மறுவாழ்வு 54

முழு தொடர் படிக்க

 சத்யாவின் குடும்பத்தினர் சென்னையில் எலியட்ஸ் பீச் அருகில், அவனுக்குப் பெண் பார்க்கப் போயுள்ளனர். உபசரிப்பு நடந்து பெண் வந்தாள். அவளைப் பார்த்ததும், 

'வாவ் வாட் ஏ ப்யூட்டி' என்று அவனையறியாமல் மனதில் சொல்ல வந்து விட்டது. 


செயற்கையான நாணம், அடக்கம் என்று இல்லாமல், இயல்பாய் நடந்து வந்து கூச்சமின்றி எல்லோருக்கும் வணக்கம் சொல்லி ஒன்றை சோபாவில் நன்றாகச் சாய்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்தாள். 

சத்யா, அவள், நேருக்கு நேர் கண்கள் சந்தித்துக் கொண்டன, 

'ப்யூட்டிஃபுள் ஐஸ்' (அழகு கண்கள்). 

சில நொடிகள்தான். 

அவன் அம்மா அப்பா கேட்ட கேள்விகளுக்குத் தயக்கமில்லாமல் பதில் வந்தது. இனிமையான குரல், நுனி நாக்கு ஆங்கிலம் கலந்த தமிழில். சுனந்தா பேசுவாளே அந்த ஆங்கிலச் சாயல். 

இந்த, சுஹாஸினி, பி ஆர்க் படித்தவளாம். ஒரு பெரிய ஆர்கிடெட்டுக்கு அஸிஸ்டென்டாய் உள்ளாள். இது போதாதா. சத்யா குடும்பத்தினரை வீழ்த்த. 

வெளிப்படையாய் சொல்லிக் கொள்ளவில்லையே தவிர, இரு தரப்பினரும் மிகுந்த திருப்தி அடைந்தது, பேச்சின் கல கலப்பிலேயே தெரிந்தது. சத்யா தவிர எல்லோர் முகத்திலும் பெரும் மகிழ்ச்சி. 

அரைமணிக்குப் பின், விடை பெற்றனர், காரில் ஏறி ஹோட்டல் திரும்பினர். தாத்தா, அப்பா, அம்மா, அண்ணன் அண்ணி என்று உட்கார்ந்து பேசினர். ஆளாளுக்கு, பெண் வீட்டார் கொடுத்த மரியாதை, அவர்கள் அந்தஸ்து, பங்களா, பெண்ணின் அழகு, என்று எல்லோரும் வானளாவ புகழ்ந்தார்கள். இந்த சம்பந்தம் கிடைத்தால் பெரும் அதிஷ்டம்தான் என்று வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர். சத்யா கருத்தைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று ஒருவருக்கும் தோன்றவில்லை. டேக்கன் ஃபார் க்ரான்டட். 

அடுத்து, பெண் வீட்டாரை மதுரைக்கு வந்து முறையாக தங்கள் வீட்டைப் பார்க்க அழைப்பு விடுக்க முடிவு செய்தனர். 

சத்யா அன்றிரவே சென்னையிலிருந்தே, பேருந்தில் பெங்களூர் திரும்பினான். இரவு பயணம் முழுதும் தனிமையில், என்னவென்று முடிவெடுப்பது என்று மனப் போராட்டம்தான். ஏறக்குறைய சமமாய் இருந்தால், சுலபமாக முடிவெடுத்து விடலாம். ஆனால் சுகாஸினிக்கும் சுகந்திக்கும் ஈடு தாழ்த்தி இவ்வளவு பெரிய அளவிலா. இது கொடுமை. 

தராசுத் தட்டில், சுஹாஸினி, சுகந்தியை வைத்துப் பார்த்தால். ஒரு பக்கம் அலாதி அழகு, உயர் படிப்பு, அந்தஸ்து, பணம், தன் குடும்பத்தினரின் தீவிர விருப்பம், எதிர் பக்கம் சுகந்தியை, ஒத்திடவே முடியாத, அப்பா அம்மா யாருமில்லா குடும்பச் சூழ்நிலை, சுமாரான படிப்பு, எல்லாவற்றிக்கும் மேல் விதவை. நிலமை அவனைக் குழப்பியது. 

