காதல் பூக்கள் 74
மனைவி, மகனுடன் ஏற்பட்ட விவாதத்தால், அவர்களிடம் கொண்ட கோபத்தால், மனதில் விளைந்த விரக்தியால், நல்லசிவத்தின் களைத்த மனமும், உடலும், வீசிய மேலைக் காற்றின் மெல்லிய குளுமையை உணரமுடியமால், தெருவில் இலக்கில்லாமல், இடிந்த மனதுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
'எனக்கு வாய்ச்சவளும் சரி: பொறந்ததும் சரி: ரெண்டுமே ஏறுமாறா இருக்கே! என்னப் புண்ணியம் பண்ணியிருந்தா இப்படி ஒரு புள்ளையை நான் பெத்து இருப்பேன்? பெத்தவளாவது, தான் பெத்தது கழுதையா இருக்கேன்னு, புத்தி சொல்லி திருத்தியிருக்கணும்! எல்லாம் என் தலையெழுத்து! ம்ம்ம்...'
'புள்ளை பாடற பாட்டுக்கு, என் பொண்டாட்டியும் எதையும் யோசிக்காம ஏன் கும்மி அடிக்கறா? பாசங்கற பேர்ல, ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு, எதுக்கெடுத்தாலும் செல்லம் குடுத்து, தன் புள்ளையைத் தீவெட்டித் தடியனா வளத்து, கெடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கி வெச்சிருக்கா!'
'என் புள்ளை நல்லா படிச்சிருக்கான்... நல்ல வேலையில இருக்கான்... கை நெறைய சம்பாதிக்கறான்... ஆனா இதெல்லாம் மட்டும், முழுமையான வாழ்க்கைக்கு போதுமா? யாருக்கும் மரியாதை குடுக்கத் தெரியாம, டிஸிப்ளீனே இல்லாம, வளந்து இருக்கானே? பெரியவங்கக்கிட்ட பணிவுங்கறது இல்லையே? பெண்ணை மதிக்கத் தெரியாதவன் குடும்ப வாழ்க்கையில எப்படி நிம்மதியா இருக்கமுடியும்?'
'சொந்தம், பந்தம் உறவு மொறைகளை மதிச்சு, அவங்களோட ஒத்து வாழணும்ங்கறது இல்லாம, என்னை மதிக்கற ஒரு எடத்துலயும், குட்டி நாய் கொலைச்சு பெரிய நாய் தலையில வந்து விடிஞ்ச கதையா, துக்கத்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துக்கறதுக்கு எனக்குன்னு இருக்கற ஒண்ணு, ரெண்டு சொந்தக்காரங்க வீட்டுக்குள்ளவும் நுழைய முடியாதபடி, இப்படி ஒரு தப்பான காரியம் பண்ணிட்டு வந்திருக்கானே? இதை நான் எப்படி சரி பண்ணப் போறேன்?'
'ஒரு அப்பனா, ஒரு புருஷனா, இவங்க ரெண்டு பேரும் நான் சொல்றதுல இருக்கற நியாயத்தை புரிஞ்சுக்கலை. என்னை எதுக்கும் உதவாதவனா நெனக்கறாங்க; செல்லாத, கிழிஞ்சிப் போன, கரன்சி நோட்டா நடத்தறாங்க!'
'இந்த வீட்டுல நான் ஏன் இருக்கேன்? என் புள்ளை எனக்கு இன்னைக்கு சட்டம் சொல்லிக்கொடுக்கறான்... என் கையால தாலி கட்டிக்கிட்டவளுக்கு என் பேச்சு புரியலை. புள்ளை பக்கம் சாய்ஞ்சு நிக்கறா...'
'எனக்கு என் புள்ளை மேல ஆசையில்லே; பாசமில்லேன்னு நெனக்தகிறாங்க... என் புள்ளையை நாலு பேரு நல்லவன்னு சொல்லணும்... அதுதானே ஒரு அப்பனுக்கு பெருமை... இந்தச் சின்னவிஷயம் இவங்க ரெண்டு பேருக்கும் புரியலையே?'
'ராணி சொன்ன மாதிரி இவன் கல்யாணத்தை சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டு, மனசுக்கு திருப்தியில்லாத ஒரு வாழ்க்கையை இந்த வீட்டுல வாழறதை விட, எங்கேயாவது கண்ணு மறைவா, ஹரித்துவார்... ரிவிகேஸ்ன்னு நடையைக் கட்படிடவேண்டியதுதான்.'
'ஆண்டவா... மனுசன் நெனக்கறது எல்லாம் நடந்துட்டா, நீ ஒருத்தன் மேல எதுக்கு?' நல்லசிவத்தின் எண்ணங்கள் முடிவற்று விரிந்து கொண்டிருந்தன.
நல்லசிவம், தன் நினைவுகளில் மூழ்கியபடி, அன்று தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தமுடியாமல், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடந்து கொண்டிருக்க, காபி குடிக்கவேண்டும் என்ற நினைப்பில், கண்ணில் தென்பட்ட ஹோட்டலில் நுழைந்து மூலையிலிருந்த ஒரு டேபிளில் தலைகுனிந்து அமர்ந்தார்.
