்கும்." சுந்தரியின் பெருமல்கள் பெண்ணின் முன் விழலுக்கிறைத்த நீர்தான். சுகன்யா தாயின் முனகல்களை காதில் வாங்கிக் கொள்ளாமல், கள்ளக்குரலில் சினிமா பாடல்களை முனதியவாறு, மாடியில் நடை பழகுவாள்... தனிமையில் இன்பம் கண்டு கொண்டிருப்பாள்.
சுகன்யா தலையணையை இரண்டாக மடித்து, தலைக்கு கீழே, உயரமாக போட்டு வசதியாக சாய்ந்து கொண்டாள். சென்னையிலும், மாணிக்கத்தின் வீட்டு மாடியில் அவள் விருப்பத்துக்கேற்றவாறு இடம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அவளுக்கு.
'செல்வா வீட்டு மாடியில் இப்படி ஒரு ரூம் இருக்கான்னு அவனை கேக்கணும்? அந்த ரூமை எங்களுக்குன்னு வெச்சுக்கணும்.'
'அடியே சுகன்யா, நீ இப்பவே பைத்தியம் மாதிரி என்னன்னமோ பகல் கனவு காணறே? மல்லிகா மனசுல என்ன ஓடிகிட்டு இருக்குன்னு யாருக்கும் தெரியலை. செல்வாவை பார்த்துட்டு வந்த அப்பா, “வெரி குட் செலகூன்"ன்னு முதுகை தட்டிக்குடுத்து சிம்பிளா பேச்சை முடுச்சுட்டார்.
அம்மா கேட்டதுக்கு, “எனக்கு ஒரு பெண் இருக்கா, அவளை உங்கப் பையனுக்கு பிடிச்சிருந்தா பாருங்கன்னு" சொன்னேங்கறார்.
சுகன்யா என் பொண்ணுதான்னு ஓப்பனா நடராஜன் கிட்ட ஏன் சொல்லலை? ஏன் அப்பா இப்படி புதிரா பேசிட்டு வரணும்?' இது மட்டும் சுகன்யாவுக்கு பிடிபடவில்லை.
கீழே ஹாலில் மாமா ரகுவிடம் அம்மா சத்தமாக பேசிக் கொண்டிருந்தாள். அவள் குரலில் மகிழ்ச்சியும், உல்லாசமும் கரைபுரண்டு கொண்டிருந்தது. முகம் சிவந்து பெருமிதத்தில் பளபளத்திருந்தது.
கணவன், சென்னையில் தானாக திடீரென தன்னைப் பார்க்க வந்தது! மூவருமாக காஞ்சீபுரம் காமாட்சியம்மனைத் தரிசனம் பண்ணியது! ஆசை ஆசையாக தனக்கும், தன் பெண்ணுக்கும், பட்டுப் புடவைகள் வாங்கிக் கொடுத்து, மாமல்லபுரத்துக்கு அழைத்து சென்றது! குமார் தங்களுடன் விதவிதமாக போட்டோக்கள் எடுத்துக்கொண்டது! பெண்ணுடன் கடல் நீரில் குதித்து விளையாடியது என சுந்தரி தம்பியிடம் ஒன்று விடாமல் பெருமையடித்துக் கொண்டிருந்தாள்.
சுகன்யா, மல்லாந்து படுத்து வானத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.
'நிலவை ஏன் இன்னும் காணவில்லை? வானம் முழுவதும் எண்ணற்ற நட்சத்திரங்கள் சிறிதும் பெரிதுமாக அவளைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டிருந்தான்னு கதையில எழுதறாங்களே உண்மையிலேயே எண்ணிப் பார்க்க முடியுமா? நட்சத்திரங்களை எண்ணியவர்கள் யாராவது இருக்கிறார்களா? மொத்தம் ஆகாசத்துல எத்தனை நட்சத்திரங்கள் இருக்குதுன்னு கணக்கு இருக்கா? கூள்லதான் தேடிப் பாக்கணும்.'
சுகன்யா நட்சத்திரங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று நிதானமாக எண்ணத்தொடங்கினாள். முப்பது வினாடிகளுக்குள் பொறுமையிழந்து எண்ணுதலை நிறுத்தி 'என்னால இதெல்லாம் முடியாது' என மனதில் தன் இயலாமையை நோக்கி சிரித்துக்கொண்டாள்.