அழகு மட்டும் தப்பித்தது. சுகந்திக்கு அடக்கமான சாந்தமான இயற்கையான அழகு, சுாஸினி வசீகரிக்கும் அழகு. மற்றவை யாவும் சுகந்திக்கு நெகடிவ்தான். 

நினைக்க நினைக்க, என்ன செய்வதெனத் தெரியாமல் நிலை தடுமாறினான். 

'டே இதில என்னா தயக்கம். இந்த மாதிரி பொண்ணு கெடைக்கப் பெரிய அதிஷ்டம் பண்ணியிருக்கனும். இதை விட என்னா வேணும் சொல்லு. யூ ஆர் லக்கி மேன்' என்று மனம் சஞ்சலிக்க ஆரம்பித்து விட்டது. 

'சும்மா லவ்வு கிவ்வுன்னு தப்பா முடிவெடுத்து முட்டாத்தனமா இந்த அதிஷ்டத்த கை உட்டுடாத.' 

நினைக்க நினைக்கச் சுகந்தி தோற்றுப் போனாள். சுஹாசினி வென்று வந்தாள். 

பெண் பார்த்து வந்தது பற்றி சுகந்தியிடம் ஒன்றும் கூறவில்லை. ஆனால் ஊருக்குப் போய் வந்தது முதல், அவன் முகத்தில் சிரிப்பே இல்லை. தன்னிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை, ஏதோ கவலை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. ஆனால், சுகந்தி அருகில் இருக்க, நேரில் பார்க்கப் பார்க்க சுஹாசினி மறைந்து போனாள். 

இந்த மனதின் விசித்திர விளையாட்டில் மேலும் குழம்பினான். இரவுகளில் பலமான யோசனை. 

கண்ணுக்குத் தோன்றுவதெல்லாம் மாயையாய் இருக்கலாம். அவள் அழகிதான், பணக்காரிதான், அந்தஸ்துள்ளவள் தான், குடும்பமே அவள் பக்கம், கிடைத்தால் அதிஷ்டம்தான், ஒரு குறையும் இல்லை, ஆனால் தனக்குப் பொருத்தமானவளா? அதுதான் கீ இஷ்யூ (முக்கியமான ப்ரச்னை). 

அவள் எண்ணம், செயல், ஆசைகள் தன்னுடன் ஒத்துப் போகுமா ? தெரியாது, பொருந்தா விட்டால், வாழ் நாள் முழுதும் பெரும் வேதனைதான். ஏ பிக் ரிஸ்க், ஒய் ஷுட் ஐ டேக் இட். (தெரியாத ஒன்றை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்) 

ஒரு வாரமாய், தனிமையில் நடந்த தர்க்கம் முடிந்து, சுகந்தி வென்றாள். 

இனி இந்த முடிவில் இருந்து திரும்பக் கூடாது, என்று தீர்மானமானான். 

தனிமையில் சுகந்தியை சந்தித்துப் பேசவில்லையானாலும், கடந்த ஒரு மாத குழப்பம் நீங்கி, முன்பு போல் இயல்பு நிலைக்கு மாறினான். சித்தி இருக்கும் பொழுதும் பேச்சு சகஜ நிலைக்குத் திரும்பியது. கண்கள் பேசின. சுகந்தி அதை நன்கு உணர்ந்து பெரும் நிம்மதியானாள். 


அடுத்த வாரம், மாலை ஏழு மணி இருக்கும், கை பேசியில் அம்மா அழைத்தாள்.

"என்னம்மா?" என்றான்.

பெண் வீட்டார் மதுரைக்கு வருவதாகவும், வரும் சனி ஞாயிறு ஊருக்கு வந்து போகக் கூறினாள்.

தன் அறைக்குப் போய்க் கதவை சாத்திக் கொண்டு பேசினான்.