"மாமா... எப்படி இருக்கீங்க?"
உற்சாகமாக வந்த குரலைக் கேட்டு சட்டென நிமிர்ந்தார் நல்லசிவம். ரகுராமன் எதிரில் உட்க்கார்ந்திருந்தான்.
ராணியின் தம்பியும், ரகுவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். உறவுக்கு உறவு. நட்புக்கு நட்பு. வேலையிலிருந்து ஓய்வு பெற்று வந்ததிலிருந்து, வயது வித்தியாசம் பார்க்காத நண்பர்களாக அவர்கள் மாறி, ரகு ஊரிலிருக்கும் போதெல்லாம், இருவரும் மாலையில் ஆற்றோரமாக காலார நடப்பதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
"ம்ம்ம்... இருக்க்க்க்கேன்..." இழுத்தார்.
"எதிரில்ல உக்காந்து இருக்கறது யாருன்னு அடையாளம் தெரியாத அளவுக்கு அப்படி என்ன பலமான யோசனை?"
"சாரிப்பா... கும்பிடப் போன தெய்வம் நீ குறுக்க வந்துட்ட.." விரக்தியாக புன்னகைத்தார்.
"மாமா என்ன சாப்படறீங்க... உங்கக்கிட்ட சந்தோஷமான சேதி ஒண்ணு சொல்லணும்..." புன்னகையுடன் பேசினான் ரகு.
"காஃபியைச் சொல்லு.. தலை விண் விண்ணுன்னு தெறிக்குது.." குரலில் சலிப்பிருந்தது.
"தம்பி... இன்னைக்கு என்ன... கோதுமை ஹல்வா ஸ்பெஷலா? ரெண்டு ப்ளேட் கொண்டா, ரெண்டு போண்டா, நாங்க அதை சாப்பிட்டதுக்கப்புறமா, சக்கரை கம்மியா ரெண்டு காபி குடுத்துடுப்பா... ஓ.கே" சர்வரிடம் தங்கள் ஆர்டரை கடகடவென சொன்னான்.
"மாமா... சாயந்திரம் நானே உங்க வீட்டுக்கு வரணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்... நீங்க முந்திக்கிட்டீங்க..."
சர்வர் ஸ்வீட்டை கொண்டு வந்து இருவர் எதிரிலும் வைத்தான். இனிப்பை ரசித்து, சுவைத்து சாப்பிடும் மனநிலையில் நல்லசிவம் இல்லை. தன் வீட்டில் சொந்த மகனிடம் குற்றமிருந்ததால், அவர் உள்ளம் குறுகுறுவென்றிருந்தது.
'நடந்த விஷயம் இவனுக்கு தெரிந்து விட்டாதா?' மனதுக்குள் நிம்மதியில்லாமல் தவித்தார்.
"மாமா... நம்ம சுகன்யாவுக்கு வர்ற வெள்ளிக்கிழமை, அவகூட வேலை செய்யற பையன்கூட நிச்சயம் முடிவாகியிருக்கு, தமிழ்செல்வன்னு பேரு... நல்ல குடும்பம், கண்ணுக்கு நெறைவா இருக்கான்; பெத்தவங்களும் தங்கமானவங்க: பசங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பங்கறாங்க; சுகன்யாவும் அவனையே பண்ணிக்கறேங்கறா: சட்டு புட்டுன்னு நிச்சயம் பண்ணிடலாம்ன்னு நெனைக்கறோம்.. பெரியவங்க நீங்களும், ராணி அக்காவும், சம்பத்தோட, விசேவத்துக்கு அவசியமா வரணும்." ரகு நிதானமாக பேசினான்.
"ம்ம்ம்..." நல்லசிவம் வாயில் வார்த்தை முழுசா வரவில்லை.
"எங்க வீட்டு மாப்பிள்ளை குமாரும், என் அக்காவும் நாளைக்கு உங்க வீட்டுக்கே நேரா வந்து அழைப்பாங்க... தாய் மாமன் நான், உங்களுக்குத் தித்திப்பு கொடுத்து விஷயத்தைச் சொல்லிட்டேன்... என்னடா நம்ப ஃப்ரெண்டு இப்படி ரோட்டுல வெச்சு அழைக்கறானேனு நீங்க நெனைக்கக்கூடாது..." ரகுவின் முகத்தில் ஒரு திருப்தி இழையோடிக் கொண்டிருந்தது.
"ரொம்ப சந்தோவும் ரகு... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா... நோ ஃபார்மாலிட்டீஸ் ப்ளீஸ்..."
"மாமா... நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க .. நான் குறுக்குல பேசிக்கிட்டேப் போறேன்.. நீங்க கொஞ்சம் டல்லா இருக்கற மாதிரி தெரியுது... உடம்புக்கு ஒண்ணுமில்லயே?" கரிசனத்துடன் பேசிய ரகு போண்டாவை தேங்காய் சட்டினியில் அமுத்தி மென்று தின்றுக்கொண்டுருந்தான்.