'மொட்டை மாடியில் தனிமையில் படுத்து, இப்படி குருட்டுத்தனமாக எதையாவது யோசிச்சு, மனசுக்குள்ளே சிரித்து, விட்டேத்தியா நான் என்னுள் மூழ்கி எத்தனை நாளாச்சு?' அவள் மனம் சிலந்தி வலையாக விரிந்து கொண்டிருந்தது. மனமெனும் சிலந்தி வலையில் அன்று சிக்கியவன் செல்வாவும் அவன் நினைவுகளும்தான்.
'நினைவுகள். நினைவுகள். நினைவுகள். நினைவுகள் சுகமானவை. மனதில் மலரும் நினைவுகளை, சுவைச்சு, அசை போட்டு, மகிழறதுலதான் எத்தனை சுகம். என் மனசுல செல்வாவைப் பத்திய நெனப்புகளும் ஆசைகளும் கொஞ்ச நஞ்சமாவா இருக்கு? இந்த ஆசைகளெல்லாம் எப்ப கைகூடி வரும்? ஆசைகள், கனவுகளில் சட்டுன்னு நிறைவேறிடும். கனவுல அனுபவிக்கற சுகத்தை உடலும் அனுபவிக்குமா? சில சமயத்துல கனவுல நடக்கற நிகழ்ச்சிகளால் ஏற்படற சுகமோ, துக்கமோ, உடலும் அனுபவிக்கற மாதிரித்தான் இருக்கு. ஆசைகள் கூடி வரணும்ன்னா, உடலால அனுபவிக்கனும்ன்னா, செல்வாவும் என் கூட இருக்கணுமே? இப்பல்லாம் விடியற நேரத்துல அவன் நினைவுகள் எழுந்து என்னை செமையா இம்சை பண்ணுதே? சுகம்ன்னு இரவின் ஆரம்பத்துல நான் நினைக்கிற நினைவுகளே விடியல்ல என்னைக் கொல்லுதே?' காதல் வயப்பட்டவள் மனம், தன் காதலனின் அருகாமைக்காக துடித்துக்கொண்யடிருந்தது.
'இங்க வந்ததுலேருந்து என் மனசு ஏன் எதுலயும் ஒட்டமாட்டேங்குது? என்னமோ ஒரு புது எடத்துக்கு வந்துட்ட மாதிரி கண்ணு கொட்டின பாடில்லே. தன்னை மறந்த தூக்கம் வந்து, அந்த உறக்கத்துல நல்லதா ஒரு கனவு வரக்கூடாதா? அந்த கனவுலயாவது செல்வா என்னோட ஆசையா பேசக்கூடாதா? ஆசையா பேசறவன் மார்ல நான் என் தலையை சாய்ச்சுக்கிட்டு கண் மூடி நிம்மதியா தூங்கக்கூடாதா?'
நிலவு மெல்ல மெல்ல தன் ஒளியை வீசத்தொடங்கிவிட்டது.
'நிலா வந்துட்டு. நிலா ஆணா? இல்லை பெண்ணா? நிலவு ஒரு பெண்ணுன்னுதானே கவிகள் பாடறாங்க!' சுகன்யாவின் மனது மகிழ்ச்சியில் துள்ளியது.
'இன்னைக்கு நிலவு எவ்வள அழகா இருக்கு? நிலா வெளிச்சமே மனசுக்குள்ள “குளுகுளு" ங்கற உணர்ச்சியைக் குடுக்குதே? ஆனா இன்னைக்கு இந்த நிலா ஒரு சோகையான வெளிச்சம் கொடுக்குதே? பெளர்னமிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? இந்த நிலா மட்டுமில்லேன்னா, நெறைய காதலர்களும், கவிஞர்களும் திண்டாடித்தான் போயிருப்பாங்க. இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான்.' சுகன்யா தன் கண்ணிமைகளை மெல்ல மூடிக்கொண்டாள். ரெண்டு நாட்களாக சரியான உறக்கமில்லாததால் மூடிய விழிகளின் பின் எரிச்சல் இன்னும் மிச்சமிருந்தது.
'நான் அவனைப் பாக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கற மாதிரி செல்வாவுக்கும் என்னைப் பத்திய தவிப்பும், என்னை சந்திக்கணுங்கற ஆவலும் இருக்குமா?அவன் ஏன் எனக்கு ஒரு போன்கூட பண்ணலை?' அதை நினைக்கும் போது அவளுக்கு கோபம் தலைக்கேறி தலை வெடித்து விடும் போலிருந்தது.