"அம்மா, எனக்கு ஒன்னும் பிடிக்கலம்மா"

"என்னாடா சொல்ற, எது பிடிக்கல?"

"பொண்ணு பிடிக்கல" 

"இன்னாது, பொண்ணு.. பிடிக்கலயா, பைத்தியமா நீ, என்னாடா சொல்ற ஒலறாத." 

"ஆமாம்மா, நா வேற பொண்ண விரும்பரம்மா, அவளத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்"

"என்னாடா இப்டி பேசற, போய் பொண்ணப் பாக்கரதுக்கு முன்னமே சொல்லியிருக்கனும் இல்லியா. இப்ப சொன்னா எப்டி."

"என்னா எங்க சொல்ல விட்டீங்க, நீங்களே எல்லாம் முடிவு பண்ணிட்டா" 

"ஒங்கப்பாரு காதில இந்தச் சங்கதி விழுந்தா அவ்வளோதா"

"நீ தாம்மா அப்பாட்ட சொல்லி அவரச் சமாதானப்படுத்தனும்." 

"போடா முண்டம், ஒழுங்கா எங்க பேச்ச கேட்டு, இந்தக் கல்யாணத்துக்கு ஒத்திக்கிடு, இந்த மாதிரி ரதியாட்டம் பொண்ணு கெடைக்குமாடா. அவள கட்டிக்கிட குடுத்து வச்சிருக்கனும். அவுக அந்தஸ்துக்கு நமக்கு ஏணி வச்சாக்கூட எட்டுமா. ஏதோ ஒந் தாத்தா பழய சினேகிதம் அவுக நம்ப வீட்ல சம்பந்தம் வச்சிக்க ஏறங்கி வந்திருக்காக தெரியுமா."

"எல்லாம் இருந்தா என்னம்மா, எனக்கு மனசுக்குப் பிடிச்ச மாதிரி இருக்க வேணாமா"

"அதெல்லாம் இல்ல, இப்ப பாத்து வந்த பொண்ணும் ஒன் மனசுக்குப் பிடிக்கும்."

விவாதம் தொடர்ந்தது, கால் மணி நேரமாய் இருவரும் பிடி கொடுக்காமல் பேசினர். கடைசியில், அவன் அம்மாவுக்குப் பொறுக்க முடியாமல், 

"போதும் போதும் நேர்ல வந்து ஒங்கப்பாகிட்டயே பேசிக்க. ஏதும் கிறுக்குத்தனம் பண்ணாம ஒழுங்கா ஒடனே ஊருக்கு கெளம்பி வந்து சேரு." என்று போனை வைத்துவிட்டாள்.

அம்மாவே இப்டி கோபமா பேசினா, அப்பா எப்டி குதிப்பாரு. நினைத்தாலே நடுங்கியது. அறையில் விளக்கைக்கூடப் போடாமால், படுக்கையில் படுத்துக் கிடந்தான். தன் எதிர்கால வாழ்வின் சிக்கலை எப்படிச் சமாளிப்பதென ஆழ்ந்த கவலை. 

'இது வேணுமாடா ஒனக்கு. ஒனக்கு நல்லது நடக்கனும்னு வேண்டி நிக்கர அப்பா அம்மா, குடும்பத்த எதுத்துக்கினு அவுக மனச முறிச்சி. இதெல்லாம் எதுக்குன்ற...' 

'என்னா அருமையா ஐஸ்வர்யத்தோட அழகான படிச்ச லட்சணமான பொண்ணு பாத்து இட்டாந்தா, கட்டிக்கிட கசக்குதா ஒனக்கு..........'

'அந்த பொண்ண விட்டுட்டு யாரோ ஒரு அநாதமாரி ஒரு பொண்ணு அது பின்னால போறேன்றியே, அவ ஒடம்பு ருசி கண்ட மோகத்தில் இப்பிடி பித்துப் பிடிச்சி அலயறயா.........' 

'ஒடம்புதான் வேணும்னா, அந்தப் பொண்ணுக்கும் இதவிட நல்லாவே இருக்கும்..........' 

'இது இன்னா கிறுக்குத்தனம்' என்று மனது முரண்டு பிடித்தது. 