"ரகு ஒரு முக்கியமான விஷயம்... உன் கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்." நல்லசிவம் தணிந்த குரலில் இழுத்தார்.
"சொல்லுங்க... நாமத் தனியாத்தானே இருக்கோம்..." அவன் புன்னகைத்தான்.
"என் புள்ளை சம்பத் புத்திக்கெட்டுப் போய் ஒரு சின்னத் தப்பு பண்ணிட்டான் ரகு... அவன் தரப்புல நான் உன் கிட்ட மொதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்..." நல்லசிவத்தின் குரல் தழுதழுத்து கண்கள் கலங்க ஆரம்பித்தது.
"மாமா... என்னப் பேசறீங்க... என் கிட்ட நீங்க மன்னிப்பு கேக்கறதா?" ரகு சட்டென எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.
"ஆமாம்பா ரகு... நான் சொல்ற விஷயத்தை உன் மனசோட வெச்சுக்கோ... உன் குடும்பத்துல வேற யாருக்கும், எப்பவும் இது தெரியவேணாம்.. ப்ளீஸ்... இது என் ரெக்வெஸ்ட்... உன் உறவா நான் இதைக் கேக்கலை. நண்பனா கேக்குறேன். இந்த விஷயம் உன் மாப்பிளை குமாருக்கோ அல்லது சுந்தரிக்கோ தெரிஞ்சா.. நம்ம உறவுகாரங்க யார் மூஞ்சிலேயும் என்னால இனிமே முழிக்கவே முடியாது..." சொல்லிக் கொண்டே அவன் முகத்தை அதைரியமாக நிமிர்ந்து பார்த்தார்.
"மாமா... ஏன் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க... நான் இருக்கேன்ல்ல... முதல்ல விஷயத்தைச் சொல்லுங்க..." ரகுவின் முகத்தில் குழப்பம் திரையிட்டிருந்தது.
சம்பத், சுகன்யாவை காலையில் சந்திக்க சென்றதிலிருந்து, தன் வீட்டில் அதனால் நடந்த பெரிய சண்டையையும், ரகளையையும், சுகன்யாவை தன் மருகளாக்கி கொள்ளவேண்டும் என்ற தன் மனைவியின் ஆசையையும், கோபத்தில் தான் தன் மகனையும், மனைவியையும், வீட்டை விட்டே வெளியேற சொன்ன விஷயம் வரை, அவனிடம் விவரமாக சொன்னார்.
"ப்ச்ச்ச்... ம்ம்ம்ம்... நம்ம சம்பத்தா இப்படி பண்ணிட்டான்... என்னால நம்ப முடியலியே?" ரகு தன் தாடையை சொறிந்து கொண்டிருந்தான். உள்ளுக்குள் அவனுக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது. ஆனாலும் பொறுமை... பொறுமை என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். இந்த பக்கம் பழைய உறவு; அந்தப் பக்கம் புது உறவு... எதை விடுவது? எதை சேர்த்துக்கொள்வது...?
"ரகு, இந்த பிரச்சனையை நீதான் காதும் காதும் வெச்ச மாதிரி ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்... எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை... என் பிள்ளையால, அவன் பண்ண முட்டாள்தனமான காரியத்தால, வெள்ளிக்கிழமை நடக்க இருக்கற நிச்சயத்தார்த்தமோ, சுகன்யா கல்யாணமோ எந்தவிதத்திலேயும் பாதிக்கப்படக்கூடாது..." நல்லசிவம் உண்மையான மனவருத்தத்துடனும், குற்ற உணர்வுடனும் பேசி முடித்து, சட்டென எழுந்து நின்று, ரகுவின் கைகளை, மன்னிப்பு கேட்க்கும் பாவனையில் மீண்டும் ஒரு முறை பிடித்துக்கொண்டார்.
"மாமா... ஒண்ணு மட்டு நிச்சயம். சம்பத் இப்போதைக்கு வேற யார்கிட்டவும் தான் செய்ததை பேசமாட்டான்... நீங்க மொதல்ல நேரா வீட்டுக்குப் போய், ராணி அக்கா, இந்த விஷயத்தை பத்தி வேற யார்கிட்டவும் பேசாம பாத்துக்குங்க. மீதியை நான் மடல் பண்ணிக்கறேன்." ரகு விறு விறுவென தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
'ஆண்டவா... நான் யாருக்கும் இது வரைக்கும் தீங்கு நெனைச்சதில்லே.. என் புள்ளையால அந்த பொண்ணோட பேருக்கு எந்த கெட்ட பேரும் வந்துடக்கூடாது...' நல்லசிவம்... சுவாமிநாதனை வேண்டிக்கொண்டார். கோவில் இருக்கும் திசை நோக்கி கையெடுத்து கும்பிட்டவர், மெதுவாக வீடு திரும்ப ஆரம்பித்தார்.
தொடரும்...

அடுத்த பாகம் எங்கே
ReplyDelete3 நாள் ஆச்சு
ReplyDelete