'மல்லிகாவும் தன் புள்ளையை என்கிட்ட பேசவேணாம்ன்னு சொல்லி வெச்சிருக்காளா? அம்மா சொல்றதுதான் இவனுக்கு வேத வாக்கு: பயந்தாங்கோலி பய? எவ்வள நாள் தான் பேசாமா இருப்பான்? பேசறன்னைக்கு இருக்குது அவனுக்கு: கொடியேத்தி, வெடி போட்டு வான வேயிக்கை நடத்தறேன்!'
'ஒரு வாரமா அவனை நான் பாக்கலை: பேசலை; ஏன் இப்படி என் மனசு அவனை நெனைச்சு நெனைச்சு உருகிப் போவுது? ஒரு வாரம் கூட என்னால என் மனசை ஒரு கட்டுக்குள்ள வெச்சுக்க முடியலையே? அம்மா எப்படி முழுசா பதினைஞ்சு வருஷம் தன் துணையை பிரிஞ்சு இருந்தாங்க? நேத்து நான் பைத்தியக்காரி மாதிரி என் லவ்வர் கிட்டேருந்து போன் வரலேங்கற வெறுப்புல அவங்க மேல கோபப்பட்டேனே? அம்மாகிட்ட சாரி சொல்லணும்.' சுகன்யாவின் பார்வை வெட்ட வெளியில் நிலைத்திருந்தது.
“சுகா... எப்படியிருக்கேம்மா?" கேட்டப்படி மேலே வந்தார் ரகு.
“ம்ம்ம்... போரடிக்குது மாமா"
“ஏன்..."
“தெரியலை..."
“ஹூம்... தாத்தா, பாட்டி எல்லாரையும் பாத்துட்டு வந்தே போல இருக்கு?"
“ஆமாம்... மாமா. ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு ஆசையா இருந்தாங்க தெரியுமா?"
“சோ... யூ ஆர் ஹாப்பி.. டுடே..'
“ரொம்ப ரொம்ப... நாளைக்கு அம்மா ஸ்கூல் போனதும், நான் தாத்தா வீட்டுக்குப் போவப் போறேன்"
“சரி சரி... இங்க நீ தனியா என்னப் பண்ணப் போறே"
“ம்ம்ம்..."
“சாயந்திரம் அவருகிட்ட பேசினேம்மா" ரகு தன் தொண்டையைக் கணைத்துக்கொண்டார்.
“யாருகிட்ட..."
“செல்வா நேத்தைக்கு வீட்டுக்கு வந்துட்டானாம்..."
“அவன் பேச்சையே எங்கிட்ட எடுக்காதீங்க..."
“ஏம்மா கோபப்படறே?"
“வீட்டுக்கு வந்தவன் எனக்கா போன் பண்ணி வந்துட்டேன்னு சொன்னான். மேனர்லெஸ் ஃபெலோ" அவள் குரலில் சினம் தொனித்தது. விருட்டென எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்து கொண்டாள்.
அவள் குரலில் சற்றே கோபத்துடன் பேசிய போதிலும், 'அவன் நல்ல படியா வீட்டுக்கு வந்துட்டானா'னு அவள் மனசு மகிழ்ச்சியில் துள்ளியது. 'காலையில குளிச்சுட்டு, சுத்தமா, நாலு செம்பருத்தி பூவையும், பவழமல்லியும் எடுத்துக்கிட்டு போய் தெரு கோடி பிள்ளையாருக்கு சாத்திட்டு வரணும்.' என மனதில் நினைத்துக் கொண்டாள்.
“சரிம்மா... உங்கப் பிரச்சனையை நீங்களே பேசித் தீத்துக்குங்க" அவர் கேலியாகச் சிரித்தார்.
“அப்புறம்ம்.."
“நடராஜன், அந்த பைசாவை... அதாம்மா நாம அட்வான்ஸ் கட்டுனோமே... அந்த அமவுண்ட்டை என் பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்னு சொன்னாரு..."
"சரி..." சுகன்யா ரகுவின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“உன் அப்பாகிட்டயும் பேசிட்டேன். இந்த வீக் எண்டுல நடராஜனையும் அவங்க குடும்பத்தையும் நம்ம வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கேன்."
“ம்ம்ம்..."