'இல்ல மனசாற நாங்க ஒன்னு சேந்தப்பரம் எப்டி பிரியரது' 

'பொல்லாத மனசு, கல்யாணத்துக்குப் பிறகு அந்தப் பொண்ணு மனசோட ஒன்னு சேரமுடியாதான்ன.' 

'சரிதானோ' என்று குழப்பம். 

குழப்பம் குழப்பம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டான். 

மறுநாள் காலை, சுகந்தி குளித்துக் கொண்டிருந்தாள். புவனேஸ்வரி, சத்யா அறைக் கதவை தட்டி, திறந்து எட்டிப் பார்த்து, குரலை தாழ்த்தி, 

"தம்பி ஒங்கிட்ட தனியாப் பேசனும். சுகந்தி போனப்பரம், நீ கொஞ்சம் நாழி இருக்கனும்" என்றாள். 


"எதப்பத்திக்கா?"

"சொல்றன்ம்பா" என்று விலகினாள். 

ஏழரை மணிக்கு சுகந்தி கிளம்பினாள். அவள் போனபின், சத்யா டிபன் சாப்பிடுப் பொழுது, 

"என்னமோ பேசனும்னீயேக்கா?" என்றான். 

"ஆமா தம்பி. நேத்து போன்ல நீ ஒங்கம்மா கிட்ட பேசிட்டிருந்தப்ப, காதில விழுந்தது. தப்பா நெனக்காத, சுகந்தி எப்டிப்பா ஒனக்கு பொறுத்தமாவா. ஒங்க அப்பா அம்மா எப்டி ஒத்துப்பாங்க. அதுவும் சுகந்தி பத்தின உண்ம தெரிஞ்சா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. நீயேகூட ஒத்திப்பியா சந்தேகந்தான்." 

"தெரியும் எனக்கு, சுகந்தி சொல்லிட்டா. அதப்பத்தி எனக்கு ஒன்னும் தப்பாத் தோணல."

"ஒஒ........!! சொல்லிட்டாளா........ உண்மையாவா சொல்ற தம்பி...!!" என்று அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை. 

"அவ விதவைப்பா." 

"அதெல்லாம் ஒரு பெரிய விஷமில்ல. எங்க மனசு ஒத்துப் போச்சி." 

புவனேஸ்வரியால் அந்த செய்தியை உள் வாங்க முடியவில்லை. ஒரு பக்கம் தாள முடியாத மகிழ்ச்சி, அடுத்து இது நடக்குர காரியமா என்று பயம். 

"சரிப்பா.... நீ ஒத்துக்கிட்டாப் போதாதுப்பா, எந்த அப்பா அம்மா ஒத்துப்பாங்க இந்த மாதிரியான பொண்ண மருமகளா. அப்டி அவங்களே சரின்னாலும், சுத்தி இருக்கரவங்க வாய் சும்மா இருக்குமா என்னா. இது நடக்காதுப்பா"

"அக்கா நா ஏற்கனவே கொழம்பிப் போயிருக்கேன், நீங்க இன்னும் கொழப்பாதீங்க. நான் சுகந்திய விரும்பரது உண்மை. எனக்கு அவதான் வேணும். எது வந்தாலும் சமாளிக்கலாம்."

"நா சுகந்தியோட சித்தி. எனக்கே ஒத்துக்க முடியாத காரியம் இது. நீ சம்மதிச்ச பாரு, ரொம்ப ரொம்பப் பாராட்டுறேன் தம்பி. இப்டி ஒரு புருஷன் சுகந்திக்கு கெடைக்க அவ குடுத்து வச்சிருக்கனும். அப்டி நடந்தா, அவ பட்ட கஷ்டத்துக்கெல்லாம் நிவர்த்தி ஆனதா ஆயிடும். ஆனா எனக்கு என்னவோ பயமா இருக்குப்பா. ஒன் குடும்பத்துக்கு மனக்கஷ்டம், ஒனக்கும் ரொம்பச் சிரமம் ஆவப்போவுதேன்னு..." 

"இல்லக்கா, ஆரம்பத்தில ஒத்துக்க மாட்டாங்க. வீட்ட விட்டு என்ன வெலக்கி வச்சாலும் வப்பாங்க. பிறகு மெல்ல மெல்ல வருவாங்க. வேற குடும்பங்கள்ல பாத்திருக்கேன்." 

"என்னமோப்பா எனக்குப் பயமாத்தான் இருக்கு. என்னால முடிஞ்சது, அந்தத் திருவானைக்கா அம்மாவ வேண்டிக்கரதுதான். நல்லது நடக்கனும்." 

"பயப்படாதீங்க எல்லாம் நல்லதாவே நடக்கும்" என்று ஆபீஸ் புறப்பட்டான். 

அன்று மாலை, புவனேஸ்வரி சுகந்தியிடம், தான் சத்யா விடம் பேசியது பற்றி விலக்கினாள். 

"ஆமா சித்தி, என்னாதான் அவரு விருப்பம் ரொம்ப ஆழமா இருந்தாலும், அவங்க அப்பா அம்மா எப்டி ஒத்துப்பாங்க, அவங்கள எதுத்து இவரு என்னா செய்யமுடியும். இந்தக் கல்யாணம் நடக்கும்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவருக்குப் பெரிய கஷ்டம் குடுக்க வேணாம். விலகிடலாம்னு தோணுது. நாம வேற வீடு பாத்துப் போயிட்லாமா?" என்றாள்.

"இல்ல இல்ல சுகந்தி, அவ்வளவு சீக்ரம் விட்டுக் கொடுக்காத, பொறுத்திருந்து பாம்போம். நாங்கூட இது நடக்காதுன்னுதான் மொதல்ல நெனச்சேன். ஆனா, தம்பி ஒன்ன காப்பாத்தினது, அந்த பொருங்கிங்க நம்பள தொரத்தி இங்க பெங்களூருக்கு தள்ளியது. ஏதோ விதி வெளையாடுது. அது ஒங்கள சேத்து வச்சது ஒரு காரணத்துக்காக இருக்கலாம். நல்லது நடக்கும், அந்த அம்பாள நம்பு." என்றாள் புவனேஸ்வரி. 

சத்யாவுக்கு ஒரு யோசனை, 

'சனிக்கௌம, அம்மா வரச்சன்னதுக்கு, ஊருக்குப் போனால் இன்னும் ரகளைதான், போகாமல் விட்டுவிட்டால்.......? என்னதான் நடக்குதின்னு பாப்போமே' என்று நினைத்தான்.

அதன்படியே ஊருக்குப் போவதை தவிர்த்தான். 

எதிர்பார்த்தது போலவே சனிக்கிழமை காலை வீட்டிருந்து போன் வந்து விட்டது. அவன் அப்பாவே பேசினார், இல்லை கத்தினார்.

இவன் பதில் ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டான். அன்றே இரவு பஸ்ஸில் கிளம்பி வர உத்தரவிட்டார்.

அதற்கும் மசியவில்லை சத்யா.

ஞாயிறு, பெண் வீட்டார் மதுரைக்கு வந்தனர். பெண்ணின் அப்பா அம்மா மட்டும் வந்தனர். சம்பிரதாய முறைப்படி சந்திப்பு நடந்தது.

"மாப்பிள்ளை வல்லயா?" என்றதிற்கு, தங்கள் பிள்ளை ஏதோ வேலை விஷயமாய்ப் பாம்பே போனவன், நேரத்தோடு திரும்ப முடியவில்லை என்று சமாளித்தார் சத்யா அப்பா. 

நிச்சயதார்த்தம் எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று பேச்சி வந்தது. ஊர் திரும்பி கலந்து விட்டுச் சொல்வதாக, பெண்ணின் அப்பா சொன்னார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை, சத்யாவுக்கு அவன் அம்மாவிடமிருந்து போன் வந்து விட்டது. அவர்கள் மறுநாள் காலை கிளம்பி பெங்களூர் வருவதாக சொல்ல சத்யாவுக்கு உதறல் எடுத்து விட்டது. சுகந்தியும் அக்காவும், அவனுடன் தங்கியிருப்பது தெரிந்தால் பூகம்பம் வெடிக்கும். 