“நடராஜன், தன் தம்பி கிட்டவும், மச்சான் கிட்டவும் உங்க கல்யாண விஷயத்தை ஏற்கனேவே பேசிட்டாராம். ஒரு நாள் டயம் குடுங்க, என் ஓய்ஃப் கிட்டவும் பைனலா பேசிடறேன்னார். நாளைக்கோ இல்லை, நாளை மறு நாளோ, எனக்கு போன் பண்றேன்னு சொன்னார்."
“சரி... மாமா..."
“ஏன் உற்சாகமில்லாம பேசறே?"
“ரகு, இவ இங்க வந்ததுலேருந்தே சிடு சிடுன்னு இருக்கா... என்னமோ, அங்க என் மாமியார் வீட்டுல ரொம்பவே சந்தோஷமா இருந்தா; திரும்பி வந்ததும் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கா." சுந்தரி குறுக்கில் பேசினாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா"
“சும்மா... சும்மா செல்வா கிட்ட பேசாத... இனிமே நாங்க எல்லாத்தையும் பாத்துக்கிறோம்ன்னு சொல்லி வெச்சிருந்தேன்: அவனும் என்ன காரணமோ, நாலு நாளா இவகிட்ட பேசலை போலயிருக்கு: அதான் மூஞ்சை கோணலாக்திட்டு எல்லார் மேலயும் எரிஞ்சு எரிஞ்சு விழறா!" சுந்தரி கேலியுடன் பேசினாள்.
“அம்மா நீ கொஞ்ச நேரம் உன் வாயை வெச்சுக்திட்டு சும்மாயிருக்கமாட்டே...?'
“சுகா... நீயும் உன் அம்மாவும் உங்க சண்டையை ஆரம்பிச்சிடாதீங்க" ரகு சிரித்தார்.
“அடியே; நான் சும்மாத்தான் இருக்கேன்... நீ என்னப் பண்றேன்னு உனக்கே நல்லாத் தெரியும்; மாமா இங்க மாடி ரூம்ல படுத்துக்கறாராம். நீ நேரா நேரத்துல கீழ வந்து படு; இங்க பனியா இருக்கு; ஈரக்காத்து உஸ்ன்னு அடிக்குது: உடம்பை கெடுத்துக்காதே. சுந்தரி மாடியை விட்டு இறங்கினாள்."
************************
“அம்மா..."
“...” சுந்தரி அப்போதுதான் தூக்கத்தை தழுவ ஆரம்பித்து இருந்தாள்.
“எம்ம்மா...'
“என்னாடி... தூங்கேண்டி சத்த நேரம். என்னையும் செத்த நேரம் தூங்க விடேன்." சுந்தரி திரும்பி படுத்தாள்.
“அம்மா... சாரிம்ம்மா!" சுகன்யா தாயின் இடுப்பில் தன் கையைப் போட்டுக்கொண்டாள். அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டாள்.
“என்னடா கண்ணு... இப்ப எதுக்கு தூங்கறவளை எழுப்பி சாரி சொல்றே?"
“நேத்து... தேவையேயில்லாம உன்கிட்ட கோவப்பட்டேன்..."
“ம்ம்ம்ம்..."
“என் மேல உனக்கு கோவம் இல்லையேம்மா?"சுகன்யாவின் குரல் தழுதமுப்பாக வந்தது.
“சீய்... பைத்தியம். இப்ப எதுக்கு அழுவறே? என் செல்லத்து மேல நான் கோபப்படுவேனா? எனக்கு புரியலையா? செல்வா கிடேருந்து உனக்கு கால் வரலை. அந்த கோவத்துல நீ எங்கிட்ட ஏதோ நேத்து உளறினே? நான் அதை எப்பவோ மறந்துட்டேன்."
“சாரிம்மா..."
“'நேத்தைக்குத்தானே செல்வா வீட்டுக்கு வந்திருக்கான். நாளைக்கு அவனே உனக்கு கால் பண்ணி பேசுவான் பாரு! இப்ப நீ நிம்மதியா தூங்கு."
“சரிம்மா" முனகிய சுகன்யா தன் தாயை நெருங்கி அவளை அணைத்துக்கொண்டாள்.
தொடரும்...
கண்ணில் நீர் கசிய வைக்கும் குடும்ப பாச காட்சிகள்!
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஅருமையான குடும்ப காதல் கதை சகோ
ReplyDeleteகாதலில் ஊடல் இருக்கத்தான் செய்யும்
நன்றி நண்பா
Delete