அன்று மாலை அவசரமாய் கலந்தாலோசித்தனர். 

"நாங்க ஊருக்குப் போயி கொஞ்ச நாள் தங்கிட்டு வரவா?" என்றாள் புவனேஸ்வரி. 

"நா லீவெல்லாம் எடுக்க முடியாது சித்தி, வர்ர பேஷன்ட்கள வரவேற்க வேற யாரும் ஆளில்ல. கண்டிப்பா முடியாது. அப்டின்னா வேலயத்தான் விடனும், என்றாள்" சுகந்தி. 

"நான் யார்னா ப்ரன்ட்ஸ்கிட்ட கேட்டு பாக்கிரன் தங்கர்துக்கு" என்றான் சத்யா 

"இரு இரு தம்பி, இப்டி செஞ்சா என்னா, ரெண்டாம் தளத்தில பாலாமணின்னு ஒரு அம்மா, நம்ப திருச்சிகாரங்கதான். நல்ல பழக்கம். புருஷன் பொண்டாட்டி ரெண்டே பேர்தான். அங்க தங்க கேட்டுப் பாக்கவா?" என்றாள். 

"நல்ல ஐடியா" என்றான். 

"தோ இப்பவே கேட்டு பாக்குறேன்" என்று பாலாமணி குடியிருப்புக்குப் போனவள், அரைமணியில் திரும்பி வந்தாள். 

"எல்லா வெவரத்தையும் சொன்னேன், ஒத்துத்கிட்டாங்க. அப்ரம் ஒங்க ரெண்டு பேரயும் பாக்கனுமாம், இட்டாரச் சொன்னாங்க" என்றதும், மூவரும் சென்றனர். 

பழுத்த பழங்கள். அந்த மாமாவுக்கு எழுபது தாண்டி இருக்கும், மாமிக்கு அறுபது தாண்டாது. சதாசிவம் அய்யா மாவட்ட நீதிபதியாய் இருந்து ஒய்வு பெற்றவர். உலக அனுபவப் பட்டவர். மூவரையும் உட்கார வைத்து நேரடியாகச் சத்யா சுகந்தியை கேள்விகள் கேட்டார். 

"ஒங்க சொந்த விஷயத்தில தலையிட்ரதா நெனக்காத தம்பி, மொதல்ல ஒங்களுக்குள்ள இருக்கர ஆசை, வெறும் மோகமா, இல்ல ஆழ்ந்த அன்பான்னு நீங்களே ஒங்க மனச ஆராஞ்சி சொல்லனும். அதுதான் இப்ப ரொம்ப முக்கியம். கல்யாணம், இன்றது காலா காலத்துப் பயிர். எங்க காலம் மாரி இல்ல, இப்ப பெண்களல்லாம் வேலக்குப் போறீங்க, தனியா சந்திக்கர வாய்ப்பு அதிகம். நெறைய காதல் கல்யாணம் நடக்குது, ஆனா எல்லாம் நெலச்சி நிக்குதுன்னு சொல்ல முடியல. சிலது சில மாசம், ஒரு வருஷம்ன்னு தாண்டாம முறிஞ்சி போவுது." 

சுகந்தி தலை குனிந்திருக்க, சத்யா தான் சொன்னான். 

"அய்யா, மூனு நாலு மாதமா பழகுறோம். ஒருத்தர ஒருத்தர் நல்லாவே புரிஞ்சிக்கிறோம். அதில ஒன்னும் சந்தேகமே இல்ல." 

"அப்டியா, ஒன்னு செய்வோமா, எனக்குக் கொஞ்சம் ஜாதகம் பாக்க வரும். ஒங்க பேர் நட்சத்திரம், பொறந்த தேதி, நேரம் எல்லாம் சொல்லுங்க பாப்போம்" என்று ஒரு நோட்புக்கில் குறித்தார். 

எழுந்து போய், பழைய பஞ்சாங்க கட்டுக்களில் இரண்டை தேடி எடுத்து வந்தார். ஒரு பத்துப் பதினைந்து நிமிடம் ஏதோ கட்டம் போட்டு கணக்குப் போட்டார். அமைதியாய் மற்றவர் காத்திருந்தனர். புவனேஸ்வரி போய் எல்லோருக்கும் காப்பி தயார் பண்ணினாள். 

சுகந்தியைப் பார்த்து, "ஆரம்பத்தில ரொம்பச் சிரம பட்டிருக்க. இம்.." என்று யோசித்து, "புருஷன்.... ஏதோ கண்டம், அப்டியா?" என்று மோவாயை பிடித்து, தயங்கினார். "கல்யாணம் ஒனக்கு...." என்று இழுத்தார், என்ன சொல்வதெனத் தடுமாறிமாரினார். 

புவனேஸ்வரிதான் உண்மையை உடைத்தாள். 

"மாமா, அவளுக்கு கல்யாணம் ஆகி, மூனு மாசந்தா வாழ்ந்தா. மாப்பிள்ளை டைபாய்டு காய்ச்சல எறந்துட்டாரு."

"ஆகா... ஜாதம் பொய்யாவாது" என்று பெரியவர் கண்ணாடியை கழற்றினார். "ஆனா ஒன் கஷ்ட காலமெல்லாம் போயி, தெச மாறி, நல்ல யோகம் பிறந்திட்டுத்து. கவல வேண்டாம்."

"பொருத்தம் எப்டி மாமா?" 

"அவங்களுக்குள்ள அதில ஒன்னும் கொறையில்லம்மா. நட்சட்திரம் ராசில கன பொருத்தம், திருமணப் பொறுத்தமும் பத்துல எட்டு உத்தமம்.. அதான் மனசும் சட்டுனு ஒட்டிக்கிச்சி போல" என்று சிரித்தார்.

"அப்ப கல்யாணம் ஆவுமா?" என்றாள் புவனேஸ்வரி 

"அது ஈஸ்வரன் விட்ட வழி, வேண்டலாம் அவன, நல்லது நடக்கும்"

"கேக்க ரொம்பச் சந்தோஷமா இருக்கு, மாமா, ஒங்க ஆசீர்வாதம்."

சத்யா சொன்னான், "அய்யா, எங்க அப்பா அம்மாவ சமாதானம் செய்ய நீங்கதான் ஏதாவது ஒரு வழி சொல்லனும்."

"பொண்ணு பாத்து வந்தீங்களே அது விவரம் சொல்லு" 

ஒளிவு மறைவில்லாமல் சத்யா விவரம் சொன்னான்.

"ஓ சென்னையில பெரிய குடும்பமா, அதான். ஒங்க அப்பா அம்மா கட்டாயப் படுத்தரதுல ஞாயம் இருக்கு. சரி ஒங்க வீட்டில ஜாதகம் ஏதும் பாத்தாங்களா.?"

"தெரியாது"

"கேட்டுப் பாரு, ஒரு வேளை ஜாதகம் பாக்கலன்னா, பாக்கச் சொல்லு, அதுல ஏதாவது பொருத்தம் இல்லன்னா, நீ வாணாம்ன்னு சொல்ல ஒரு வழி கெடைக்கும்" என்றார்

"கேட்டுப் பாக்கறேய்யா. அக்கா, சுகந்தி இங்க தங்கர்துக்கு.........." 

"அதான் புவனேஸ்வரிதான் சொல்லிட்டாளே, அதிக்கின்னாப்பா கஷ்டம், தாராளமா இங்க தங்கட்டுமே" என்றாள் பாலாமணி அம்மாள். 

அன்றிரவு சாப்பாடு முடிந்ததும். புவனேஸ்வரியும், சுகந்தியும் தங்கள் உடைமைகளைக் காலி செய்து, பெட்டி படுக்கை கட்டி எடுத்துக் கொண்டனர். ஒரு வாரத்திற்கான, சமையல் பொருட்களையும் கூடவே எடுத்துச் சென்றனர். 

இரவு சத்யா தனிமையில் படுத்து அப்பா அம்மாவை எப்படி சமாளிப்பதென யோசனையில் இருந்தான். இப்பொழுது ஒரு கூடுதல் நம்பிக்கை, 

'சதாசிவம் அய்யாவே சொல்லிட்டாரே, சுகத்திக்கும் தனக்கும் ஜாதகப் பொருத்தம் என்று, இனி எது வந்தாலும் சந்தித்துப் போராட வேண்டியதுதான்.' 

'லே... பொடிப்பயல் நீ... அப்பாவை, தாத்தாவை எதித்து நின்ற முடியுமா?' 

மறுநாள், மாலை ஒரு ஆறு மணியளவில், அப்பா, அம்மா தாத்தா மூவரும் வந்து சேர்ந்தனர். தாத்தாவை அவன் எதிர்பார்க்கவில்லை.. தன்னைப் பணிய வைக்க, தாத்தாவும் இருந்தால் பலம் கூடும் என்று வந்தார் போலும். சத்யாவுக்குக் கலக்கியது. 

அடுத்து, பையிரண்டை தூக்கிக் கொண்டு மரிக்கொழுந்தும், வந்தாள். சத்யாவை பார்த்து "கும்பிட்ரன் அய்யா" என்றாள். 

'மரிகொழுந்துவா..!!' என்று அடுத்த ஆச்சரியம். 

அம்மா சமையலறை சென்று நோட்டம் விட்டாள். ஃப்ரிஜ், கேஸ் அடுப்பு, பாத்திரங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியம். 

"எல்லாம் இருக்கே." 

"ஆமாம்மா, கொஞ்ச கொஞ்சம் சமையல் செயரம்மா" 

"நல்லாதாப் போச்சி, இங்க ஒரு வாரம் தங்கரதுக்கு, திட்டம் போட்டுத்தான் வந்தோம். தாத்தாவுக்கு ஒட்டல் சாப்பாடு ஆகாது, சக்ர ஒடம்புக்காரருக்கு எதாவது தனியா செஞ்சி குடுத்துட்டே இருக்கனும், அதான் மரிக்கொளுந்துவையும் அளச்சிட்டு வந்தேன். பெங்களூரும் பாக்க ஆசப்பட்டா, கார்லதான் எடமிருக்கேன்னு போட்டுட்டு வந்தேன்." 

பால், காப்பிப் பவுடர் எல்லாம் தயாராய் இருந்தன. காப்பிப் போட்டாள். 

மற்றவர் காதுகளுக்கு எட்டாது, அம்மாவிடம் புலன் விசாரித்தான். அவளும் குரலை தாழ்த்தி, 

"அப்பாவ விடத் தாத்தாதான் ரொம்பக் கோவமா இருக்காரு. அவருக்குத்தான் இது மானப் பிரச்ன. பையன் நம்ப சொல்ல மீறமாட்டான்னு வாக்கு குடுத்துட்டு தவிக்கிராரு. நீ இன்னாடான்னா இப்டி ஒரு குண்டத் தூக்கி போட்டுட்ட. அப்டி இன்னாதான் அந்தப் பொண்ணு மயக்கிட்டா ஒன்ன சொல்லு" என்று விசாரித்தாள். 

சுகந்திக்கு முன் திருமணம் ஆனதைப் பற்றி மறைத்து, படிப்பு, காஞ்சிபுரம், சித்தி போன்ற விவரங்களைக் கூறினான்.

"ஏண்டா ஒனக்கே இது நாயமா படுதா. அப்பா அம்மா இல்லாத பொண்ணு, ஒன்னுமில்லாப் பொண்ணு. ஒனக்கு என்ன கிறுக்குப் பிடிச்சுதோ."


தொடரும்...

Comments

  1. சோதனை, வேதனை தராமல், சாதனை ஆகுமா!? ஜாதகம், சாதகமாக ஆகுமா?! சத்யா வுக்கு யாரு?! சுகந்தியா?! சுகாசினி யா?!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60